நிழல்களோடு பேசுவோம்



விடுதிகளில் வாழ்பவர்கள் மனிதர்கள் மூன்று ரகம். வீடுகளில் வசிப்பவர்கள், விடுதிகளில் வசிப்பவர்கள், திறந்தவெளிகளில் வசிப்பவர்கள். ஆனால், வீடுகளில் வசிப்பவர்கள் பற்றி சொல்லப்பட்ட அளவு விடுதிகளில் வசிப்பவர்களைப் பற்றியோ வீடற்று தெருக்களில் வசிப்பவர்களைப் பற்றியோ சொல்லப்பட்டதில்லை. வீடு திரும்புதலைப் பற்றி எழுதாத எழுத்தாளனே இல்லை. ஆனால் வீடற்றவர்கள் திரும்பிச் செல்லும் இடங்களைப் பற்றித்தான் நான் எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

குறிப்பாக விடுதிகளில் வாழ்பவர்களின் உலகம் என்பது மிகவும் தனிமையானது. வாழ்க்கைப் பயணத்தில் விடுதிகளில் வாழ்வதை ‘ஒரு சிறிய இடைவேளை’ என்று தான் எல்லோரும் நினைக்கி றார்கள். ஆனால் விடுதிகள் பலரையும் நீண்டகாலம் தங்கள் பிடியில் வைத்துக் கொள்கின்றன.

‘பல வருடங்கள் நாம் ஒரு சிறிய அறையில்தான் இருந்தோம்’ என்பதை திடீரென பிறகு அதிர்ச்சியுடன் நினைத்துப் பார்க்கிறார்கள். அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவலில் ஒரு இடம் வரும். ஒரு பெண், பெண்கள் விடுதியில் இருக்கும் தன் சகோதரியைப் பார்ப்பதற்காக வருவாள். சகோதரியைப் பார்த்ததும் கட்டி அணைத்துக்கொள்வாள். அப்போது அந்தப் பெண் கூறுவாள்... ‘இங்கே இப்படியெல்லாம் செய்யக்கூடாது. அதை வேறுவிதமாகப் பார்ப்பார்கள்’ என்று. விடுதி யில் வாழ்பவர்களுடைய எல்லையற்ற தனிமையுணர்ச்சிக்கு இது ஒரு உதாரணம்.

ஆனால் வீடுகளின் அழுத்தத்தால் துன்பங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளானவர்கள், விடுதிகளில் வாழ்வதை மிகவும் சுதந்திரமாக உணரவும் செய்கிறார்கள். வீடுகளில் இருப்பவர்கள் விடுதிக்குச் செல்ல விரும்புவதும் விடுதிகளில் இருப்பவர்கள் வீட்டிற்குச் செல்ல விரும்புவதும் ஒரு விசித்திரமான இந்திய மனநிலை. ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கும் குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஏதோ ஒரு இனம் புரியாத துக்கம் மனதில் படரும். அத்தகைய பள்ளிகளுக்கு உரையாற்றச் சென்றிருக்கிறேன். சில முறை சாப்பாட்டு வேளையில் மாணவர்களோடு அமர்ந்து
உணவருந்தியிருக்கிறேன்.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரிசையாக தட்டுக்களை சாப்பாட்டிற்காக எடுத்து வரும் காட்சி ஒரு இனம் புரியாத சங்கட உணர்வையே தந்திருக்கிறது. வீடுகளில் இந்தக் குழந்தைகள் எவ்வளவு தன்னிச்சையாக, சுதந்திரமாக உணவருந்துவார்கள் என்பதை அப்போது நினைத்துக் கொள்வேன். கூட்டம் கூட்டமாகக் குறிப்பிட்ட நேரத்தில் எழுப்பி விடப்பட்டு, குளித்து, உணவருந்தி, படித்து, மீண்டும் அதேபோன்ற இன்னொரு நாளை நோக்கி கூட்டமாகத் தூங்க அனுப்பப்படும் இந்த நிலை அந்தக் குழந்தைகளின் மன அமைப்பை எங்கோ கடுமையாக சீர்குலைக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

 இது, இளம் பருவத்தின் சுதந்திரமான பல இயல்புகளை முனை மழுங்கச் செய்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த ஹாஸ்டல் முறை, நமது நவீன கல்வி வணிகம் உருவாக்கிய கொடூரங்களில் ஒன்று. விடுமுறை முடிந்து ஹாஸ்டலுக்குத் திரும்பும் குழந்தைகள் தங்கள் கண்ணீரைத் துடைத்துக்கொள்வதற்காக அவ்வளவு போராடுவதைக் கண்டிருக்கிறேன். வீட்டிலிருப்பவர்கள் தங்களைப் பார்க்க வரும் தினத்திற்காக அவர்கள் ஏங்கிப் போகும் காட்சியை விவரிக்க முடியாது.

நகரத்திற்கு பிழைப்பு தேடி வருபவர்கள், ஒரு ஆலமரத்தில் அடையும் நூற்றுக்கணக்கான வௌவால்களைப் போல மேன்ஷன்களைத் தேடி வந்து அடைகிறார்கள். மேன்ஷன் என்பது ஒரு அறையல்ல. ஒரு கட்டில் மட்டுமே. அது வெறுமனே ஒருவன் தூங்குவதற்கான இடம்.

மீதி இருக்கிற அவனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் மேன்ஷன்களின் கட்டிடத்திற்கே வெளியேதான் நிகழ்ந்தாக வேண்டும். நீண்ட வருடங்களாக இப்படி வாழும் பல நண்பர்களை எனக்குத் தெரியும். அவர்களது வாழ்க்கை ஒரு வேலையோடு, அல்லது ஒரு வேலை தேடுகிற போராட்டத்தோடு மட்டுமே பிணைக்கப்பட்டிருக்கும். மேன்ஷன்களுடைய சுவர்கள் தங்களை ஒரு பைசாசத்தைப் போல கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதை அவர்கள் உணர்ந்ததேயில்லை.

வீடு என்கிற ஒரு அமைப்பு தரும் நிர்பந்தங்களை, ஒரு மனிதனிடம் அவை முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைந்தவர்கள் மேன்ஷன்களில் தங்களை மறைத்துக்கொள்கிறார்கள். மனைவி, குழந்தைகளை உதறிவிட்டு மேன்ஷன்களில் போய் வாழ்பவர்களை எனக்குத் தெரியும். அதேபோல மேன்ஷன்களிலிருந்து வெளியேறக்கூடிய பொருளாதார சூழ்நிலை இருந்தும்கூட பிடிவாதமாக அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு அங்கேயே இருப்பவர்களும் இருக்கிறார்கள். மனித மனம் விசித்திரமானது. எந்த இடத்தில் அது தனக்கு சௌகரியத்தையும் பாதுகாப்பையும் உணரும் என்று யாருமே அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

பொதுவாக வீடுகள் அல்லாத வாழிடம் என்றால் எல்லோருக்கும் மனதில் வரும் பிம்பம் அனாதை விடுதிகளும், முதியோர் இல்லங்களும்தான். உண்மை என்னவென்றால் மனிதர்கள் வீடுகளுக்கு வெளியே வாழும் பெரும்பான்மையான இடங்கள் அனாதை விடுதிகள் போன்றோ முதியோர் இல்லங்கள் போன்றோ தனிமையுணர்ச்சியால் பீடிக்கப்பட்டிருக்கின்றன.

மேலே குறிப்பிட்ட இடங்களையெல்லாம்விட மனிதர்களை விசித்திரமான எண்ணங்களால் நிரம்பச் செய்வது நகரங்களின் தங்கும் விடுதிகள்தான். ஏதேனும் ஒரு நாளையோ இரு நாளையோ செலவிடுவதற்காக மனிதர்கள் தங்கிச் செல்லும் இந்த விடுதிகள் ஒரே சமயத்தில் ஒரு அந்தரங்கமான உணர்வையும் ஒரு அந்நியமான உணர்வையும் ஏற்படுத்துகின்றன. விடுதிகளில் தற்கொலை செய்துகொள்பவர்கள் பற்றி ஒருமுறை நீண்ட கவிதை ஒன்றை எழுதினேன்.

மனிதர்கள் ஏன் இறப்பதற்கு விடுதிகளைத் தேடி வருகிறார்கள் என்பதைத்தான் அந்தக் கவிதை நெடுக கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். பாலியல் சார்ந்த குற்றங்கள் தொடர்பான சித்தரிப்புகள், திரைப்படங்களில் பெரும்பாலும் ஏன் தங்கும் விடுதிகளோடு இணைத்து காட்டப்படுகின்றன என்று யோசித்திருக்கிறேன். தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் விதவிதமான தங்கும் விடுதிகளில் இருந்திருக்கிறேன். நட்சத்திர விடுதிகளிலிருந்து மிகச் சாதாரணமான விடுதிகள் வரை என் இரவுகளையும் பகல்களையும் செலவிட்டிருக்கிறேன். நட்சத்திர அந்தஸ்துள்ள தங்கும் விடுதிகளைத் தவிர பெரும்பாலான சிறுநகர, பெருநகர லாட்ஜ்கள் ‘ஒரு வாழிடம்’ என்று சொல்வதற்கே தகுதியற்றவை.

 அந்த லாட்ஜ்களின் அறையைத் திறந்துகொண்டு உள்ளே போனதும் ஒரு மோசமான ஈர வாடை நம்மைத் தாக்கும். அந்த வாடையைப் போக்குவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் மலிவான ரூம் ஃப்ரெஷ்னர், சூழலை மேலும் மோசமானதாக்கும். ஜன்னல்கள் இல்லாமல் அந்த அறை முழுவதும் கண்ணாடியால் அடைக்கப்பட்டிருக்கும். ஏ.சி. ரூம் என்று பெயரிடப்பட்ட அறையில் ஒரு பழைய மஞ்சள் கறை படிந்த குளிர்சாதன இயந்திரம் தடதடவென ஓடும். பெரும்பாலும் அதற்கு ரிமோட் இருக்காது.

ஒரு சிறிய டி.வி பெட்டியில் புள்ளி புள்ளியாக காட்சிகள் ஓடும். ஆகக் கொடூரமான அனுபவம் அதன் கழிவறைகளில்தான் இருக்கும். நிறைய லாட்ஜ்களில் காலையில் மட்டும்தான் குளிக்க வெந்நீர் கிடைக்கும். மனிதர்களுடைய அவசரங்களைப் பயன்படுத்தும் ஒரு கொடூரமான சுரண்டல் இது. இத்தனைக்கும் இதுபோன்ற லாட்ஜ்களில் நாள் வாடகை ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்கள். அதற்கான எந்த மதிப்பும் இல்லாதவை அந்த இடங்கள்.

இவற்றை நேர் செய்வதற்கான எந்தக் கண்காணிப்பும் நம் அமைப்பில் இல்லை. வீடுகளுக்கு வெளியே ஒரு பிரமாண்டமான உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் எல்லாவிதமான மனநெருக்கடி களோடும் அசௌகரி யங்களோடும் அந்த உலகத்தில் மிஞ்சியிருக்கும் ஒரு துளி சுதந்திரத்தை புசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

(பேசலாம்...)

மனுஷ்ய புத்திரன் பதில்கள்

‘‘இந்தியாவில் ராணுவப் புரட்சிக்கு இடமில்லை’’ என்கிறாரே பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி?
- டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.
இப்போது சம்பந்தமில்லாமல் ஏன் இந்தப் பேச்சு? சந்தேகமாக இருக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டது என்று அன்னா ஹசாரே கூறியிருக்கிறாரே...
- ஜி.மஞ்சரி,
கிருஷ்ணகிரி
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கி விட்டாரே என்ற ஆத்திரம்.
எது நம்பிக்கை? எது மூட நம்பிக்கை?
- மு.மதிவாணன், அரூர்
வித்தியாசம் எதுவும் இல்லை. ஒரு நம்பிக்கை நிறைவேறுவதையும் நிறைவேறாததையும் பொறுத்தது அது.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிட தான் விரும்பவில்லை என்றெல்லாம் அப்போதைய ஜனாதிபதி ஆர்.கே.நாராயணனுக்கு கடிதம் எழுதிய சோனியா காந்தி இப்போது ஏன் மாறிப் போய்விட்டார்?
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.
கருணையும் தண்டனையும் அரசியல் நாணயத்தின் பூவா தலையா விளையாட்டு போல் ஆகிவிட்டன.
நானும் ஒரு நாள் பிரதமர் ஆவேன் என்கிறாரே லாலு பிரசாத் யாதவ்?
- எஸ்.ரவி, புதுச்சேரி.
இதுவரை பிரதமர்களாக இருந்த பலரது தகுதிகளை எடுத்துக்கொண்டால், லாலுவுக்கு அப்படிக் கனவு காண எல்லா தகுதியும் இருக்கிறது.

நெஞ்சில் நின்ற வரிகள்

டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா இணைந்து பாடிய எத்தனையோ பாடல்களில் தமிழர்களின் வாழ்வில் அந்தரங்க தருணங்கள் எப்படி ததும்பினவோ, அதேபோல பின்னர் எஸ்.பி.பி - ஜானகி ஜோடியின் குரல் இன்னொரு தலைமுறையின் காதலை நெஞ்சின் ஆழத்தில் கரையச் செய்தது. இருவரும் இணைந்து பாடிய பல பாடல்களை ‘தமிழ்த் திரையின் பொற்காலம்’ என்றுதான் சொல்ல வேண்டும். ‘உதயகீதம்’ படத்தில் இடம்பெற்ற ‘பாடு நிலாவே’ பாடலைக் கேட்கும்போதெல்லாம் காதல் ஏக்கத்தின் குரலை இவ்வளவு மென்மையின் இதம் கூடி இழையச் செய்ய முடியுமா என தவித்துப் போயிருக்கிறேன். ஒரு காலத்தில் புதுக்கவிதையில் கோலோச்சிய மு.மேத்தாவின் சிறந்த காதல் கவிதை இதுதான்.
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்...
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதானபோதும் கை சேரவேண்டும்
உன்னோடு வாழும்
ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே

எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்

நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் என்ற பெயரில் எழுதும் சுரேசுவின் ஃபேஸ்புக் பதிவுகள் முற்போக்கானவை மட்டுமல்ல, மிகக் கூர்மையான அங்கதத்தை வெளிப்படுத்துபவை. அவரது சமீபத்திய இரண்டு பதிவுகள்:

*ஸ்கூல் படிக்கும்போது கக்கூஸ் சுவத்தில கிசுகிசு எழுதி வச்சிருப்பானுக. நான் படித்தது ஆண்கள் பள்ளி என்பதால் பொதுவாக வாத்தியார்களை மட்டமாகத் திட்டியே இருக்கும். 6 மாசத்துக்கு ஒரு தடவை அத வெள்ளை அடிச்சு சுத்தப்படுத்துவாங்க. எழுதுறவன் எப்பவாவதுதான் மாட்டுவான். அதுவரைக்கும் அங்க ஏதாவது செய்தி இருந்துக்கிட்டே இருக்கும். சிறுநீர் கழிக்கும் நேரத்தில் அதைப் படிக்க சில சமயம் எங்களுக்கும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்..

ஆனால், ‘அடிக்கடி சுவத்துக்கு வெள்ளை அடித்து என்னோட கருத்துரிமையைப் பறிக்கிறார்கள்’ என எழுதுனவன் கடைசிவரைக்கும் கேஸ் போடவே இல்லை. அவனுக்கு சட்டவிதிகள் பற்றி அவ்வளவு தெளிவு அந்த வயதில் இல்லை என்றே எண்ணுகிறேன்.
* இன்று கேப்டிரியாவில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது, உள்ளே வந்த ஒரு பெண்ணின் ஹேண்ட்பேக் தவறி கீழே விழுந்து, உள்ளே இருந்த மேக்கப் சாதனங்கள் அனைத்தும் வெளியே கொட்டிவிட்டன. (90 சதவீதம் மேக்கப் சாதனம் மட்டும்தான் இருந்தன!) இது ஒரு சாதாரண நிகழ்வு... ஆனால் அந்தப் பெண்ணின் முகத்தில் பார்த்தது, ‘தேவர் மகன்’ படத்தில பஞ்சாயத்து சீனுக்குப் பிறகு சிவாஜி காட்டியதைக் காட்டிலும் அதிகமான அவமான உணர்ச்சி.
தான் இவ்வளவு மேக்கப் சாதனம் வைத்திருக்கிறோம் என எந்தப் பெண்ணும் வெளிக்காட்டிக்கொள்ள விரும்புவதில்லை போலும்...

மனுஷ்ய புத்திரன்