சாயி



ஷீரடி பாபாவின் புனித சரிதம்

உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும். ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதைப் போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்.

 பாபா மொழி

சிவராத்திரி அன்று தாஸ்கணு ஷீரடியில் இருந்தார். சிவராத்திரி நிமித்தம் அங்கிருந்து மூன்று மைல் தூரத்திலிருந்த கோதாவரிக்குப் போய் குளிக்க நினைத்தார். எனவே, பாபாவைப் பார்த்து, ‘‘பாபா, என் மனதில் ஒரு ஆசை உண்டாகியிருக்கு’’ என்றார்.
‘‘என்ன சொல்?’’
‘‘இன்று சிவராத்திரி!’’

‘‘சரி, அதற்கென்ன?’’ பாபா, தாஸ்கணுவை தன் கூர்மையான கண்களால் பார்த்தார்.
‘‘கோதாவரிக்குப் போய், கங்காஸ்நானம் செய்யலாம் எனத் தோன்றியது.’’
‘‘நான் இங்கு இருக்கும்போது, வேறொரு இடத்திற்குப் போக வேண்டிய அவசியம் என்ன கணு?’’ - பாபா சகஜமாகக் கேட்டார்.
‘‘அப்படியென்றால்?’’

‘‘அப்பனே, கங்கை என் காலடியில் இருக்கிறார். இதற்காக நீ அவ்வளவு தூரம் போக வேண்டாம்!’’
உடனே தாஸ்கணு மனதில் பல எண்ண ஓட்டங்கள்... ‘சாயிபாபா சாட்சாத் ஈஸ்வரனும் நாராயணனும் ஆவார். நாராயணனுடைய காலடியிலிருந்துதான் கங்கை தோன்றுகிறாள் என்று தெரியும். ஆனாலும், நேரடியாக கங்காஸ்நானம் செய்வது போன்ற சுகம் எப்படி இதில் கிடைக்கும்?’

‘‘கிடைக்கும்!’’ - அவருடைய மன ஓட்டத்தைக் கண்டறிந்து சாயி சொன்னார். ‘‘இப்படி வா, என் காலடியில் உட்கார். உன் உள்ளங்கையைப் பிடி!’’
தாஸ்கணு அவர் சொன்னபடி அவர் கால் விரல் பக்கம் உள்ளங்கையைப் பிடித்தார். என்ன ஆச்சரியம்?
பாபாவின் இரண்டு கால் கட்டை விரல் நுனியிலிருந்தும் ஜலப்பிரவாகம் பீறிட்டு எழுந்தது. சுத்தமான, பளிங்கு போன்ற நீர் அவர் உள்ளங்கையில் விழுந்தது.
‘‘கணு, வெறும் கங்கைதானா? யமுனாவையும் பிடித்துக்கொள்!’’ - பாபா சிரித்துக் கொண்டே சொன்னார்.

தாஸ்கணு பிரமிப்பில் ஆழ்ந்தார். பாபாவின் மகாத்மியத்தை அவர் நேரடியாகப் பார்த்தார். அவருடைய உள்ளங்கை நிறைந்தது. அடுத்த கணம் கங்கை, யமுனை நதிகள் மறைந்தன.
மிகுந்த சந்தோஷத்துடன், பக்தி சிரத்தையோடு தாஸ்கணு அந்தத் தீர்த்தத்தை தன் தலையில் தெளித்துக் கொண்டார். அவருடைய கங்கை ஸ்நானம் பூர்த்தியாயிற்று. தலையிலிருந்து வழிந்த நீர், உடம்பெல்லாம் ஓடியது. நன்றியுடன் பாபாவைக் குனிந்து வணங்கினார்.

குலாப் என்பவன் ஒரு பிடிவாத மதவாதி. தீவிர மத நம்பிக்கைக்காரன். பாபாவை அவன் முஸ்லிம் என்றே கருதியதால், மசூதிக்கு வந்து கொண்டிருந்தான். ஒருநாள் அவன் அழகான பூமாலையுடன் பாபாவிடம் வந்து, ‘‘பாபா, இந்தப் பூமாலையை நானே கட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். இதை மசூதியின் வளைவிற்குப் போடட்டுமா?’’ என்றான்.
‘‘வளைவிற்கு மாலை ஒன்றும் தேவையில்லை...’’
‘‘பின்னே?’’

‘‘அங்கே அனுமன் கோயில் இருக்கிறது. அங்கு போய், உள்ளேயிருக்கும் அனுமனின் கழுத்தில் போடு!’’
தீவிர மதவாதியான குலாப், இதைக் கேட்டு வியப்பும் கோபமும் அடைந்தான்.
‘‘சேச்சே...’’
‘‘ஏன்?’’

‘‘நான் ஒரு முஸ்லிம். இந்துக் கடவுளின் மீது மாலை போட மாட்டேன்...’’
இதைக் கேட்டு பாபா எழுந்தார். ‘‘அடேய் குலாப், உன் பேரே குலாப் (ரோஜா). ரோஜாப்பூ இந்துவா, முஸ்லிமா?’’ எனக் கோபத்துடன் கேட்டார்.
‘‘ம்... ம்... வந்து... வந்து...’’

‘‘இந்த பூமி இந்துவா, முஸ்லிமா? இந்த வானம் - எதைப் பார்த்து நீ தினமும் தொழுகை செய்கிறாயோ - இது முஸ்லிமா, இந்துவா?’’
‘‘........’’
‘‘ஏன் பேச மாட்டேன் என்கிறாய்? நாக்கு ஒட்டிக்கொண்டு விட்டதா? நினைவில் கொள், பெயர்கள் வெவ்வேறாக இருக்கும். ஆனால், மதம் எல்லாம் ஒன்றுதான். இந்துக்களுக்கு முப்பத்திரண்டு பற்கள், உனக்கு என்ன நாற்பத்திரண்டா? எதெது நல்லதாக இருக்கிறதோ, எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும். ராம் - ரஹீம், மொஹம்மத் என்ன, மகாவீரர் என்ன, அனுமார் என்ன, ஹாஜி என்ன? எல்லாம் ஒன்றுதான். காற்று, நதி, கடல், மழை இவை யாவும் இந்துவோ முஸ்லிமோ அல்ல என்றால், ராம் ரஹீம் இடையே எதற்காகப் பிளவுபடுத்துகிறீர்கள்? மூர்க்கத்தனத்தை விடு... போ அனுமாரிடம்... போடு அவருக்கு மாலை. அவருடைய கண்களில் நீ அல்லாவின் ஆசீர்வாதத்தைக் காண்பாய்!’’

குலாபின் கண்கள் திறந்தன. அவன் பாபாவிடம் மன்னிப்பு கேட்டான்.
பாபா அமைதியாக இருந்தார்.
குலாப் மாருதி கோயிலுக்கு வந்து, சந்தோஷத்துடனும் பக்தியுடனும் அனுமனின் கழுத்தில் பூமாலையைப் போட்டான். அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது; அதைப் பார்த்துக்கொண்டிருந்த இந்து பூசாரியின் கண்களிலிருந்தும்...

படே பாபா என்னும் பக்கீர் பாபா இன்று விசேஷ ஆனந்தத்தில் இருந்தார். அவருடைய கோதுமை நிறமுடைய முகம் மலர்ந்திருந்தது. அவரோடு ஒருவன் இருந்தான். அவனை அழைத்துக்கொண்டு பாபாவைப் பார்க்க வந்திருந்தார். கூட வந்தவன் மட்டும் குழம்பி இருந்தான். அவன் முஸ்லிம் உடையில் இருந்தான். அதில் அவன் சங்கடத்துடன் காணப்பட்டான்.
‘‘உட்கார் படே பாபா’’ என்ற சாயி, ‘‘இவர் யார்... பார்ப்பதற்கு ஒரு மாதிரியாகத் தெரிகிறாரே?’’ என விசாரித்தார்.

பாபாவின் எதிர்பாராத இந்தக் கேள்வி, படே பாபாவை திக்குமுக்காட வைத்தது.
‘‘பாபா, நான் ஒரு காரியமாக இவனை இங்கு அழைத்து வந்திருக்கிறேன்!’’
‘‘எதற்காக?’’
‘‘இவன், முதலில் ஒரு இந்துவாக இருந்தான்!’’
‘‘இப்பொழுது?’’
‘‘முஸ்லிம்’’

‘‘அதெப்படி?’’ - பாபா கடுமையான குரலில் கேட்டார்.
‘‘நான் சொன்னதற்கு இணங்கி, அவன் முஸ்லிமாக மாறி விட்டான்!’’
‘‘இது சரியானதல்ல. நீங்களெல்லாம் மதத்தின் உள்ளேயிருக்கும் மனிதனையும், மனிதர்க்குள்ளே இருக்கும் தன்னிலைத் தத்துவத்தையும் எப்பொழுதுதான் அறியப் போகிறீர்கள்?’’ என்று பாபா மிகவும் கோபமடைந்து சொல்லி, அந்த மதம் மாறியவனைப் பார்த்து, ‘‘எழுந்திரு, இப்படி வா’’ என்று கூறினார்.

‘‘உன்னைப் போன்ற அறியாதவர்கள் எந்த மதத்திற்குச் சென்றாலும் என்ன திருப்பமும் ஏற்பட்டுவிடப் போகிறது? நீயும் மாறப்போவதில்லை. மதமும் மாறப்போவதில்லை. அப்படியிருக்க எதற்காக இப்படிக் கட்டாயப்படுத்த வேண்டும்? எவன் ஒருவன் மதம் என்கிற ஏணியின் வழியாக ஏறி, கடவுளின் சாம்ராஜ்ஜியத்தில் நுழைகிறானோ, அவன்தான் மதத்தைப் பற்றி அறிந்துகொள்வான். யார் வெறும் ஏணியை மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அவன் என்றைக்கு அதில் ஏறி, கடவுளை அடைவான்?’’

பாபா இரண்டடி முன்னால் சென்று அவன் கன்னத்தில் பலமாக அடித்து, ‘‘நீ பெரிய ஆளாகி விட்டாய்’’ என்றார்.
அவன் பின்னால் நகர்ந்தான். அவனுடைய கன்னங்கள் சிவந்துவிட்டன. படே பாபா அதிர்ந்து போனார். அவர் நடுங்கிக்கொண்டிருந்தார்.
‘‘படே பாபா, நீ இப்படிப்பட்ட விவகாரத்தை எடுத்துக்கொண்டு திரும்பவும் என்னுடைய துவாரகாமாயிற்குள் வராதே. நான் உன்னிடத்தில் இறை தூதரைக் காண்கிறேன். அந்தப் புனிதத்தை நீ காப்பாற்றிக் கொள்’’ என்றார் சாய்பாபா.

படே பாபா சரியென்று தலையை ஆட்டினார். இன்று அவருக்கு மதத்தின் உண்மை நிலை புரிந்தது. அவர் ஆழ்ந்த பக்தியுடன் தன்னுடைய நடுங்கும் கரங்களைக் கூப்பி வணங்கினார்.
பாபா இன்று அதிக உற்சாகத்தில் இருந்தார்.
வழக்கமான கூட்டம் இருந்தது. அவர்களுடன் சேர்ந்து பாபா லேண்டியிலிருந்து திரும்பும்போது, ஒரு ஆட்டிடையன் தன்னுடைய ஆடுகளுடன் போய்க்கொண்டிருந்தான். அவன் பாபாவைப் பார்த்ததும் வணங்கினான்.

‘‘உன் பெயர் என்னப்பா?’’ பாபா குதூகலத்துடன் அவனைக் கேட்டார்.
‘‘கய்யப்பா!’’
‘‘கய்யப்பா, எவ்வளவு ஆடுகள் இருக்கு?’’
‘‘ஜி... நூறு இருக்கலாம்!’’
‘‘எனக்கு ஒரு ஆடு வேணுமே...’’

‘‘எடுத்துக் கொள்ளுங்கள் சாமி!’’
‘‘எவ்வளவு?’’
‘‘உங்களிடம் பணம் வாங்குவேனா? உங்களுக்கு எந்த ஆடு வேணுமோ, எடுத்துக் கொள்ளுங்கள்!’’
‘‘சரி’’ என்ற பாபா, நல்ல கொழுத்த ஆட்டை எடுத்துக்கொண்டார். அவன் வேண்டாம் வேண்டாம் என்றாலும், இரண்டு மடங்கு விலையைக் கொடுத்தார்.
‘‘தாத்யா, இந்த ஆட்டைப் பிடித்துக்கொண்டு துவாரகமாயிக்குப் போ...’’

‘‘நீங்கள் வரவில்லையா?’’
‘‘வருகிறேன்... தாத்யா...’’
‘‘என்ன?’’
‘‘போ... முல்லாவையும் வரச்சொல்லு, ஆட்டை வெட்ட...’’
‘‘சரி...’’ தாத்யா கிளம்பிப்போனான்.

அவன் ஆட்டைப் பள்ளிவாசலுக்கு ஓட்டிப்போனான்.
பிறகு பாபா கடைக்கு வந்தார். அங்கு அரிசி, உப்பு, மிளகாய், சீரகம், கடுகு, மிளகு, தேங்காய், கசகசா, எண்ணெய் எல்லாம் வாங்கினார். அங்கிருந்து மசூதிப் பக்கம் வந்தார். முல்லா கத்தியுடன் நின்றிருந்தான். அவன் பாபாவைப் பார்த்ததும் வணங்கினான். ‘‘பாத்யா சொல்லிவிட்டு வெட்டு’’ என பாபா சொன்னதும், அவன் ஆட்டை ஓட்டிக் கொண்டு, மசூதிக்கு வெளியில் கொஞ்ச தூரத்திற்குச் சென்றான். அவனுடைய இரண்டு பையன்களும் உதவிக்கு வந்திருந்தார்கள். மூவரும் ஆட்டை வெட்டுவதில் உற்சாகமாக இருந்தார்கள். காரணம், அது பாபாவிற்குச் செய்யும் சேவையாயிற்றே!
‘‘பாபா, எதற்காக பாத்யா ஓதச் சொன்னீர்கள்?’’ என தாத்யா வினவினார்.

‘‘பாத்யா என்றால் ஸ்தோத்திரம். அதாவது சாகும் ஆத்மாவிற்கு சாந்தி கிடைக்கணும் என்று குரானில் ஆரம்ப பாகத்தில் கூறப்பட்டுள்ளது. சரி, அம்மிக் குழவியை எடுத்து வா!’’
‘‘பாபா, நான் மசாலா அரைக்கட்டுமா?’’
‘‘வேண்டாம்!’’

தாத்யா பாபாவிடம் அம்மிக் குழவியை வைத்தார். பாபா, தான் கடையில் வாங்கிய மசாலா சாமான்களை வைத்து, தானே அரைத்தார். எல்லா காரியங்களையும் தானே செய்வதில் ஆனந்தமடைந்தார். அதற்குள் முல்லா, மாமிசத்தை சுத்தம் செய்து, வெட்டி, ஒரு கூடையில் கொண்டு வந்தார். அந்தச் சிகப்புத் துண்டங்களைப் பார்த்து பாபா மகிழ்ந்தார். அதற்கு மஞ்சளும் மசாலாவும் தடவினார். பிறகு ஒரு பெரிய அண்டாவை எடுத்தார். முற்றத்தில் தயாராக வைத்திருந்த அடுப்பின் மீது அதை ஏற்றினார். அதில் அரிசியைக் கொட்டினார். தண்ணீர் விட்டார். உப்பு போட்டார். பிறகு வெட்டின மாமிசத் துண்டுகளைப் போட்டார்.

அடுப்பில் விறகுகளைச் செருகி, தகதகவென எரிய விட்டார். அடுப்பின் பக்கத்திலேயே உட்கார்ந்து விட்டார். பல பேர் அந்த வேலையைச் செய்ய வந்தும், பாபா அவர்களை அன்புடன் தடுத்துவிட்டார்.
தண்ணீர் கொதித்து சாதம் வெந்து கொண்டிருக்க, வெளியே மக்கள் கூட்டம் தெரிந்தது. அதைப் பார்த்தவுடன் பாபா சந்தோஷமடைந்தார். அவர்களுக்காகத்தானே சாப்பாட்டைத் தயார் செய்து கொண்டிருந்தார் பாபா. இன்று புலால் உண்பவர்களுக்காக அவரே பிரியாணி செய்வதில் ஈடுபட்டிருந்தார். பாபாவின் கையால் செய்த புலாலைச் சாப்பிட ஆவலுடன் காத்திருந்த மக்கள், இன்னொரு விந்தையைக் கண்டும் ஆச்சரியப்பட்டார்கள்.

மாமிச துண்டுகள் சரியாக வெந்ததா என்று பார்க்க, அதை மேலும் கீழும் சாதத்துடன் கிளற, பாபா துடுப்பையோ, நீண்ட கரண்டியையோ உபயோகிக்கவில்லை. மாறாக, தன் கையையே அந்தக் கொதிக்கும் அண்டாவிற்குள் விட்டு, நன்றாகத் துழாவி விட்டுக்கொண்டிருந்தார்! சிறிது நேரத்தில் பிரியாணி தயாரானது. பாபா எல்லோரையும் வரிசையாக உட்காரச் சொன்னார். இலை பரிமாறப்பட்டது. எல்லோருக்கும் சூடாக பிரியாணியை பாபாவே பரிமாறினார்.

பாபாவிற்கு அன்னதானம் செய்வதில் மிகவும் விருப்பம். யார் யாருக்கு எம்மாதிரி சாப்பிடப் பிடிக்கும் என்பதை அறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் சமையல் செய்து, தானம் அளிப்பார். ஆனால், அவர் ருசியாக சாப்பிடுவதை எப்பொழுதோ விட்டுவிட்டார். பிறரை சாப்பிட வைத்து, திருப்திப்படுத்துவதிலேயே ஆனந்தமடைந்தார். சாட்சாத் சாயியே சமையல் செய்து, அவர் பரிமாறிய உணவைச் சாப்பிட எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்!

(தொடரும்...)

‘‘நீங்களெல்லாம் மதத்தின் உள்ளேயிருக்கும் மனிதனையும், மனிதர்க்குள்ளே இருக்கும் தன்னிலைத் தத்துவத்தையும் எப்பொழுதுதான் அறியப் போகிறீர்கள்?’’
‘‘எவன் ஒருவன் மதம் என்கிற ஏணியின் வழியாக ஏறி, கடவுளின் சாம்ராஜ்ஜியத்தில் நுழைகிறானோ, அவன்தான் மதத்தைப் பற்றி அறிந்துகொள்வான்.’’


வினோத் கெய்க்வாட்

தமிழில்: பி.ஆர்.ராஜாராம்