+2 கம்ப்யூட்டர் சயின்ஸ் சென்டம் வாங்க டிப்ஸ்



கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் போக விரும்பும் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் சப்ஜெக்ட், கம்ப்யூட்டர் சயின்ஸ். ஆனால், ஏனோ ஒவ்வொரு ஆண்டும் இதில் சென்டம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது.

காரணம், ‘ஒன் மார்க் கேள்விகள்’ எனச் சுட்டிக் காட்டுகிறார்கள் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள். அதோடு மாணவர்களின் அலட்சியத்தையும் குறிப்பிடுகிறார்கள். ‘‘ஒரு மதிப்பெண் கேள்விகளை மாணவர்கள் கவனமாகக் கையாள்வதில்லை’’ என்கிறார்கள் அவர்கள். இதில் சென்டம் எடுக்க என்ன வழி? எளிதான டிப்ஸ்களைத் தருகிறார் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜாகுமார்.

* மற்ற அறிவியல் பாடங்களைப் போலவே இதிலும் மொத்தம் 150 மதிப்பெண்களுக்குத்தான் தேர்வு. ஒரு மார்க் 75, இரண்டு மார்க் 40, ஐந்து மார்க் 35 என்ற வடிவில் கேள்விகள் இருக்கும். இதில் ஒரு மதிப்பெண்கள் மட்டுமே 50 சதவீதம் மதிப்பெண்களை அள்ளித் தருகிறது. மொத்தமுள்ள 21 பாடங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு மட்டும் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் பதிலளிக்க வேண்டும். இதில் முழு மதிப்பெண்களை எடுக்க சிறந்த வழி, பழைய கேள்வித்தாள்களை
நன்றாகப் புரட்டுவதுதான்.


* இரண்டு தொகுதி புத்தகங்களிலும் புக் பேக் கேள்விகள் குறைவே. மொத்தமாக 75 ஒரு மார்க் கேள்விகளே உள்ளன. இவற்றைப் படித்தால் குறைந்தது 25 கேள்விகளுக்கு பதிலளித்து
விடலாம். மீதி வினாக்களுக்கு போல்டாக உள்ள குறிப்புகளையும், அன்றாடம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வார்த்தைகளையும் படித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, காப்பி, பேஸ்ட் இவற்றுக்கான ஷார்ட் கட் கீ எது?   ஸிகிவி   விரிவாக்கம் என்ன? இப்படியான கேள்விகளை கேட்பார்கள்.
* இரண்டு மதிப்பெண் பகுதியில் முதல் தொகுதியிலிருந்து 10 கேள்விகள், இரண்டாம் தொகுதியிலிருந்து 15 கேள்விகள் என 25 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதில் 20 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். இதற்கும், புத்தகத்தில் போல்டாக உள்ள இரண்டு வரி வார்த்தைகளைப் படிக்க வேண்டியது அவசியம். உதாரணத்திற்கு வரிசை, நெடு
வரிசை நீக்க உதவும் கட்டளை யாது? என்பது போன்ற கேள்விகள் இதில் வரும். இதனுடன் பழையக் கேள்வித்தாள்களில் உள்ள இரண்டு மார்க் கேள்வி களையும் படித்துக் கொண்டால் மதிப்பெண்கள் மிஸ் ஆகாது. 
* ஐந்து மார்க் கேள்விகளைப் பொறுத்தவரை, கேட்கப்படும் பத்து கேள்விகளில் 7க்கு விடையளிக்க வேண்டும். இரண்டு தொகுதிகளிலிருந்தும் தலா ஐந்து கேள்விகள் வரும். முதல் தொகுதியில் 8, 9 பாடங்களிலிருந்தும், இரண்டாவது தொகுதியில் 1, 2, 5, 6, 10, 11, 12 ஆகிய பாடங்களிலிருந்தும் ஐந்து மார்க் கேள்விகள் வராது. இவற்றைத் தவிர்த்து மற்ற பாடங்களை தெளிவாகப் படிக்க வேண்டும். முதல் தொகுதியில் முதல் மூன்று பாடங்களை நன்றாகப் படித்தாலே 5 ஐந்து மா£க் கேள்விகளுக்கு பதிலளித்து விடலாம். இந்த மூன்று பாடங்களிலிருந்தே ஐந்து கேள்விகளையும் கேட்டுவிடுகிறார்கள். இரண்டாவது தொகுதியில் 3, 4 பாடங்களை படித்தால் இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். ஆக, 7 கேள்விகளுக்கும் இந்தப் பாடங்களைப் படித்தாலே போதுமானது. இருந்தும் கொஞ்சம் கஷ்டமாக கேள்விகள் வந்தால் இரண்டாவது தொகுதியில் கேட்கப்படும் ‘அவுட்புட்’ மற்றும் ‘எரர்’ கண்டறியும் இரண்டு கேள்விகளில் ஒன்றை சாய்ஸாக தேர்ந்தெடுத்து எழுதலாம். இந்த இரண்டு கேள்விகளும் எளிதாகவே இருக்கும்.
* பொதுவாக கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வெழுதும் மாணவர்கள் வரிசையாக கேள்விகளை எழுதுவது நல்லது. படம் தேவையான பதில்களுக்கு கட்டாயம் வரைய வேண்டும். ஒவ்வொரு ஸ்டெப்பிற்கும் மதிப்பெண்கள் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* எடுத்துக்காட்டுகளை குறிப்பிட்டு எழுதும்போது பிராக்டிக்கல் கைடில் உள்ள எடுத்துக்காட்டுகளை எழுதுவது நல்லது. ஏனெனில், மாணவர்கள் வெளியிடங்களில் புரோகிராம் படிப்பதால் அங்கு செய்து பார்த்த எடுத்துக்காட்டுகளை எழுதி விடுகின்றனர். சில நேரங்களில் ஆசிரியர்களுக்கே இவை புரியாமல் போய்விடுகிறது. ஆதலால், கவனமாக எழுதுங்கள்.   

இதோடு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளைக் கொடுத்துள்ளோம். இதுவரை எதிர்கொள்ள பயந்த பாடங்களை எளிமையாக்கி எளிதாக சென்டம் வாங்க முடியும் என்கிற நம்பிக்கையை இந்தப் பகுதி ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறோம். வாழ்த்துகள்!

சென்டம் ரகசியம்!

கடந்தாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸில் சென்டம் வாங்கியவர்களில் ஒருவர் கே.ஜெயசூர்யா. நாமக்கல் மாவட்டம் அணியாபுரம், லிட்டில் ஏஞ்சல் பள்ளியில் பயின்றவர். தற்போது சென்னை எம்.ஐ.டியில் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படித்து வருகிறார். இவர் தரும் டிப்ஸ்: ‘‘முதல் தொகுதியை தெளிவாகப் படிக்க வேண்டும். ஏனெனில் கஷ்டமான தியரி கேள்விகளை பெரும்பாலும் முதல் தொகுதியிலிருந்தே கேட்பார்கள். புத்தகத்தை வரிக்கு வரி படித்தால் மட்டுமே ஒரு மதிப்பெண் கேள்விகளில் முழு மதிப்பெண்களைப் பெற முடியும்.

இரண்டு, ஐந்து மார்க் கேள்விகளுக்கு படிக்கும்போது ஒன் மார்க் கேள்விகளும் எளிதாகிவிடும். இரண்டு மார்க்கில் பழைய கேள்வித்தாள்தான் சிறந்த வழி. இதற்குள்ளிருந்தே அனைத்துக் கேள்விகளும் வந்துவிடும். 6 வருட கேள்வித்தாள்கள் அப்போது எனக்கு கைகொடுத்தன. இதை முழுவதுமாக படித்தும் எழுதியும் பார்த்தேன். ஐந்து மார்க்கை பொறுத்தவரை, கடைசியாகக் கேட்கப்படும் அவுட்புட் மற்றும் எரர் கண்டுபிடிக்கும் கேள்விகளை நன்றாகத் தெரிந்தால் மட்டுமே செய்ய வேண்டும்.’’

பேராச்சி கண்ணன்
படங்கள்: எழில்.கதிரவன், தமிழ்வாணன்