கமலுக்கு அப்புறம் இங்கே நடிகர்கள் இல்லை!



சித்தார்த் அதிரடி

ஸ்டடி ஹாலிடேவில் இருக்கிற காலேஜ் பையன் போல் இருக்கிறார் சித்தார்த். ‘‘ஹாய் சார், ‘லூசியா’ தமிழ் ரீமேக்கில் நடிக்கிறேன். ஈவ்னிங் 7 மணிக்கு இடம் சொல்றேன். பார்த்துடலாம்’’ எனச் சொன்ன மாதிரியே சந்திப்பு. வொர்க்-அவுட் செய்த ஆர்ம்ஸ். அடிக்கடி சிணுங்கும் மொபைலை அணைத்து, ‘‘நீங்க வேற... ஃப்ரெண்ட்ஸ்தான் சார்!’’ என முகம் பார்த்துச் சிரிக்கிறார். ஈரக்காற்றுக்கு முகமும், நமக்கு மனசும் தருகிறார். பதற்றம் குறைந்து அழகும் தெளிவும் கூடியிருக்கிறது. ‘ஜிகர்தண்டா’ முடித்தவருக்கு ‘காவியத்தலைவன்’, கர்நாடகாவை அதிர வைத்த ‘லூசியா’ என அடுத்தடுத்துஅமைவதெல்லாம் அதிரடிகூட்டணி.

‘‘இனிமே இது கமர்ஷியல், ஆர்ட் ஃபிலிம்னு நாம சொல்றதுக்கு வேலையே இல்லை. எல்லாத்தையும் ரசிகர்கள் தீர்மானிக்கிறாங்க. இப்படித்தான் படம் பண்ணணும்னு முன்னாடி சில அம்சங்கள் இருந்தது. இப்ப சகலமும் வேற மாதிரி மாறி நிக்குது சினிமா. 90ல இருந்த ரசிகன் இப்போ இல்லை. சினிமாவின் சகல ரகசியங்களும் தெரியுது. புதுசா இருந்தால், யாராக இருந்தாலும் ஆதரவு கொடுக்கிறாங்க. பழசா இருந்தா, பெரிய ஆளா இருந்தாலும் தள்ளி வைக்கிறாங்க. வித்தியாசமான சினிமா செய்யறவங்களுக்கு இதுதான் அருமையான நேரம். இந்த சமயத்தில் ‘ஜிகர்தண்டா’ வர்றது பெரிய ப்ளஸ்!’’

‘‘நல்ல படங்களோட லைன் அப் இருக்கு உங்ககிட்ட..!’’ ‘‘எஸ்... இதற்கான ஆரம்ப ஆயத்தம் போன வருஷம் ஆரம்பிச்சது. இந்த லைன் அப் சரியா வந்துச்சான்னு வருஷக் கடைசியில்தான் பார்த்துக்கணும். முதல் வேலையா ‘சாக்லெட் பாய்’ இமேஜ் உடையணும்னு ஆசைப்பட்டேன். அதை வேற யாராவது எடுத்துக்கிட்டுப் போகட்டும். இந்த வருஷ முடிவில், ‘சித்தார்த் அருமையான நடிகனா ஆகிட்டான்’னு ஒரு பொது அபிப்பிராயம் உருவாகணும்.

அதுக்காகத்தான் வசந்தபாலன், கார்த்திக் சுப்புராஜ் கூட இந்தப் பயணம். இதில் சுயநலம் இருக்குன்னாலும் பொதுநலனும் அடங்கி யிருக்கு. வழக்கமான தமிழ் சினிமாவின் பல அம்சங்களை விட்டுட்டு நிக்கிற சினிமாதான் இப்ப நான் செய்யறது. மீட்டெடுப்புன்னு கடினமான வார்த்தையெல்லாம் சொல்ல மாட்டேன். இதை ஒரு தொழிலா - வியாபாரமா எடுத்துக்கிட்டாலும் நாம் எப்படி மதிக்கப்படுகிறோம்னு இருக்கு இல்லையா? அதுவும் எனக்கு அவசியம்.’’

‘‘எப்படியிருக்கும் ‘ஜிகர்தண்டா’?
‘‘டிரெய்லர் பார்த்து, ‘வன்முறை’ன்னு சொல்றாங்க. அப்படியெல்லாம் இல்லை. தூங்காத மதுரை நகரத்தில் படம் எடுக்கிறது சாதாரண வேலை இல்லை. கார்த்திக்கே மதுரைதான். ஆனா, அவருக்கே தெரியாத மூலை முடுக்கெலாம் கண்டுபிடிச்சோம். எனக்கு புதுசா வந்திருக்கிற சுப்புராஜ், நலன் குமாரசாமியெல்லாம் பிடிக்குது. நிறைய மாத்தி அமைச்சிட்டாங்க. நான்தான் ஹீரோன்னு சொன்னதும், ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நானே வந்து நிற்க மாட்டேன். எல்லாருக்கும் இதில் நல்ல வேலை கொடுத்திருக்கார் டைரக்டர்.

சிம்ஹா சான்சே இல்லை. என்னத் தாண்டுகிற சில பர்ஃபாமன்ஸ்களை எல்லாரும் செய்ய அனுமதிச்சிருக்கோம். இனிமே படம் அப்படித்தான் இருக்கும். ‘ஜிகர்தண்டா’வில் நீங்க பார்க்கிற மதுரை ரொம்ப வித்தியாசம். நீங்க இந்த சீனோட அடுத்த கட்டம் இப்படித்தான் இருக்கும்னு நினைச்சா, அதுவும் நடக்காது; அதுக்கு எதிர்மாறாவும் நடக்காது. வேற ஒண்ணு நடக்கும். நிச்சயம் புதுமைகள் காத்திருக்கு. சினிமா மாறிப்போச்சுன்னு நான் திரும்பத் திரும்பச் சொல்வதை உணரப் போறீங்க!’’ ‘‘திடீர்ன்னு ‘காவியத்தலைவ’னில் பார்த்தா, நாடக நடிகர்களின் காலத்திற்குப் போய் நிற்குறீங்க..?’’

‘‘ ‘ஜிகர்தண்டா’வுக்கு சற்றும் தொடர்பில்லாத கதை. எனக்குக் கிடைச்ச பெரிய வாய்ப்பு. இன்னும் சொன்னால், லைஃப்ல ஒரு படம். வசந்தபாலன் சொன்னதும், ‘நல்ல புரொடியூசர் கிடைக்கணுமே, அடுத்த கட்டத்திற்கு எடுத்துக்கிட்டுப் போகணுமே’ன்னு கவலை வந்துடுச்சு. நானே ஏ.ஆர்.ரஹ்மான்கிட்டே வசந்தபாலனைக் கூட்டிட்டுப் போய் சொன்னேன். ‘இதுல எனக்கு நல்ல வேலையிருக்கு’ன்னு அவரே ‘ஓகே’ சொன்னார்.

கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், எம்.ஆர்.ராதா, சிவாஜி இப்படி எல்லோரும் நாடகத்தின் பின்னணியிலிருந்து வந்தவங்க. அந்தக் காலத்தை அழகா பதிவு செய்திருக்கார் டைரக்டர். பெரிய கேன்வாஸ். பிரிதிவிராஜ் இன்னிக்கு கேரளாவோட சூப்பர் ஸ்டார். நான்தான் ‘காவியத்தலைவன்’னாலும் அவருக்கும் இதில் பங்கிருக்குன்னு தெரிஞ்ச உடனே வந்து நடிச்சார். எங்களுக்குப் பின்னாடி படத்தில் வந்து சேர்ந்த எல்லோருக்கும் அந்த அக்கறை சேர்ந்ததுதான் பெரிய விஷயம்!’’

‘‘சரிங்க... இனிமையான விஷயத்துக்கு வருவோம்... லட்சுமி மேனன்..?’’ ‘‘பார்க்க குழந்தை மாதிரி யிருக்கு. ஆனால், சமர்த்துக் குழந்தை. நிச்சயம், ‘ஜிகர்தண்டா’வோட ஏரியா... அதில் வர்ற அந்த ஹீரோயின் கேரக்டரெல்லாம் அவங்களுக்குப் புரியாது. டைரக்டர் என்னையும் வச்சுக்கிட்டு லட்சுமிகிட்டே கதை சொல்லும்போது பாவமா முகத்தை வச்சுக்கிட்டு, பொம்மை மாதிரி தலையாட்டுது. என்ன புரிஞ்சதோன்னு நினைச்சுக்கிட்டு இருப்பேன்.

‘டேக்’ போயிட்டா, அப்படியே நினைச்சதை செய்து காட்டுது. நல்ல பிஹேவியர். எங்க லவ் ஸ்டோரி படத்தில் ரொம்ப கலகலப்பான ஏரியா. சந்தோஷ் நாராயணன் ‘கண்ணம்மா’ன்னு ஒரு பாட்டைப் போட்டிருக்கார்... சும்மா அப்படியே உயிரை உருக்கும்... உலுக்கும். லட்சுமி பிரமாதமான நடிகை. அந்தப் பொண்ணு தொட்டதெல்லாம் துலங்குது. நடிக்கிற படமெல்லாம் ‘ஹிட்’ வேற!.நல்லதுதானே!’’

‘‘போட்டியா இல்லை... அம்சமான நடிகர்களா இங்கே யார் இருக்காங்க?’’
‘‘கமல் சார் ஒருத்தர் இருக்கார். அவருக்குப் பின்னாடி அடுத்தடுத்த இடத்தில் கூட யாருமே இல்லை. வெற்றிடத்தில் இருக்கும்போது எதைச் சொல்றது? அவரே எல்லாருக்கும் சேர்த்து சாதனைகளா பண்ணிட்டு நிற்கும்போது, நாங்க எல்லாம் என்ன பெரிசா பண்ணிட்டோம்னு சொல்றது? கமலுக்குப் பின்னாடி யாருமே இல்லையே...

அதுதானே உண்மை. இங்கே பக்கத்துல போனா, லால், மம்முக்கா... வடக்கே அமீர்கான்னு அரிதாத்தானே இருக்காங்க? ரொம்ப அடம் பிடிச்சுக் கேட்டால், ‘எங்களை கேலி பண்ணாதீங்க’ன்னு சொல்வேன். இப்ப எனக்கு விஜய் சேதுபதி பிடிக்குது. இன்னும் கொஞ்ச நாளில், சரியா பாதை வகுத்தால் நடிப்புல அம்சமா வருவாரு. பண்ணின நாலஞ்சு படங்களில் அவர் செய்திருக்கிற வித்தியாசத்தை நாங்க யாருமே செய்யலை. ஜூனியர்தான்... ஆனா, மனசார ஏத்துக்கணும்!’’

- நா.கதிர்வேலன்