அஞ்சலி சாபம்



‘ஒருவரிடம் பேசிய பத்தாவது நிமிடத்தில் அவர் குணத்தைக் கண்டுபிடித்து விடுவார்’ என்று சூப்பர் ஸ்டாரைப் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து கூறிய செய்தி மெய்சிலிர்க்க வைத்துவிட்டது!

- சி.கொ.தி.முருகேசன், குன்னத்தூர். ‘திருப்பி அடிக்கும் பெண்கள்’ என சம்பத்பால் தேவியின் தலைமையில் கிளம்பியிருக்கும் ‘குலாபி கேங்’ சபாஷ் போட வைக்கிறது! அதே நேரம், அப்பாவி கணவன்மார்களை அடித்து அவமானப்படுத்தும் ‘புதுமை’ப் பெண்களை கொஞ்சம் கட்டுப்படுத்துவதும் நல்லது.

- பேச்சியம்மாள், புதுச்சத்திரம்.
வெயிட் போட்ட உடம்பை சரி பண்ணத்தான் அஞ்சலி அமெரிக்கா போயிருக்கிறார் என்ற மர்மத்தை சிதறு தேங்காய் மாதிரி போட்டு உடைச்சிட்டீங்களே பாஸ்! அஞ்சலி சாபம் உங்களை சும்மா விடுமா?
- எஸ்.சுந்தரேசன், திருப்பூர்.
பெண்கள் ஸ்பெஷலில் ‘பெண்மொழிக் கவிதை’கள் அனைத்தும் அருமை. இன்றைய புதுமைப் பெண்கள் எதை விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்ற எண்ண ஓட்டத்தை அவை அப்படியே பிரதிபலித்தன!
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.
‘முள்ளும் மலரும்’ மகேந்திரனின் மறுபிரவேசம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எதனுடனும் சமரசம் செய்துகொள்ளாமல் தன் கற்பனையை அவர் திரைப்படமாய்த் தரும் அந்தத் திருநாளுக்காக, மனம் இப்போதே ஏங்கத் தொடங்கிவிட்டது!
- எம்.சம்பத்,
வேலாயுதம்பாளையம்.
‘பெண்களைத் தாக்கும் சைபர் ஆயுதம்’ கட்டுரை வரிக்கு வரி வியப்பைத் தந்தது. பெண்கள் முன்னேறி விட்டார்கள் என்று நினைக்கும் இந்த நவீன காலத்தில்தான் அவர்களுக்கு எத்தனை
சங்கடங்கள்!
- இரா.சுசீலா ராகவன், கும்பகோணம்.
சினிமாவை விட்டே ஒதுங்கி நிற்கும் கிராமராஜன்... ஸாரி, ராமராஜனை ஆண் டைனோசரிடம் பால் கறக்க வைத்து, அவருக்கு ஒரு ரீ என்ட்ரி கொடுத்துள்ள ஆல்தோட்ட பூபதிக்கு நன்றிகள் பல!
- ஏ.விஷால், புதுச்சேரி.
‘ஜப்பானின் வளர்ச்சியைக் கண்டு வியக்கும் நாம், அவர்களின் அரிய பண்பாட்டையும், ஒழுக்கங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தால் இந்தியாவின் எதிர்காலம் அர்த்தமுள்ளதாக இருக்கும்’ என்ற எஸ்.ராவின் வார்த்தைகள் இன்றைய இளைஞர்களின் காதுகளில் உரக்க விழ வேண்டும்!
- இரா.பிரச்சனா, மதுரை-11.
அப்பப்போ நிதர்ஸனாவின் கடைசிப் பக்கத்துக்கு விடுமுறை அளித்து விடுகிறீரே... நீதியோடு சேர்ந்த கதையை திடீர் திடீரென நிறுத்துவதுதான் உமது நீதியோ?
- எம்.மிக்கேல்ராஜ்,
விருதுநகர்.