அடிமை



‘‘எனக்குக் கல்யாணமாகி இந்த மூணு வருஷமா, என் மாச சம்பளத்தை அப்படியே என் மனைவிகிட்டதான் கொடுக்கறேன். வீட்டுச் செலவு எல்லாம் அவ பொறுப்புதான். தினமும் நான் ஆபீஸுக்கு வரும்போது பஸ் சார்ஜும் கைச்செலவுக்கு பத்து ரூபாயும் தருவா.

மேற்கொண்டு என் கையில பத்து பைசா புரளாது!’’ - அலுவலக நண்பன் பாலாஜியிடம் புலம்பினான் தினேஷ். ‘‘இந்த அளவுக்கா உன் மனைவிக்கு அடிமையா இருப்பே! இனிமேலாவது உன் சம்பளம்... உன் உரிமைங்கற தாரக மந்திரத்தை கடைப்பிடி!’’ - உசுப்பேத்தி விட்டான் பாலாஜி.  அடுத்த நாள்...

தினேஷ் ஆபீஸுக்குப் புறப்படும் நேரம். அவன் மனைவி உமா, கைப்பையோடு அருகில் வந்தாள். ‘இப்போது மட்டும் இவள் வழக்கமான கணக்குப்படி பணம் தரட்டும்... பொங்கி எழுந்துவிட வேண்டியது தான்’ என தினேஷ் காத்திருந்தான்.

கைப்பையைத் திறந்தவள், ‘‘என்னங்க! இவ்வளவு நாளா நான் கட்டுப்பாடா செலவு பண்ணினதுல பேங்க்ல அறுபதாயிரம் ரூபா சேமிச்சாச்சு. உங்களுக்குப் பிடிச்ச மாதிரி பைக் ஒண்ணு வாங்கிக்கலாம்!’’ என்றபடி பணத்தை எடுத்து பூரிப்போடு நீட்டினாள். மனைவியின் அன்புக்கு மீண்டும் அடிமையானான் தினேஷ்.   

கு.அருணாசலம்