சமையல்



தன் ஓட்டலில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த சிங்காரத்தை ஆச்சரியத்துடன் பார்த்தார் நளன். நண்பரின் மகன். புதிதாகத் திருமணமானவன். ‘‘மனைவி ஊருக்கு போயிருக்காங்களா..?’’ என அக்கறையோடு விசாரித்தார். ‘‘இல்ல சார்... நேத்து வரைக்கும் எங்க அம்மா சமையலை சாப்பிட்டு ருசி கண்டவன் நான். மனைவிக்கு சமைக்கவே தெரியல. வாயில வைக்க முடியல’’ என வெறுப்பாகச் சொன்னான் சிங்காரம்.

மறுநாள் மதியமும் அவன் வந்து சாப்பிட்டு முடித்ததும் தனியாக அழைத்தார் நளன். சாப்பாட்டு எப்படி என விசாரித்தார்... ‘‘ சூப்பர் சார். எனக்கு இனிமேல் நிரந்தரமா சாப்பாடு இங்கேதான்!’’ ‘‘தம்பி, இப்ப நீங்க ரசிச்சி சாப்பிட்டது இந்த ஓட்டல் சாப்பாடு இல்ல. உங்க மனைவி கையால சமைச்சதை இங்க கொண்டு வர ஏற்பாடு செஞ்சேன். மனைவி சரியா சமையல் பண்ண மாட்டாங்கன்னு நீங்களா முன்கூட்டியே தீர்மானிச்சுக்கிட்டு சாப்பிட்டா, நல்லா இல்லாத மாதிரிதான் தெரியும். அவங்க நல்லா சமைப்பாங்கன்னு நம்புங்க. திருத்திக்க வாய்ப்பு கொடுங்க!’’  நளனின் அறிவுரையை ஏற்ற சிங்காரம், கேரியரோடு வீட்டுக்குப் பறந்தான்... மனைவியைப் பாராட்ட!            

எஸ்.ராமன்