பொலிட்டிகல் பீட்



‘75 வயதைத் தாண்டியவர்களை இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக நிறுத்தக் கூடாது’ என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கண்டிப்பாகக் கூறியிருக்கிறது. ஆனால் மூத்த தலைவர்கள் பலரும் இது குறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 86 வயதாகும் அத்வானி, மீண்டும் காந்தி நகரில் போட்டியிட ஆசைப்படுகிறார்.

 ‘பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு இது பாதுகாப்பான தொகுதி. எனவே அத்வானியை மாநிலங்களவை எம்.பி ஆக்கி விடலாம்’ என ஒரு யோசனை கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் யாரும் இதை அத்வானியிடம் பேசத் தயங்குகின்றனர். 80 வயதாகும் முரளி மனோகர் ஜோஷியும் இந்தத் தேர்தலில் களமிறங்க ஆசைப்படுகிறார். 76 வயதாகும் ஜஸ்வந்த் சிங்கும் பிஸியாக தனது தொகுதியைச் சுற்றி வருகிறார். என்ன ஆகுமோ தெரியவில்லை!

ராகுல் காந்தி திடீர் திடீரென வழக்கமான வேலைகளிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டு வெளிநாடு பறந்து விடுவார். அவரது வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய விவரங்கள், நெருங்கிய நண்பர்களைத் தாண்டி யாருக்கும் தெரியாது. ராகுல் இப்படி அடிக்கடி போகும் நாடு, தாய்லாந்து. கடுமையான வேலையால் ஏற்படும் அழுத்தத்திலிருந்து, அங்கு தியானம் செய்து புத்துணர்வு பெறுகிறார். பலருக்கும் அந்த பயிற்சியை பரிந்துரை செய்து இருக்கிறார்.

பீகாருக்கு பாரபட்சம் காட்டும் மத்திய அரசை எதிர்த்து மார்ச் 1ம் தேதி பந்த் அறிவித்தார், முதல்வர் நிதிஷ் குமார். ஆனால் அன்று அவரது பிறந்த நாள். கட்சிக்காரர்கள் அதை நிம்மதியாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை வர, பந்த்தை மறுநாளுக்கு ஒத்தி வைத்தார் நிதிஷ். ஆனால், மார்ச் 3ம் தேதி பீகாரில் நரேந்திர மோடி கூட்டத்துக்கு தொண்டர்கள் வருவதைத் தடுக்கத்தான் பந்த்தை ஒத்தி வைத்ததாக பி.ஜே.பி குற்றம் சாட்ட, நொந்து போய்விட்டார் நிதிஷ்.

தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் திடீரென மக்களுக்கு நெருக்கமாகி விடுவார்கள். உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் இதில் விதிவிலக்கில்லை. இந்தக் கல்யாண சீஸனில் ஒரே நாளில் பல திருமணங்களுக்கு அவர் செல்கிறார். ஆனால் முகூர்த்த நேர நெரிசலில் சிக்கிக் கொள்ள விரும்பாமல், கொஞ்சம் முன்கூட்டியே கல்யாண மண்டபத்துக்கு அவர் வருகிறார். இதனால் தர்மசங்கடத்தில் தவிப்பது மணமக்கள்தான். கல்யாணத்துக்கு இரண்டு, மூன்று மணி நேரம் முன்பாகவே அலங்கரித்துக் கொண்டு முதல்வரை வரவேற்கக் காத்திருக்கும் அவர்கள், திருமண நேரத்துக்குள் களைத்துப் போய் விடுகின்றனர்.

வாய்ஸ்

நாடாளுமன்ற, சட்டமன்றக் கூட்டங்களை சபையில் நடத்தாமல், திறந்தவெளி மைதானங்களில் நடத்த வேண்டும். ஒரு சபைக்குள் சிலரால் கத்தி, கூச்சல் போட்டு எல்லாவற்றையும் ஸ்தம்பிக்கச் செய்துவிட முடிகிறது. திறந்தவெளியில் வைத்தால், இப்படிச் செய்யாமல் பள்ளி மாணவர்கள் போல பவ்யமாக இருப்பார்கள்.’’

- அரவிந்த் கேஜ்ரிவால்

தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகள் வேஸ்ட். தேர்தலுக்குப் பிறகு எல்லாமே மாறும். இது ப்ரீ-பெய்டு யுகமில்லை; போஸ்ட்-பெய்டு யுகம்!’’

-மம்தா பானர்ஜி