13 இனி மோசமான நம்பர் இல்லை!



‘‘ஏகப்பட்ட பாசத்தை மனசில் பூட்டி வச்சுக்கிட்டு, அதை வெளிப்படுத்தினா எங்கே பிள்ளை கெட்டுப் போயிடுவானோன்னு கோபத்தை மட்டுமே காட்டிட்டு இருப்போம். இதனாலேயே பாசம் இல்லாமல் வளர்றவங்கதான் இங்கே அதிகம்.

 அப்படி ஒருத்தனின் கதை இது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ன்னு எழுதி வச்சதைக் கேட்டால், இருக்கிற ஒரே உண்மை அதுதான்னு தோணுது. நல்லது கெட்டது எல்லாமே நம்மகிட்ட இருந்துதான் வருது. மத்தவங்க அன்பைப் புறக்கணிக்காமல் இருந்தாலே போதும்’’ - மெதுவாக சற்றே ஆழ்ந்து பேசுகிறார், ‘13’ படத்தின் அறிமுக இயக்குநர் டி.சுரேஷ். டைரக்டர் பாலாஜி சக்திவேலின் முதல் நிலை சீடர்.‘‘அதென்ன ‘13’?’’

‘‘ ‘அன் லக்கி நம்பர்’னு ‘13’ஐ சொல்லுவாங்க. நான் மகிழ்ச்சியின் குறியீடாக அந்த நம்பரை ஆரம்பிச்சு வைக்கிறேன். படத்தின் மையமே அந்தத் தேதியிலிருந்துதான் ஆரம்பிக்கும். பரபரப்பும், அவசரமும், டென்ஷனும் மீறிப் போய்விட்ட இந்த சமயத்தில், வாழ்க்கையின் உன்னதங்களை அதிகப்படியா இழந்திட்டோம். குழந்தைகளுக்காக ஏங்கித் தவிக்கிற இரண்டு தாய்களின் உலகமும் இதில் அடங்கியிருக்கு. சென்டிமென்ட்டுக்கு காலம் இல்லைன்னு சும்மா சொல்வாங்க. அறிந்து, உணர்ந்து ரசிகர்களை நெருங்கினால் எங்கேயும் மனசைத் தொடலாம். சந்தோஷம் என்பது என்ன, இன்னாருக்கு இவ்வளவுன்னு எழுதியா வச்சிருக்கு? அப்படியொண்ணும் இல்லையே! நாம் பேசாமல் இல்லை... பேசிக்கிட்டேதான் இருக்கோம். பேச வேண்டியவர்களிடம் பேச்சு போதலை. அதுதான் உண்மை. அனேக சிக்கல்களுக்கு இதுதான் மையம். இதைத்தான் களைய முயன்றிருக்கிறேன்...’’

‘‘எப்படி திடீர்னு மனோஜ் பாரதி..?’’
‘‘எனக்கு அவரைப் பிடிக்கும். ஏதேதோ காரணங்களால் பிடிபடாமல் நழுவிப் போனவர் அவர். அவரால் எந்த வேடத்தையும் சரியாகச் செய்ய முடியும். இன்னும் அதற்கான சரியான தொடுகோட்டை தொட்டுக்காம இருந்தார்னு சொல்லலாம். சினிமா, யூகங்களுக்கு அப்பாற்பட்டது. நிச்சயம் மனோஜ் பாரதி ஜெயிக்க முடியும். எங்களின் கதாநாயகனாக அற்புதமா நடிச்சிருக்கார். எளிய நடிப்பைக் கொடுத்து, ஷூட்டிங்கிலேயே கண்களைத் துடைத்துக் கொள்ளும்படி செய்தார்!’’

‘‘இரண்டு ஹீரோயின்களும் புதுமுகமே... ஏன்?’’
‘‘அப்படித்தான் வேண்டியிருந்து. ஷிரா, அஞ்சலி ராவ்னு ரெண்டு பேர். ஆனால், துளி கூட ஆபாசம் இல்லாமல், செய்திருக்கேன். என் குரு பாலாஜி சக்திவேல் சாரும் புதுமுகங்களைத்தான் அதிகம் நம்புவார். புதுசா இருக்கும்போது அவங்களை நமக்கு ஏற்றபடி வளைக்க முடியும். அவங்க என்னுடைய கேரக்டர்களுக்கு நல்ல வடிவம் தந்தாங்க. என்னிடம் நம்பிக்கை தரக்கூடிய கதை இருக்கு. மனதை வருடிச் செல்லும் காட்சியமைப்புகள் இருக்கு. நல்லதை வரவேற்கும் ரசிகர்களை மூலதனமா வச்சித்தான் இந்தப் படத்தை இயக்குறேன்...’’
‘‘பாடல்கள் எப்படியிருக்கும்..?’’

‘‘இடத்தைத் தேடி கண்டு
பிடித்து, மிகவும் பொருந்தும் என மனசில் பட்டால் மட்டுமே பாடல்கள் வருகின்றன. மூன்றே பாடல்கள். பவன் என்பவர் மியூசிக். படத்தின் பெரும் சுமையை சுமந்திருக்கிறார் ஜோன்ஸ் ஆனந்த். அவர்தான் கேமரா. என்னுடைய கனவை அவர்தான் காட்சிப்படுத்தியிருக்கார். என் கனவு அப்படியே பூர்த்தியாகி இருக்கு. சரியான முடிவுடன் படம் எடுப்பது அனுபவத்தால் வருது. அந்த அனுபவம் எனக்கு பாலாஜி சக்திவேல் சாரிடமும் இருந்து கிடைச்சது!’’

- நா.கதிர்வேலன்