குட்டிச்சுவர் சிந்தனைகள்



இந்த வார பரபரப்பே ஆஸ்கர் விருது தான். இங்கிலீஷ் சினிமாக்காரங்க ஆஸ்கர் விருது கொடுத்து பரபரப்பு கிளப்பினா, நாம நம்ம சினிமாக்காரங்களுக்கு அம்பாசிடர்கார் விருது கொடுத்து பட்டய கிளப்புவோம் வாங்க பாஸ்... காபி விளம்பரம் முதல், காம்ப்ளான் விளம்பரம் வரை, மிட்டாய் விளம்பரம் முதல் மிளகாய்த்தூள் விளம்பரம் வரை ஒன்று விடாமல் நடிக்கும் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான அம்பாசிடர்கார் விருது.

கடந்த மூணு வருஷமா பத்தாவது பரீட்சை எழுதறேன், பதினொன்னாவது பரீட்சை எழுதறேன்னு சொல்லிக்கிட்டு படத்துல பாட்டியம்மா டீச்சராட்டம் நடிக்கும் லட்சுமி மேனனுக்கு சிறந்த நடிகைக்கான அம்பாசிடர்கார் விருது. ‘‘இப்ப நான் தனி’’ என இதோடு இருபத்தி எட்டாவது முறையாக சொல்லியிருக்கும் லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கு லவ்வை கட் பண்ணிவிடும் சிறந்த எடிட்டருக்கான அம்பாசிடர்கார் விருது.

‘சாணக்யா... சாணக்யா’, ‘ரெண்டுல தான் ஒண்ண தொட வர்றியா’ என வாழ்க்கையின் சாரம்சத்தை உரித்துச் சொல்லும் தத்துவப் பாடல்களில் நடித்து விட்டு, ‘‘இனி சினிமாவுக்கு முழுக்கு’’ என அறிவித்திருக்கும் நமது கவரிங் தாரகை குத்து ரம்யாவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான அம்பாசிடர்கார் விருது. தலைவரோட, ‘கோச்சடையான்’ வரும்... ஆனா, வராதுன்னு ரெண்டு வருஷமா நம்மள வச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு சிறந்த காமெடி நடிகருக்கான அம்பாசிடர்கார் விருது.

‘சகாப்தம்’ படத்திற்காக தனது உடல் எடையை 20 கிலோ குறைத்துள்ள விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு சிறந்த கதாசிரியருக்கான அம்பா
சிடர்கார் விருது. ‘புத்தாண்டுல இருந்து வந்த ஒரு படம் கூட லாபம் சம்பாதிச்சுக் கொடுக்கல’ன்னு வெளிப்படையா பாட்டு பாடும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கே.ஆருக்கு சிறந்த பாடகருக்கான விருது.

40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிட்டாலும், அவர்களுடன் கூட்டணி தொடருமென உள்ளே அழுதுகொண்டே வெளியே சிரிக்கும் அண்ணன் தா.பாண்டியனுக்கு சிறந்த குணசித்திர நடிகருக்கான அம்பாசிடர்கார் விருது. அய்யய்யோ... இங்கேயும் சினிமாவுக்குள்ள அரசியல் வந்திடுச்சா? சரி விடுங்க, எங்க நடிச்சாலும் நடிப்பு
நடிப்புதானே!

எந்த நாட்டுக்கு எந்த டோர்னமென்ட் போனாலும் இந்திய டீம்தான் மேட்சுக்கு மேட்சு நாறடிக்குது. ஆனா, கோலி மேட்சுக்கு மேட்சு நூறடிச்சுடுறார். விராட் கோலி போற வேகத்த பார்த்தா, அவர ஏலம் எடுத்த விஜய் மல்லய்யா கடன விட அதிகமா ரன் அடிப்பாரு போல. ஆனா, அதுக்காக இந்த talking tom மூஞ்சிக்கார பயல, தமிழ் மண்ணின் தத்துப் புதல்வன் தோனியோட எல்லாம் கம்பேர் பண்ணக் கூடாது மக்களே. மேட்சுக்கு மேட்ச் Runன்னடிக்கிற ஆளுதான் கோலி, ஆனா மொத்த மேட்ச்சையும் win ன்னடிக்கிற ஆளு தோனி.

டீம்ல சாதிக்கிற ப்ளேயர் கோலி, டீமையே சாதிக்க வைக்கிற பிளேயர் தோனி. நல்லா ஆடிட்டு கடைசி நேரத்துல மேட்ச மொட்டையா விட்டுட்டுப் போறதுதான் கோலி ஸ்டைல். ஆனா வின்னிங் ரன் அடிச்சு எதிர் டீமுக்கு பட்டைய போட்டுட்டுப் போறதுதான் தோனி ஸ்டைல். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... கோலி கேப்டனாகலாம். ஆனா, ஒரு நாளும் தோனியாக முடியாது. விசில் போடு!

சத்தியமா கீழ்க்கண்ட கருத்துக்கள் சிரிக்க அல்ல, முக்கியமாக ரசிக்கவும் அல்ல. இது முழுக்க முழுக்க நீங்கள் சிந்திக்க மட்டுமே. ‘நாயகன்’ படம் பார்த்ததில் இருந்தே நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லன்னு நம்பி வாழுறவங்கதான் நாம. ஒரு வருஷத்துக்கு முன்னர் இதே ‘குட்டிச்சுவர் சிந்தனைகள்’ல ஏழை மக்கள் பயன்பெற அம்மா திரையரங்கம், அம்மா லாட்ஜ் என பல திட்டங்கள் வரணும்னு எழுதியிருந்தோம்.

அது போலவே சென்னை மாநகராட்சியில் திரையரங்கம், மகளிர் விடுதி என கோடிக்கணக்கான மக்களுக்கு பயன்படும் நல்ல திட்டங்களை அறிவிச்சிருக்காங்க. இன்னும் சில பல விஷயங்கள் நடந்து நாலு மக்களுக்கு நல்லது நடந்தா எல்லாருக்கும் சந்தோஷம்தானே. அதான் இன்னமும் என்னென்ன கொண்டு வரலாம்னு மீண்டும் சில ஐடியாக்கள்...
அம்மா ஏர்வேஸ்:

எத்தனை நாள்தான் தலைக்கு மேல பறக்கும் ஏரோபிளேன தலைய தூக்கிப் பார்த்துக்கிட்டே இருப்பது? நேத்து பொறந்த பசங்க எல்லாம் ஆன்சைட், ஆப்சைட்னு அமெரிக்கா பறக்கிறாங்க. மிச்சம் மீதி இருக்கும் டாஸ்மாக் தமிழர்கள், தன்மான தமிழர்கள் அட்லீஸ்ட் ஆண்டிபட்டி டூ அல்லிநகரமாவது பறக்க வேணாமா? அதான் குறைந்த செலவில், விலையில்லா பாராசூட்டுடன் அம்மா ஏர்வேஸ் வரணும்கிறோம்.

அம்மா கோயில்கள்: பழனில சிறப்பு தரிசன டிக்கெட் 100 ரூபா, திருச்செந்தூர்ல 200 ரூபா, அட திருப்பதில 500 ரூபாப்பா. அதான் ஏழை மக்கள் இறைவனை இலவசமாகவும் மிக விரைவாகவும் கூட்ட நெரிசல் இல்லாமலும் கண்டிட தமிழகமெங்கும் அம்மா கோயில்கள் வரணும். பழனில இருக்கும் முருகரைப் போலவே ஒரு சிலையை பரங்கிமலைல வைக்கிறோம், திருப்பதில இருக்கும் வெங்கடாசலபதி கோயில் போலவே ஒன்ன திருப்பூர்ல கட்டறோம். எல்லா ஏழை மக்களுக்கும் விலையில்லா சாமி தரிசனம் தர்றோம்.

அம்மா பெட்ரோல் பங்க்: இந்த பெட்ரோல் கம்பெனிகள்தான் எத்தனை தடவை பெட்ரோல், டீசல் விலையை ஏத்தி ஏழை மக்கள் வயித்துலயும் வண்டியிலயும் அடிப்பாங்க! அதுவும் விலையை ஏத்துறதுல ரொம்ப ‘சில்லரைத்தன மாவும்’ நடந்துக்கிறாங்க. அதான் தமிழக மக்கள் பயன் பெற அம்மா பெட்ரோல் பங்க் வரணும். பெட்ரோல் லிட்டர் 20 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 10 ரூபாய்க்கும் தந்து ஏழை எளிய மக்கள் பயன் பெற வழி வகுக்கணும்.

அம்மா யூ.பி.எஸ் சேல்ஸ் அண்டு சர்வீஸ்: கோடை காலம் ஆரம்பிச்சுட்டதால், காத்தடிப்பதும் கொஞ்சம் குறைந்து வருவதால், நெய்வேலி அனல் மின் நிலையம் எப்போ எப்போ வேலைநிறுத்தம் பண்ணுவாங்கன்னு தெரியாததால், கோடிக்கணக்கான குடும்பங்கள் பயன் பெற அம்மா யூ.பி.எஸ் சேல்ஸ் அண்டு சர்வீஸ் வரணும். பாதி விலையில் தரமான யூ.பி.எஸ்ஸும் விலையில்லா சர்வீசும் வழங்கி மக்களுக்கு நன்மை புரியணும் சார்.

அம்மா தொலைத்தொடர்பு வசதிகள்: தமிழ்நாட்டில் படிக்காதவர்களும் இருக்கக் கூடாது செல்போனில் பேசாதவர்களும் இருக்கக்கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில், மிக மிக குறைந்த விலையில் குடும்பத்துக்கு ஒரு அம்மா செல்போன், அதுக்கு அம்மா நெட்வொர்க்கில் இயங்கும் ஒரு அம்மா சிம் கார்டு, அரசு நியாயவிலை ரீசார்ஜ் கடைகள் என எல்லாமுமே வரணும். ஒரு கால் 30 பைசா, ஒரு ஜி.பி இன்டர்நெட் டேட்டா 125 ரூபா என இந்த பிரைவேட் செல்போன் கம்பெனிங்க அநியாயம் பண்ணுவது முற்றிலும் தடுக்கப்படணும்.
இது போக தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் பல நல்ல திட்டங்கள் இருக்கின்றன, எல்லாத்தையும் ஒரே சமயத்தில் செய்ய முடியாதுல்ல. கொஞ்சம் கொஞ்சமா பார்ப்போம் சார்.

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்... ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்டால் இந்திய மாணவன்... பக்கத்துல இருக்கும் இலங்கையில் தாக்கப்பட்டால் தமிழக மீனவன். இப்படியே பல ஆண்டுகளாகப் பிரித்துப் பார்த்து பிரச்னையை எதிர்க்கொள்ளும் மத்திய வெளியுறவுத்துறை!

ஆல்தோட்ட பூபதி