டிஜிட்டல் மாய மோதிரம்!



கடந்த மாத இறுதியில் இந்திய மீடியாக்கள் அனைத்தும் கொண்டாடித் தீர்த்துவிட்டன. ‘கிட்டத்தட்ட டெக்னாலஜி உலகின் ஒலிம்பிக்ஸாகவே பார்க்கப்படும், மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழா, ஸ்பெயின் நாட்டு பார்ஸிலோனா நகரில் நடக்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், ஐ.பி.எம் தலைவர் விர்ஜினியா ரொமர்ட்டி போன்ற ஜாம்பவான்கள் அதில் உரையாற்று கிறார்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றப் போகிறார் 23 வயது இளைஞர் ரோஹில்தேவ். உலகையே விரலசைவில் இயங்க வைக்கும் ஒரு மோதிரத்தைக் கண்டுபிடித்திருக்கிறாராம் இந்தக் கேரள இளைஞர்’ என பில்டப் கட்டுரைகள் இணையத்தில் வரிசை கட்டி நின்றன.

ஆனால், மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நடந்து முடிந்துவிட்ட நிலையில், அந்த ரோஹில்தேவ் என்ன ஆனார்? அத்தனை பெரிய நிகழ்வில் அவர் பேசினாரா இல்லையா? என்ன பேசினார்? எதைப் பற்றியும் யாரும் கவலைப்படவே இல்லை! ‘‘உலகத்தையே எங்க பக்கம் திரும்ப வச்சிருக்கோம் சார். இதுவே எங்களுக்குக் கிடைச்ச வெற்றி. உண்மையில இந்தியாவுக்குக் கிடைச்ச வெற்றி. ஆனா, அந்த நிகழ்ச்சியில என்னால கலந்துக்க முடியல. டிராவல் ஏஜென்ஸி செய்த ஒரு சின்ன தவறு... சரியான நேரத்துல எனக்கு விசா கிடைக்கல.

அதுக்குள்ள நிகழ்ச்சியே நடந்து முடிஞ்சுடுச்சு. எனக்கு மட்டுமில்ல... அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கே இதில் வருத்தம்தான். ஆனா, என்ன செய்யிறது? அவங்க வருந்தி அழைக்கும் இடத்தில் இருக்கோம்னு இதையும் பாஸிட்டிவா எடுத்துக்க வேண்டியது தான்.’’ - மலையாளம் பூசிய மென்தமிழில் பேசுகிறார் ரோஹில்தேவ். கொச்சியில் பிறந்து வளர்ந்தாலும் கொங்கு நாட்டுக் கோவைதான் இவருக்கு பொறியியல் கற்றுத் தந்திருக்கிறது.

‘‘கொச்சியில ஒரு டிபிக்கல் மிடில் கிளாஸ் குடும்பம் எங்களோடது. அப்பா சின்னதா பிஸினஸ் பண்றார். அம்மா, ஹவுஸ் வொய்ஃப். 8ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு கம்ப்யூட்டரைத் தொட்டுப் பார்க்கிற சார்ன்ஸ் கிடைச்சது. ஏதோ பூர்வ ஜென்மத்து காதலியைத் தொட்ட மாதிரி உணர்வு. அதுக்கப்புறம் கம்ப்யூட்டர்தான் எனக்கு எல்லாமே. அந்த வயசுலயே சில சிம்பிள் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களை உருவாக்க ஆரம்பிச்சிட்டேன்.

கம்ப்யூட்டர்ங்கறது டைனிங் டேபிள் சைஸ்ல இருந்த காலத்துல ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், கையடக்க கம்ப்யூட்டரை கனவு கண்டிருக்கார். முதல்முதல்ல மௌஸ்னு ஒரு கருவியை ஜெராக்ஸ் கம்பெனி உருவாக்கிக் காட்டினப்போ, ‘இதை வச்சி நான் கம்ப்யூட்டரை கடைசி கட்டக் கூலித் தொழிலாளி வரைக்கும் கொண்டு போய் சேர்க்கறேன்’னு அவர் சொன்னாராம். அதுமாதிரி நாமும் இந்தத் துறையில ஏதாவது செய்யணும்னு ஒரு தாகம் இருந்தது. அந்த தாகத்துல தான் எஞ்சினியரிங் கடைசி வருஷம் படிக்கும்போதே, ‘ஆர்.ஹெச்.எல் விஷன்’னு தனியா ஒரு கம்பெனி தொடங்கிட்டேன்’’ என்கிற ரோஹில்தேவ், அந்தக் கம்பனி மூலம் தன் சகாக்களோடு இணைந்து உருவாக்கியிருப்பது தான் ‘டிஜிட்டல் மாய மோதிரம்’. அதற்கு இவர்கள் இட்டிருக்கும் பெயர், ‘ஃபின்’.

‘‘இது எங்க கனவு ப்ராஜெக்ட். என்னை மாதிரியே கம்ப்யூட்டர் துறையில சாதிக்கத் துடிக்கிற 15 பேர் ஒண்ணா சேர்ந்து அதுக்காக உழைக்கிறோம். கம்ப்யூட்டரை ஆபரேட் பண்ண ஒரு காலத்தில் கீ போர்ட் மட்டும்தான். பிறகு மவுஸ் வந்தது. இப்ப டச் ஸ்கிரீன். அடுத்து என்னங்கறதுதான் இப்ப நம்பர் ஒன் கேள்வி. கையசைவில் டி.வியை இயக்கலாம், கண்ணசைவில் மொபைலை இயக்கலாம்னு என்னென்னவோ வருது.

ஆனா, அதுல உள்ள மோஷன் சென்சார்கள் மனுஷனோட அசைவுகளை சரியா உள்வாங்குறதில்லை. அது மட்டுமில்லாம, கையைக் காலை வீசி ஒரு டி.வியை ஆபரேட் பண்றதை விட, சிம்பிளா ரிமோட்லயே பண்ணிக்கலாம்னு தோணிடுது. இதுக்கெல்லாம் மாற்றாதான் நாங்க ஃபின் மோதிரத்தைத் தயாரிக்கறோம். இதைக் கட்டை விரல்ல பொருத்திக்கிட்டா போதும். அந்த விரலால் மற்ற நாலு விரல்களைத் தொடுறதின் மூலமாவே டி.வியை இயக்கலாம். சவுண்டைக் குறைக்க ஆள்காட்டி விரல், சேனல் மாத்த நடுவிரல்னு ஒவ்வொண்ணுத்துக்கும் ஒவ்வொரு சிக்னல்.

இந்த சிக்னல் ப்ளூ டூத் வழியா கருவிகளை ரீச் பண்ணி அதை இயங்க வைக்கும். டி.வி, கம்ப்யூட்டர், மியூசிக் சிஸ்டம், மொபைல் போன்... இப்படி புளூ டூத் வசதி இருக்குற எல்லா கருவிகளையும் நம்ம விரலசைவுல இயங்க வைக்கும் இந்த மாய மோதிரம்’’ என்கிற ரோஹில், தற்போதைக்கு இந்தக் கருவியின் தொழில்நுட்ப வடிவமைப்பு அனைத்தையும் முடித்துவிட்டார்.

கேரள அரசின் ஆதரவோடு, இது போன்ற இளம் தொழில்நுட்ப முயற்சிகளுக்காக இயங்கும் ‘ஸ்டார்ட் அப் வில்லேஜ்’, ரோஹிலின் நிறுவனத்தை தன்னோடு சேர்த்துக்கொண்டு ஆதரவு தருகிறது.  இந்த வருடத்தில், உலக அளவில் எதிர்பார்க்கப்படும் சிறந்த 15 தொழில்நுட்பக் கருவிகளில் ஃபின் மோதிரத்தையும் ஒன்றாக நிறுத்தியிருக்கிறது ‘டெக் கரன்ச்’ என்ற இணையதளம். ஐரோப்பாவில் நடந்த பயோனியர் விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘டாப் 50 துவக்க நிலை தொழில்நுட்ப முயற்சி’களிலும் இடம்பிடித்திருக்கிறது ஃபின் மோதிரம். இம்மாதிரியான முயற்சிகளுக்கு ஆன்லைன் மூலம் நிதி திரட்டும் ‘இன்டிகோகோ’ இணையதளத்தில் ஃபின் பற்றிய தகவல்கள் வெளியாக, இதுவரை 1,50,000 டாலர் நிதி திரண்டுவிட்டது மக்களிடமிருந்து.

‘‘இப்போதைக்கு ரொம்ப நுணுக்கமான எலக்ட்ரானிக் டிசைன்களை இந்தியாவில் தயாரிக்கிறது கஷ்டம். அதனால, ஒரு சீன நிறுவனத்துக்கிட்ட பேசியிருக்கோம். அங்க பாகங்களை உருவாக்கி இங்கே பொருத்திக்கப் போறோம். கட்டை விரலை லேசா அசைச்சா நம்ம கார் கதவு திறக்குற காலம் ரொம்ப தூரத்தில் இல்லை. அப்படி ஒரு புரட்சியை இந்தியாதான் ஏற்படுத்திச்சுன்னு வரலாறு பேசும் பாருங்க!’’ என்கிறார் ரோஹில்தேவ் நம்பிக்கையோடு. எல்லாம் சரி, இவ்வளவு ஆர்வத்தோட இருக்குற பிள்ளைக்கு அந்த விசா விஷயத்தில் நாடே பின் நின்றிருக்க வேண்டாமா?

இதைக் கட்டை விரல்ல பொருத்திக்கிட்டா போதும். அந்த விரலால் மற்ற நாலு விரல்களைத் தொடுறதின் மூலமாவே டி.வியை இயக்கலாம்.  கம்ப்யூட்டர், மியூசிக் சிஸ்டம், மொபைல் போன்... இப்படி எல்லா கருவிகளையும் நம்ம விரலசைவுல இயங்க வைக்கும்!

கோகுலவாச நவநீதன்