தெகிடி



‘இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறோமே’ என்ற சிந்தனையே இல்லாமல், ஒரு த்ரில்லரை வழங்கியிருப்பதில் தொடங்குகிறது ‘தெகிடி’யின் சிறப்பு. ராஜேஷ்குமார் நாவல்களின் சாயலில், தியேட்டரை விட்டு இரண்டே மணி நேரத்தில் நம்மை அனுப்பி வைக்கும் த்ரில்லர்.

 கிரிமினாலஜி படித்த அசோக் செல்வனுக்கு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. தனித்தனியாக சில நபர்களைப் பின் தொடர்ந்து, அவர்களின் ஆதி அந்தமான தகவல்களை சேகரிக்கும் அசைன்மென்ட். கருமமே கண்ணாக ஹீரோ ஒளிந்து ஒளிந்து அவர்கள் பற்றி செய்தி சேகரித்துத் தர, குறிப்பிட்ட இடைவெளியில் அவர்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்பட, ‘அடடா...’ எனப் பதறும் அசோக், கொலைக்குக் காரணமானவர்களை கண்டுபிடிப்பதுதான் மீதி த்ரில்.

அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பும், குற்றத்தின் பின்னணியில் இவர் இருப்பாரோ என எல்லாரையுமே சந்தேகிக்க வைக்கும் திரைக்கதையும் படத்தின் பலம். ஹீரோவாக அசோக் செல்வன், சிரிக்க மறுக்கிறார். ரொம்பவே அடக்கி வாசிக்கிறார் என்றாலும் அதுவே அந்த டிடெக்டிவ் கேரக்டருக்கு அட்டகாசமாகப் பொருந்துகிறது. நண்பனாக காமெடி கலந்த குணச்சித்திரத்திற்கு காளி கச்சிதம். ஒருவர் மற்றவரால் கவனிக்கப்படுவதும் பின்தொடரப்படுவதும் நிச்சயம் சுறுசுறுப்பு ஏற்றுகிறது. கொல்லப்படுவது சாதாரண மக்களாக இருப்பது இன்னும் பயம் கூட்டுகிறது.

ஹீரோயினை இடைச்செருகலாக வைக்காமல், கதையின் நகர்விலேயே அவரையும் முக்கியப்படுத்தியிருப்பது அறிமுக இயக்குநர் ரமேஷின் புத்திசாலித்தனம். அசோக் செல்வன் - ஜனனியின் அறிமுகத் தொடர்பில் சுவாரஸ்ய வசனங்கள் நிறைய. அந்தக் காட்சிகளில் இன்னும் உற்சாகச் சுவடு பதித்திருக்கலாம் ஜனனி. திடீரென பத்து நிமிஷத்திற்கு ஒரு தடவை பாடல் காட்சிகள் வருவது கொஞ்சம் அதிகம்தான். ஜனனி, அத்தனை பெரிய கண்களில் உணர்ச்சி களைக் காட்ட இன்னும் இடம் இருக்கே... கவனிக்கலாமே!

‘பீட்சா’, ‘வில்லா’ படங்களில் சில காட்சிகளில் வந்து போன ஜெயக்குமாருக்கு இதில் முக்கியமான ரோல். உடல்மொழியில் கொஞ்சம் முயன்றால் இன்னொரு நாசர். பாதிப் படத்தில் ஒட்டிக்கொள்கிறார் ஜெயபிரகாஷ். நரைத்த புருவம், அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு, அலட்டல் இல்லாத நடிப்பு என ஜஸ்ட் லைக் தட் மின்னுகிறார் ஜே.பி. சிரீயஸான படத்தில் சிரிப்பு எதுக்கு என யோசித்திருக்கிறார்கள். பலன், சும்மாநாச்சுக்கும் கூட காமெடி இல்லை.

படம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் நடக்காதபோது, நண்பனிடம் ஹீரோ, ‘எனக்கு மட்டும் ஏண்டா இப்படி நடக்குது’ என கேட்பது ரொம்பவே ஓவர். அடுத்து கொலையாகப் போகும் நபரை எச்சரிக்க ஹீரோ போன் செய்ய, அவர் அதை நம்ப மறுக்க, அதுவரை திரட்டிய அவரைப் பற்றிய அத்தனை தகவல்களையும் கடகடவென மூச்சு வாங்க ஒப்பிப்பது படு ரசனையான காட்சி.

படத்தில் கதை, காதல் இருக்கிறது. படம் முழுக்க ஒரு பெயரை அடிக்கடி உச்சரிக்கிறார்கள். அவர்தான் முக்கிய வில்லன் என கை காட்டி செத்துப்போகிறார்கள். அந்த மெயின் வில்லனேயே காட்டாமல் படத்தை முடிப்பது என்னங்க நியாயம்? விடை உள்ள கடைசி பக்கத்தை கிழித்துவிட்டு ஒரு நாவலை படிக்கச் சொல்லலாமா! தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மகா ஒத்துழைப்பு, இசையில் நிவாஸ் கே.பிரசன்னா க்யூட் ரகம்.‘தெகிடி’ வேகம் கொண்ட த்ரில்லர்!

- குங்குமம் விமர்சனக் குழு