வல்லினம்



விளையாட்டின் பின்னணியில் மனதுக்கு ஒட்டுதலான ஒரு கதை. ‘ஈரம்’ படத்தில் வித்தியாசமான த்ரில்லரால் கவனம் ஈர்த்த இயக்குநர் அறிவழகனின் முற்றிலும் வித்தியாசமான அடுத்த களம்.

‘வெண்ணிலா கபடி குழு’வுக்குப் பிறகு விளையாட்டை முன்னிலைப்படுத்தி வந்திருக்கும் வகையில் வெல்கம் டு வல்லினம்! கிரிக்கெட் தவிர, இந்தியாவில் கவனத்திற்கு உள்ளாகாமல் பல விளையாட்டுகள் இருப்பதை கொஞ்சம் சொல்லியிருப்பதில் இயக்குனர் அறிவழகனின் அக்கறை பளிச். நண்பர்களாக இருந்து நகுலனும், கிருஷ்ணாவும் கூடைப் பந்தில் அதிக கவனம் செலுத்த, திடீரென அதில் உயிர் துறக்கிறார் நண்பர். விளையாட்டே வேண்டாம் என முடிவெடுத்த நகுலை, சூழ்நிலை மீண்டும் கூடைப்பந்தில் கூட்டி வந்து சேர்க்கிறது. அவருக்கு இருக்கும் எதிர்ப்புகளை சமாளித்து, நகுல் வெற்றி பெற்றாரா என்பதுதான் மீதி விளையாட்டு!

ஆச்சரியப்படுத்தும் விதத்தில் மாறியிருக்கிறார் நகுலன். சினிமாவைப் புரிந்துகொண்ட விதம் அவரது உடல்மொழியில் அத்தனை அநாயசமாக வெளிப்படுகிறது. படம் முழுக்கவே நகுல் செம க்யூட். கூடைப்பந்தின் கை தேர்ந்த வீரராகவே மாறி விடுகிறார். இப்படி ஒரு ஈடுபாடும் திறனும் இன்றைய இளம் ஹீரோக்களிடம் காணப்படுவது அரிதே. திறம்பட ஆடும்போதும், விபத்துக்குப் பிறகு கூடைப்பந்தையே வெறுக்கும்போதும், இறுதியில் ஆவேசமாக இறங்கி அடிப்பதை பார்க்கும்போது நகுல் இன்னும் மேலே வரப்போவது வெளிப்படை.

பெரிதான ஹீரோயின் லட்சணங்கள் இல்லையென்றாலும் மிகையில்லாமல் மிளிர்கிறார் மிருதுளா. நகுல், மிருதுளா இரண்டு பேரின் இயல்பான பேச்சும், நெருக்கமும் அதிகபட்ச நாகரிகத்திற்கு உதாரணம். வெறும் கூடைப்பந்தில் விவரணையாக இல்லாமல், கிரிக்கெட் மீதான செல்வாக்கு, அதன் புகழ், அது அடைந்திருக்கும் பணபலம் என எல்லாவற்றையும் இயல்பாக முன்வைக்கிறார் இயக்குநர். கூடைப்பந்து விளையாட்டை காட்சிப்படுத்தியிருக்கும் வேகமும், பரபரப்பும், துடிப்பும் அழகு.

நகுலனின் நண்பனாக ஜெகன் ஈடு கொடுக்கிறார். சாருக்கு இது அருமையான வாய்ப்பு, விட்டு விடாமல் பிடித்திருக்கிறார். ‘கோச்’சாக அதுல் குல்கர்னியின் அனுபவம் பளிச்சிடுகிறது. வந்த கணத்தில் படத்தின் ஓட்டத்தை அழகாக திசை திருப்புகிறார் அவர். மிருதுளாவின் அப்பாவாக ஜெ.பி. அருமையாக நடிக்கிறார் என்றாலும், ரிலீசாகிற எல்லா படத்திலும் அவரே வந்துவிடுவதால், குழப்பமாக இருக்கிறது. கொஞ்ச நாள் சம்மர் வெக்கேஷன் போயிட்டு வாங்களேன் சார்.

நகுலனுடன் காதலை முறித்துக்கொள்வதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து மிருதுளாவின் அப்பா விளையாட்டுக்கு ஸ்பான்ஸர் செய்வது, காதலன் சென்ற கழிவறை வரைக்கும் காதலி பேசி பின்தொடர்வது சுவாரஸ்யம்தான்... ஆனால் லாஜிக்..? தமனின் இசையில் பாடல்கள் மகா இனிமை. பார்வதியின் வரி
களில் ‘அலை நுனி வரை தளும்புது நுரை... நகுலா’ என்ற பாடல் ஹிட் ரகம். படத்தின் அதி அற்புத அம்சம் ஒளிப்பதிவு.

பாஸ்கரின் கேமரா பதிவில் கல்லூரிக் காட்சியும், கூடைப்பந்தின் வசீகரமும் இயல்பான கதைக்கு உறுத்தல் இல்லாமல் அருமை. கடைசி நேர விளையாட்டு பரபரப்புக்கு பின்னணி இசையிலும் செம ஸ்கோர் செய்கிறது தமனின் திறமை.
‘வல்லினம்’, வசீகரம்!

- குங்குமம் விமர்சனக் குழு