
திருமணம் போன்ற விசேஷங்களுக்கு என்னதான் தங்க நகைகள் அணிந்தாலும், உடைக்கு மேட்ச்சாக கூடுதலாக ஒன்று இருப்பதையே விரும்புகிறார்கள் இன்றைய பெண்கள். முத்து, பவழம், பச்சைக்கல் என எல்லாமே காஸ்ட்லி அயிட்டங்கள். என்னதான் மாற்று?
‘‘கிரிஸ்டல் மாலையும் தோடுகளும் சரியான சாய்ஸ்’’ என்கிறார்கள் பொற்கொடியும் ஈஸ்வரியும்.
‘‘ரெண்டு பேரும் தோழிகள். கல்யாணமாகி, குழந்தை பிறந்த பிறகு வேலைக்குப் போக முடியலை. சுய உதவிக்குழுவுல சேர்ந்தோம். நிறைய பேருக்கு ஃபேஷன் நகைகள் பண்ணத் தெரிஞ்சிருக்கு. அதையே நாங்களும் பண்ண விரும்பலை. அப்பதான் கிரிஸ்டல் அயிட்டங்கள் பண்ற ஐடியா வந்தது. கடைகள்ல மட்டுமே கிரிஸ்டல் நகைகள் கிடைக்குது. அதைச் செய்யக் கத்துக்கிட்டு, நாங்க பிசினஸா பண்ணிட்டிருக்கோம். எல்லா கலர்கள்லயும், வேற வேற அளவுகள்லயும் கிடைக்கிற இது, எல்லா வயசுப் பெண்களுக்கும் ஏற்றது’’ என்கிற தோழிகள், குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே கிரிஸ்டல் நகைத் தயாரிப்பில் ஈடுபட வழிகளைக் காட்டுகிறார்கள்.
என்னென்ன தேவை?முதலீடு?‘‘விருப்பமான கலர்கள்ல, விருப்பமான அளவுகள் மற்றும் வடிவங்கள்ல கிரிஸ்டல் மணிகள், கோர்ப்பதற்கான ஒயர், கட்டிங் பிளேடு, கொக்கி, ஜாயின்ட், டாலர்கள்... எல்லாமே மணிகள் விற்பனை செய்ற கடைகள்ல கிடைக்கும். மொத்த முதலீடு 1000 ரூபாய் போதும்.’’
எத்தனை மாடல்? என்னென்ன செய்யலாம்?‘‘கழுத்துக்குப் போடற மாலை... அதுலயே ஒற்றை, ரெட்டைச் சரம் வச்சது, நெக்லஸ் மாடல்னு நிறைய... தோடுகள், பிரேஸ்லெட், கொலுசுனு கற்பனைக்கேத்தபடி என்ன வேணா செய்ய முடியும்.’’
விற்பனை வாய்ப்பு மற்றும் லாபம்?‘‘ஃபேன்சி கடைகள்லயும், கவரிங் நகைகள் விற்கிற கடைகள்லயும் கொடுக்கலாம். காலேஜ் பொண்ணுங்களுக்கும், வேலைக்குப் போறவங்களுக்கும் உடைக்கு மேட்ச்சா பண்ணிக் கொடுத்தா நல்லா விற்பனையாகும். ஒரு நாளைக்கு 20 & 30 மாலைகள் செய்யலாம். டிசைனைப் பொறுத்து 150 ரூபாய்லேர்ந்து 350 ரூபாய் வரைக்கும் விற்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்.’’
பயிற்சி?‘‘ஒரே நாள் பயிற்சிக்கு கட்டணம் 200 ரூபாய்.’’
ஆர்.வைதேகி