சில நாட்களுக்கு முன் அஜித்தின் மகள் அனோஷ்காவின் மூன்றாவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் விஜய்யும், சூர்யாவும் கலந்து கொண்டார்கள். அது ஒரு குடும்ப நிகழ்ச்சி என்பதால் இருவருமே தம்பதிகளாக வந்திருந்தார்கள். அப்போது நடந்த விஜய் அஜித் சந்திப்புகளில் அத்தனை முக்கியத்துவம் இல்லை. ஆனால் அதன்பிறகு சில நாட்களுக்குள் விஜய்யை அஜித் சென்று சந்தித்த நிகழ்ச்சியில் அதிக முக்கியத்துவம் இருக்கிறது.
விஜய்யின் ‘வேலாயுதமு’ம், அஜித்தின் ‘மங்காத்தா’வும் ஒரே நேரத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது. அதுவும் கடந்த வாரம் இரண்டு படத்தின் ஷூட்டிங்குகளுமே சென்னை மீனம்பாக்கத்தில் விமான நிலையத்துக்கு எதிரே அமைந்திருக்கும் பின்னி மில்லில் நடந்தது. வழக்கமாக இதுபோன்று இரண்டு ஹீரோக்களின் ஷூட்டிங்குகள் ஒரே இடத்தில் நடந்தால் நட்பு நிமித்தம் இருவரும் சந்தித்துப் பேசிக்கொள்வதுண்டு. ஆனால் இங்கு அஜித் விஜய் சந்திப்பு அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியமாக நீண்டதுதான் செய்திக்கான முக்கியத்துவத்தைத் தருகிறது.
பொதுவாக திரையுலகம் சம்பந்தமாகத்தான் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் சொன்னாலும், அவர்கள் அரசியல் பேசியதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதும் பலரது யூகமாக இருக்கிறது. தான் அரசியலுக்கு வர ஆசைப்படவில்லை என்று அஜித் பல சமயங்களில் தெரிவித்துவிட்டார். ‘விஜய்யின் அரசியல் தலையீடுகள் அவரது சினிமா வாழ்க்கையைப் பாதிக்கலாம் என்பதால் இப்போதைக்கு அந்த ஆசை வேண்டாம்’ என்று விஜய்க்கு அஜித் அறிவுறுத்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
புலனாய்வுப் பத்திரிகையாளர்களுக்குக் கூடத் தெரியாமல் நடந்த இந்த ரகசிய சந்திப்பைத் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு நிறையவே செய்திகள் இருக்கின்றன. விஜய் போல அஜித் அத்தனை அழுத்தமானவர் இல்லை. மனதில் பட்டதை தைரியமாக வெளியிடுபவர். ‘ரசிகர்களை சுயலாபத்துக்காக உபயோகப்படுத்த மாட்டேன்...’ என்று சமீபத்தில்தான் ரசிகர்களுக்கான தன் அறிக்கையில் தெள்ளத் தெளிவாகக் கூறியிருந்தார் அஜித். எனவே விஜய்க்கும் பக்குவமான ஆலோசனைகளையே அவர் சொல்லியிருக்கலாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
சித்தன்