கடுமையான விதிமுறைகளால் களையிழக்கும் ஜல்லிக்கட்டு!



      புத்தாண்டு பிறந்தாலே மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களைக் கொண்டாட்டம் பற்றிக்கொள்ளும். ஜனவரி தொடங்கி மே வரை கிராமத்துக்குக் கிராமம் நடக்கும் ஜல்லிக்கட்டே கொண்டாட்டத்துக்குக் காரணம். அலங்காநல்லூர், பாலமேடு, சிறாவயல், வேந்தன்பட்டி, திருவப்பூர் என 400&க்கும் அதிக கிராமங்களில் ஜல்லிக்கட்டு களை கட்டும். இந்த வீரவிளையாட்டை ரசிக்க, உலக நாடுகளில் இருந்தெல்லாம் ரசிகர்கள் குவிவார்கள்.

தமிழகத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு, கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைகளையும் சரிவையும் சந்தித்துவருகிறது. உச்ச நீதிமன்றமும் விலங்குகள் நலவாரியமும் கடினமான விதிமுறைகளை விதித்திருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள் இப்பகுதி மக்கள். இதனால் 200க்கும் அதிக கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

‘மாடுகளை வதைக்கிறார்கள், போதைப்பொருளை புகட்டுகிறார்கள், காயமாகி உயிர்ப்பலி ஏற்படுகிறது’ என்றெல்லாம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக குற்றப்பட்டியல் வாசிக்கிறது விலங்குகள் நல வாரியம். அதோடு, காளைகளை பயிற்சிபெற்ற வனவிலங்குகள் பட்டியலிலும் சேர்த்துவிட்டது. இதனால், சிங்கம், புலி போன்ற வனவிலங்குகளை வதைத்தால் என்ன தண்டனை கிடைக்குமோ, அந்த தண்டனை காளையை வதைப்பவர்களுக்கும் கிடைக்கும். இதோடு விடாமல், பக்கம் பக்கமாக இன்னும் பல விதிமுறைகள்.

‘‘ஜல்லிக்கட்டு நடத்துற இடத்தை கலெக்டர்தான் தீர்மானிக்கணும். கிராமத்தில இருந்து 2 லட்ச ரூபாயை மாவட்ட நிர்வாகத்துக்கு கட்டணும். 12க்கு 8 சைஸ்ல காளையோட முன்பக்கம், பின்பக்கத்தையெல்லாம் 16 கலர் போட்டோ எடுத்து, அதோட 500 ரூபாய் டி.டி எடுத்து விலங்குகள் நல வாரியத்தில பதிவு பண்ணி அனுமதி வாங்கணும். காளையை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தி, தகுதி இருந்தா அனுமதிப்பாங்க. அதோட, காளையை ஏத்திக்கிட்டு வர்ற லாரிகளோட பர்மிட்டை அந்த விண்ணப்பத்தில சேர்க்கணுமாம். ஒரு லாரியில ரெண்டு காளையைத்தான் ஏத்தணும். ஒரு மாட்டை ஒரு மஞ்சுவிரட்டுலதான் ஓட்டணும்.

 மஞ்சுவிரட்டு முடிஞ்ச பிறகும் காளையை மருத்துவப் பரிசோதனை செய்யணும்... இப்படி அவங்க விதிச்சிருக்கிற விதிமுறைகள் எதுவுமே நடைமுறைக்குப் பொருந்தாது. 2 லட்சம் ரூபா கட்டி அனுமதி வாங்குற அளவுக்கு பல கிராமங்கள்ல வசதியில்லே. அதிலயும் இவங்க குடுக்கிறாங்களே விண்ணப்பம். அதில மருந்துக்குக்கூட தமிழ் இல்லை.  எல்லாம் ஆங்கிலத்தில இருக்கு... கிராமத்தில இருக்கிறவங்க அதைப் படிச்சு எப்படி பூர்த்தி பண்ணமுடியும்?’’ என்று பிரச்னைகளை விவரிக்கிறார் வேந்தன்பட்டி ஜல்லிக்கட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர்.
‘‘ஜல்லிக்கட்டு மாடுன்னா சும்மா இல்லே சார்... பச்சைக்குழந்தை மாதிரி பராமரிப்போம். உழவுக்குக் கூட ஓட்டமாட்டோம். சத்தான உணவு குடுத்து வளப்போம். 1 லட்சம், 2 லட்சம் குடுத்து வாங்கி எப்படி சார் கொடுமைப்படுத்துவோம்? வாடிவாசல்ல இருந்து 10 மீட்டர் தூரத்துக்குள்ள அந்த மாட்டோட திமிலைப் பிடிக்கணும். அதைக் கடக்க 2 நிமிஷம்கூட ஆகாது. அதுக்குப்பெறகு அந்த மாட்டை கௌரவ அடையாளமா காலம் முழுதும் பராமரிப்போம்.

 கழுத்தில கட்டையைப் போட்டு வயல்ல உழவு ஓட்டுறதுகூட வதைதானே? ரேக்ளா ரேஸ்ல அடிச்சு விரட்டலயா? குதிரைப்பந்தயத்தை எப்படி அனுமதிக்கிறாங்க? கேரளாவில தினமும் ஆயிரக்கணக்கான மாட்டை வெட்டுறாங்க. அங்கேல்லாம் விலங்குகள் நலவாரியம் ஏன் நடவடிக்கை எடுக்கலே? இது எங்க பண்பாடு... இதை ஒடுக்க நினைக்கிறது நியாயமில்லே...’’ என்கிற ஸ்ரீதரின் குரலில் வெப்பம் தகிக்கிறது.

ஜல்லிக்கட்டு நடத்தும் கிராம கமிட்டி கலெக்டரிடம் கட்டுகிற 2 லட்சம் ரூபாய், ஜல்லிக்கட்டில் உயிரிழப்பவர்கள், காயம் அடைபவர்கள் குடும்பத்துக்கு பிரித்து வழங்கப்படும். சென்ற ஆண்டு, கிராமம் முழுமைக்கும் குரூப் இன்ஸூரன்ஸ் செய்துகொண்டு ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று அறிவித்தார்கள். பல கிராமங்கள் அவ்வாறு பிரீமியம் செலுத்தி ஜல்லிக்கட்டை நடத்தின. இந்தாண்டோ ரூ.2 லட்சம் கட்டியே ஆகவேண்டும் என்ற நெருக்கடி.

‘‘வழக்கமா 600 இடங்கள்ல ஜல்லிக்கட்டு நடக்கும். இப்போ 179 இடங்கள்ல மட்டுமே நடத்தணும்னு அறிவிச்சிருக்காங்க. பண்பாடு சார்ந்த விளையாட்டு. இதில மக்களோட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரணும்...’’ என்கிறார் தமிழக வீரவிளையாட்டுக்குழு தலைவர் பி.ராஜசேகர்.

அலங்காநல்லூரில் கடந்த ஆண்டு 497 காளைகள் பங்கேற்றன. இந்த ஆண்டு இதுவரை 176 காளைகள் மட்டுமே பங்கேற்பை உறுதி செய்துள்ளன. ‘‘இதுக்கு முன்னாடி 3 ஜல்லிக்கட்டுகள்ல எங்க காளை ஓடியிருக்கு. இந்த முறை 16 போட்டோ எடுக்கணும், டி.டி. எடுக்கணும்னு சொல்றாங்க. நமக்கு அந்த அளவுக்கு வசதியில்லே. அதனால இந்த வருஷம் நாங்க கலந்துக்கலே’’ என்கிறார்கள் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த செல்வம், மாரி சகோதரர்கள்.

‘‘முன்னெல்லாம் ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்கு ரெடி பண்ண மூவாயிரம் செலவாகும். இப்போ 15 ஆயிரம் தேவைப்படுது. வழக்கமா 10 காளை கொண்டுபோவேன். இப்போ 5 கூட ரெடி பண்ணமுடியாது போலிருக்கு’’ என்று வருந்துகிறார் மதிவாணன்.

‘‘ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மட்டுமில்லே... எங்க வழிபாட்டுச்சடங்கும் கூட. அலங்காநல்லூர்ல நடக்கிற ஜல்லிக்கட்டு, முனியாண்டி, முத்தாலம்மன், காளியம்மன், அய்யனார், கேட்டுக்கடை வினாயகர் கோயிலுக்குச் செலுத்துற காணிக்கை. பாலமேடு ஜல்லிக்கட்டு மஞ்சமலை மகாலிங்கசுவாமிக்கு செலுத்துற நேர்த்திக்கடன். ஜல்லிக்கட்டைத் தடுக்கிறது மக்களோட வழிபாட்டு உரிமையில தலையிடுறதுக்குச் சமம்’’ என்கிறார்கள் அலங்காநல்லூர் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் கோவிந்தராஜ் மற்றும் பாலமேடு மடத்துக்கமிட்டி பொருளாளர் மனோகரவேல் பாண்டியன்.

பொங்கல் நெருங்கிவிட்ட தருணத்தில், அலங்காநல்லூர் உள்பட ஜல்லிக்கட்டுக்குப் பெயர்பெற்ற எந்த ஊரிலும் பழைய அளவுக்கு கொண்டாட்டம் இல்லை. இனம்புரியாத சோகம் இழையோடுகிறது.

விடைபெறும் தருணத்தில், நம்மை நெருங்கிய வீரவிளையாட்டுக்குழுத் தலைவர் பி.ராஜசேகர் சொன்னார். ‘‘எந்த விளையாட்டுல சார் ரிஸ்க் இல்லே? கிரிக்கெட்ல பந்து வர்ற வேகத்துக்கு கொஞ்சம் இடம் மாறி பட்டா உயிரே போயிரும். கார் ரேஸ், பைக் ரேஸை எல்லாம் நாம அங்கீகரிக்கிறோம். இது எங்க மண்ணோட கலந்த விளையாட்டு. ஏகப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளோடதான் நடத்துறோம். சிலவேளை ஏதாவது விபரீதம் நடக்க வாய்ப்பிருக்கு. அதுக்காக, அர்த்தமில்லாத காரணங்களைச் சொல்லி இந்த விளையாட்டையே முடக்கப் பாக்கிறது என்ன நியாயம்? தமிழரோட பண்பாட்டை நம்ம முதல்வர் அளவுக்கு உணர்வுபூர்வமா அறிஞ்சவங்க யாருமில்லே... அவரு மனசுவச்சு இந்த விளையாட்டுக்கான விதிகளைத் தளர்த்தணும். காலம் முழுதும் நாங்க அவருக்கு நன்றியுள்ளவங்களா இருப்போம்...’’

 வெ.நீலகண்டன், ஆர்.பாலசரவணக்குமார்