மனம் ஒரு Search Engine



தீர்க்கமான பார்வை, அழுத்தமான தமிழ்-ஆங்கிலம், புள்ளிவிவரங்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிற தெளிவு, தலைமைத்துவ பண்புக்கு தம்மை அழைத்துச் செல்லும் பேச்சு... இதுதான் ஃபஜிலா ஆஸாத்.

சுயமுன்னேற்றத்திற்கான பேச்சாளர்... இணையப் பாதுகாப்பு இயலால் அங்கீகரிக்கப்பட்ட Ethical Hacker. கீழக்கரையில் பிறந்து, துபாயில் இருக்கிறார். பெண்களின் எதிர்காலம், முன்னேற்றம் எல்லாவற்றிலும் ஃபஜிலாவின் எண்ணங்கள் ஆக்கபூர்வமானவை.

‘‘நீங்கள் மனிதர்களிடம் காணப்படும் அச்சம், பாதுகாப்பின்மை பற்றி அதிகம் பேசி வந்திருக்கிறீர்கள். இவற்றை ஒதுக்கி விட்டு எப்படி முன்னேறுவது?’’‘‘உங்கள் அச்சங்களையும், பாதுகாப்பின்மையையும் நீங்கள் விட வேண்டிய அவசியமில்லை. ஆனால், உண்மையில் அப்படி ஒன்று இல்லவே இல்லை. நமது பிரார்த்தனைகள் பெரிதும் பயத்தால் வந்தவை. ‘அதைக் கொடுங்கள், இதைக் கொடுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று கோருவது தன்னைப் பராமரிக்க மட்டுமே. சிறு புழு, பூச்சிகள் கூட தங்கள் வாழ்வை தாங்களே கவனித்துக்கொள்கின்றன. ஆனால், நீங்கள் எல்லாவற்றிற்கும் கடவுளின் உதவி யோடு செயலாற்றுகிறீர்கள்.

பதற்றத்தோடு எந்தக் காரியம் செய்தாலும் நம் திறமை குறையத்தான் செய்யும். எல்லோரும் உங்களை அப்படியே புரிந்துகொண்டு செயல்பட வேண்டுமென நீங்கள் காத்திருப்பது பெருங்கனவு. அது நிகழப்போவதில்லை. உங்களின் குறைகளைச் சரிசெய்துகொண்டு இருந்தாலே போதுமானது.

உங்களுக்கு குறிப்பிட்ட மீன்தான் வேண்டும் என்று தண்ணீரில் வலை வீசிப் பாருங்கள். அந்த மீன் கிடைக்காமல், வேறு மீன்கள் மட்டுமே சிக்கலாம். அல்லது, அந்த மீனுடன் இன்னும் நூறு மீன்கள் சேர்ந்து சிக்கலாம். வாழ்க்கையும் அப்படித்தான். கேட்டது எதுவும் பரிசுப் பொட்டலம் கட்டப்பட்டு, உங்கள் முகவரிக்கு சேர்வதில்லை. தேவையற்றதைப் பார்த்து வெறுத்துக்கொண்டு இருப்பதை விட, தேவையானதைக் கண்டுபிடித்து எடுத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். 

மழைத்துளியை நீங்கள் கவனித்ததுண்டா? அந்தத் துளி ஓர் ஆற்றையே உண்டு பண்ணுகிறது. பள்ளத்தை உருவாக்குகிறது. பெருத்த ஓசையுடைய நீர்வீழ்ச்சியாகக் கூட மாறிவிடுகிறது. அதே போலத்தான் மனமும் பயத்தை பல விதங்களில் உண்டாக்குகிறது. உங்களது முழு கவனத்தையும் பிரச்னை மேல் வைத்து அமைதியாக உங்களுக்குள் ஒரு நீண்ட தேடலை ஆரம்பியுங்கள். விஷய ஞானத்தோடு கூடிய அமைதி, அலாதியான சக்தி வாய்ந்தது.

நம் மனது தனிமையாக இருக்கிற நிமிடங்களில் அதீத ஆற்றலோடு செயலாற்றி ஒரு ஜோசியக் கிளியின் லாவகத்தோடு தீர்வை எடுத்துத் தரும். மனசு என்பது ஏதோ எமோஷனலான சமாசாரம் மட்டுமில்லை! அது இணையதளத்தில் இருக்கிற சர்ச் எஞ்சின் மாதிரி. உங்களுக்குத் தேவையான எந்தத் தீர்வையும் தேடித் தரும்!’’‘‘நிறைய கல்வி நிலையங்களுக்குச் சென்று வந்திருக்கிறீர்கள். நீங்கள் காண்பது என்ன?’’

‘‘சுதந்திரம், ஒழுக்கம் இவை இரண்டையும் சரியானபடி தீர்மானிக்க வேண்டும். மாணவர்கள் சுதந்திரமாகக் கற்றுக்கொள்ளும் அதே வேளையில், உள்ளத்தில் ஓர் ஆழ்ந்த ஒழுங்கை வளப்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் பணிதான் மிகவும் முக்கியமானது. குழந்தைகள், பெற்றோர்களை விட ஆசிரியர்களுடன் அதிக நேரம்  செலவழிக்கிறார்கள்.

மொத்த வாழ்விற்கும் சேர்த்து அவர்கள் மாணவர்களைத் தயார் செய்ய வேண்டும். குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விட வேண்டும். நமக்குத் தேவை நம் கற்பனைகளின் குளோனிங்கா என்ன? நல்ல பிள்ளைகள்தானே!’’‘‘உங்கள் சமூகத்தில் நீங்கள் இவ்வளவு தூரம் செயல்பட எவ்விதம் அனுமதித்தார்கள்?’’

‘‘ஆச்சரியம். இப்படித்தான் ஒரு தவறான கற்பிதம் போல் ஆக்கப்பட்டிருக்கிறது. இங்கே நம் பாரதியாரைத் தெரிந்த அளவுக்கு, செல்லம்மா பாரதியின் அருமை பெருமைகளை அறிந்திருக்க மாட்டோம். காந்தியடிகளைப் பற்றி விஸ்தாரமாகத் தெரிந்த அளவுக்கு கஸ்தூரிபாயைப் பற்றித் தெரியாது. திடீரென்று எழுந்து காட்டுக்குள் போய்விட்ட சித்தார்த்தனின் பூர்வீகம் முழுவதும் நமக்குத் தெரியும். அதனால் கலங்கி, திகைத்து, மலைத்து நின்ற மனைவி யசோதரா பற்றி நாம் அறிந்தது கொஞ்சமே.

ஆனால், நபிகள் நாயகத்தின் கதீஜா நாயகி அவர்களின் பக்குவமான நடவடிக்கைகள், வியாபாரக் கூறுகள் இஸ்லாத்தில் விலாவாரியாக முழுமையாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எல்லோரும் உணர வேண்டிய கருத்துப் பேழை அவை. இஸ்லாத்தில் பெண்களுக்கான சிறப்பு உணரப்பட்டிருக்கிறது.

பெண்களை கௌரவப்படுத்துகிற சமூகம்தான் என்றைக்கும் முன் நிற்கிறது. எனது வளர்ச்சிக்கு என் கணவர் உட்பட யாரும் தடையாக இல்லை. எங்கேயிருந்தாலும், எந்த மதத்தில் இருந்தாலும் நம் சுதந்திரங்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில்தான் எல்லாமே இருக்கிறது!’’ என பேசி முடிக்கும் ஃபஜிலாவின் வார்த்தைகள் யதார்த்தம் தொடுகிறது!

கேட்டது எதுவும் பரிசுப் பொட்டலம் கட்டப்பட்டு, உங்கள் முகவரிக்கு சேர்வதில்லை

- நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்