ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 14

“ராமாயணம் என்கிற பெயரிலேயே காலம் ஒளிந்துள்ளது. ராமாயணத்தை ஒரு சொல்லாகக் கருதி சிந்திக்கும்போது கல்யாணம், உத்தராயணம், தட்சிணாயணம் என்று வேறு சில வார்த்தைகளும் நினைவுக்கு வரும். இதில் கல்யாணத்தை திருமணமாக நாம் பொருள் கொள்வோம்.

உண்மையில் கல்யாணம் என்பது ‘கலவிக்கான காலம்’ என்ற பொருளில் அமைந்த ஒரு சொல்லே! உத்தராயணம், தட்சிணாயணம் என்பவை நேராக நமக்குக் காலத்தைச் சுட்டிக் காட்டுபவை என்பது தெரியும். ஒரு ஆண்டின் பன்னிரண்டு மாதங்களை இரு கூறாகப் பிரித்து உத்தராயணம் ஒரு ஆறு மாதமும் தட்சிணாயணம் ஒரு ஆறு மாத காலமுமாகி உள்ளது.

 ஆக ‘அணம்’ எனும் சப்தத்தோடு முடியும் கல்யாணம், உத்தராயணம், தட்சிணாயணம் ஆகியவை காலத்தைச் சுட்டுவதாக இருக்க, ராமாயணம் மட்டும் எப்படி ராமனின் வரலாறு என்று இருக்க முடியும்? எனவே ‘ராமாயணம் வானவியல் சாஸ்திரத்தையும் உள்ளடக்கியது’ என்று வாதிட்ட அந்த நண்பர், தன் கருத்துக்கு வலிமை சேர்க்க ‘கடபயாதி’ என்னும் நமது வேத கணித முறையை துணைக்கு எடுத்துக்கொண்டு அதன் மூலம் எனக்கு சில புரிதல்களை ஏற்படுத்தினார்.

அந்த நண்பர், தமிழில் ‘அடி’ என்கிற சொல்லுக்கு பல பொருள் உள்ளதைச் சுட்டிக் காட்டினார். ஒரு அடி என்றால் அடிப்பது என்றும் பொருள்... 12 அங்குல நீளம் உடையது என்றும் பொருள்... பாதத்தின் பதிவு என்றும் பொருள்... எல்லாமே இடத்திற்கேற்ப பொருள் கொள்ளப்படும்.உண்மையில் ‘கடபயாதி’ (Kadapayathi) முறையில் அடி என்ற சொல்லை ‘அ+ஃட்+இ’ என்று பிரிக்க வேண்டும். இதில் ‘அ’வுக்கு மதிப்பு 1, ‘ஃட்’டுக்கு மதிப்பு 8, ‘இ’க்கு மதிப்பு 3. கூட்டினால் பன்னிரண்டு. ஒரு அடி பன்னிரண்டு அங்குலம் உடையது என்பது இதிலிருந்தே வந்தது என்ற நண்பர், ‘வார்த்தைகளுக்குள் நம் சான்றோர்கள் இப்படி நிறைய ரகசியங்களை ஒளித்து வைத்துள்ளனர்’ என்றார்.

‘அவர்கள் ஒளித்து வைக்கவில்லை... அது அப்படி இயல்பாக அமைந்து விட்டது என எடுத்துக்கொள்ளலாமா?’ என்று கேட்டேன். ‘அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்’ என்று கூறிய அந்த அன்பர், ‘தமிழ் இலக்கியங்களில் ஔவையாருக்கு தனி இடம் உண்டு. ஒரு பெண் துறவி இவர்! இவருக்கும் 108 என்கிற எண்ணுக்கும் கூட தொடர்பு உள்ளது’ என்றார்.’’  - கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

அனந்தகிருஷ்ணன் ஜாதகத்தைப் பார்த்த வள்ளுவரிடம் ஒரு பெரும் முகமாற்றம். அதிலும் அனந்தகிருஷ்ணன் ஆயுளும் அற்ப ஆயுளே - அதிலும் தன்னைவிட வேகமாக அகாலமாகப் போகிறார் - என்கிற அந்த உணர்தல் வள்ளுவரை வாயடைக்க வைத்துவிட்டது.அதனால் ஒரு ஆழ்ந்த மௌனம்!‘‘என்ன மிஸ்டர் வள்ளுவர்... மௌனமாகிட்டீங்க... எனிதிங்க் சீரியஸ்?’’ - கணபதி சுப்ரமணி யன் சரியாகவே கேட்டார்.

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லய்யா...’’‘‘இல்ல... இதை நான் நம்பமாட்டேன். எதுவா இருந்தாலும் சொல்லுங்க!’’‘‘சொல்றேன்... இந்த ஜாதகப்படி இவர் பிறந்த நாள், தேதி எல்லாம் சரிதானே?’’‘‘ஒரு விஷயத்தை மட்டும் க்ளியர் பண்ணிட்றேன். அந்தக் காலத்துல... அதாவது 1960கள்ல மூணு வயசு முடிஞ்சிருந்தாதான் ஸ்கூல் அட்மிஷன். ஒரு மாசம் குறைவா இருந்தா கூட சேர்க்க மாட்டாங்க. அதைத் தவிர்க்க ஸ்கூல்ல வாத்தியாரே ஒரு வழி சொன்னார். அனந்த கிருஷ்ணன் பிறந்த இதே தேதியில் இதே நேரத்துல மூணு மாசம் முந்தி பிறந்திருந்த ஒரு குழந்தைக்கு அட்மிஷன் போட்ட ஆசிரியர், இதே தேதிக்கு - அதாவது ‘மாசத்தை மட்டும் மாற்றிப் போட்டுக்குங்க... சட்டத்துக்கு சமாதானம் சொன்ன மாதிரியும் ஆச்சு.

 உங்க சிக்கலும் தீர்ந்துடும்’னார். அப்ப நிறைய பேரை இப்படித்தான் சேர்த்தாங்க. இப்ப இருக்கற மாதிரி பர்த் சர்ட்டிபிகேட்டுங்கறது ஒரு பெரிய விஷயமா அப்ப கிடையாது... இன்னிக்கு பர்த் சர்ட்டிபிகேட்தான் எல்லாம்!’’‘‘அப்ப இந்த தேதி இவர் வரையில பொய்யான தேதி... அப்படித்தானே?’’‘‘ஆமா... இதுல மாசத்தை மட்டும் மாத்திக்கிட்டா அதுதான் இவன் சரியான பிறந்த தேதி. அக்டோபர் மாசம்னு இருக்கறதை ஜூலைன்னு மாத்தி இவன் மூணு வயசைக் கடந்துட்டதா காமிச்சி ஸ்கூல்ல சேர்த்தோம்!’’

கணபதி சுப்ரமணியன் விளக்கம் தரவும் அப்பாடா என்ற நிம்மதிப் பெருமூச்சு வள்ளுவரிடம்.‘‘என்ன வள்ளுவர்?’’‘‘தப்பான தேதின்னு தெரிஞ்சும் ஜாதகம் கணிச்சா எப்படிங்க?’’
‘‘மாசத்த மாத்தி பதிஞ்சவன் நான். இங்க வீட்ல என் மனைவிக்குக் கூட தெரியாது. அதுதான் இந்த தேதிக்கே ஜாதகம் கணிச்சிருக்காங்க...’’
‘‘நல்லவேளை...’’

‘‘அப்படின்னா..?’’‘‘எப்படிச் சொல்வேன்... இந்த தேதிப்படி, நேரப்படி பிறந்திருந்தா இன்னிக்கே இந்த ஜாதகருக்கு மரணம்!’’வள்ளுவர் சொன்னதைக் கேட்டு மூவரும் ஸ்தம்பித்தனர். என்னதான் பேசுகிறார்கள் என்று மெல்ல எட்டிப் பார்த்து அவர்களை நோக்கி வந்த அனந்த கிருஷ்ணனுக்கும் திகைப்பு.  ‘‘மிஸ்டர் வள்ளுவர்... மரணத்தை நீங்க என்ன எமன் உங்க பேச்ச கேட்டு நடக்கறவன்ங்கற மாதிரியே குறிப்பிட்றீங்க. ஒருவருக்கு ஆயுள் இத்தன வருஷம்னு தோராயமாதான் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க என்ன நாள், மணி, நொடி சுத்தமா சொல்றீங்க... இது எப்படி சாத்தியம்?’’  

‘‘என் வரைல சாத்தியம். இந்த மாதிரி நான் ரொம்ப பேருக்குச் சொல்லி அப்படியே நடந்துருக்கு..!’’
‘‘அது எப்படி?’’‘‘கணக்குதாங்க...’’

‘‘அப்ப அந்தக் கணக்கை வச்சு எல்லாருடைய ஆயுளையும் சொல்லிட முடியுமா?’’‘‘இவ்வளவு முட்டாள்தனமாவா கேட்பீங்க. கணக்கு போடத் தெரிஞ்சா யார் வேணும்னாலும் சொல்லலாம். ஆனா ஜாதகத்துல ஒரு நொடி கூட தப்பு இருக்கக் கூடாது!’’‘‘அப்ப உங்க கணக்கு தப்பிட்டா ஜாதகம் தப்புன்னு சொல்லிடுவீங்க... இது நல்லா இருக்கே?’’
‘‘சரியான காலப்படி ஜாதகம் கணிக்கப்பட்டிருந்தா, நான் சரியா சொல்லிடுவேன்!’’

‘‘சரி... அனந்தகிருஷ்ணன் ஜாதகம் இது இல்லேன்னாலும், இந்த நாள் இதே நேரத்துல பிறந்த நபர் கூடதான் அனந்து படிச்சான். ஹை ஸ்கூல் வரை ஒண்ணா படிச்சாங்க. இப்பவும் தொடர்புலதான் இருக்காங்க. அனந்து அளவு பெரிய படிப்பு படிக்கல. ஒரு டிகிரி முடிச்சிட்டு, கவர்ன்மென்ட் ஜாப் கிடைக்கவும் சேர்ந்துட்டான். பேர் கூட கிருஷ்ணமூர்த்தின்னு நினைக்கறேன். அனந்தா! சரிதானே?’’

‘‘ஆமாம்ப்பா... இப்ப எதுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம்..?’’‘‘பொழுது போக வேண்டாமா... அப்புறம், வள்ளுவர் இருக்கும்போதே பல விஷயங்களை பேசி வச்சுக்கறது
நல்லதுதானே?’’‘‘அதான் கேமரால்லாம் ஆன்ல இருக்கா?’’

‘‘ஆமாம்... உன்கிட்ட கிருஷ்ணமூர்த்தி நம்பர் இருக்கா?’’‘‘அவ்வளவு தூரம் தொடர்பில்லப்பா. எப்பவாவது எங்கேயாவது பார்த்தா ‘அனந்தா’ன்னு ஓடி வருவான்; நானும் பேசுவேன்... அவ்வளவுதான்!’’அனந்தகிருஷ்ணன் பதிலைத் தொடர்ந்து வர்ஷன் தயாரானான்.

‘‘அய்யா வள்ளுவரே... ஒருத்தரோட மரணத்தை சொல்றது ஒண்ணும் சாதாரண விஷயமில்ல. நீங்க அதுல எக்ஸ்பர்ட்னா உங்க கணக்கை நிச்சயம் ஒருத்தர் எக்ஸ்பிளாய்ட் பண்ணி, அதை வச்சு வி.ஐ.பிக்களை எல்லாம் மிரட்ட முடியும். மிரட்டல்னா, தப்பான அர்த்தத்துல இல்லை. ஒரு திகைப்பை உருவாக்க முடியும். குறிப்பா பவர்ல இருக்கற அரசியல்வாதிகள் உங்கள தூக்கிட்டுப் போய், தங்களோட கஸ்டடில வச்சிருப்பாங்க. அவ்வளவு ஏன்... அமெரிக்க ஒபாமாவுல இருந்து பிரிட்டிஷ் மகாராணி வரை நீங்க லாக் ஆகியிருப்பீங்க. நாசாவுல வானத்தை ஆராய்ச்சி பண்ற ஒரு குரூப் உங்களை பிரிச்சு மேய்ஞ்சிருப்பாங்க!

ஒரு பிரபலமான கூல்ட்ரிங்ஸ் ஃபார்முலாவையே எப்படியெல்லாம் திருடலாம்னு அலையற உலகம் அய்யா இது! மரணப்புள்ளியை சொல்ல முடிஞ்ச உங்களை சாதாரணமா விட்டு வச்சிருப்பாங்களா என்ன?’’‘‘வர்ஷா... எதுக்கு இவ்வளவு வளவளன்னு? ஷார்ட்டா சொல்லு... நீ என்ன சொல்ல வர்றே?’’‘‘மரணப்புள்ளியை எல்லாம் துல்லியமா சொல்ல முடியாது. ஆயிரத்துல ஒருத்தருக்கு தற்
செயலா இவர் சொன்னபடி மரணம் ஏற்பட்டுருக்கலாம்!’’

‘‘இதுக்கு உங்க பதில் என்ன வள்ளுவரே...’’‘‘அதுக்கு முந்தி ஒரு கேள்வி... எங்க அப்பாவுக்கு எந்த ஆபத்தும் இல்லையே?’’ - ப்ரியா இடையிட்டாள்.‘‘இது உங்கப்பா ஜாதகமே இல்லாதப்ப உன் கேள்விக்கே இடமில்லை. அடுத்து, இதோட தொழில் ஸ்தானம் உங்கப்பா சொல்ற மாதிரி அரசுத் தொடர்புடையதாதான் இருக்கு. உங்கப்பா தனியார் நிறுவனத்துல வேலை பாக்கறவர். ஆகையால நீ கவலப்பட இடமேயில்ல. ஆனா, இந்த ஜாதகம்தான் அந்த கிருஷ்ணமூர்த்தி ஜாதகம்னா அவர் இன்னிக்கு இறந்தே தீருவார்! இந்த நாட்டுல ஜாதகம் பார்க்கத் தெரிஞ்சவங்க லட்சக்கணக்குல இருக்கலாம். நான் லட்சத்துல ஒருத்தன்.

நான் எப்படி உயிர் பிரியற நேரத்தை சரியா கண்டுபிடிச்சேன்ங்கறத சுருக்கமா சொல்லிட்றேன். எல்லோரும் உயிரோட இருக்கறவங்களுக்குதான் ஜாதகம் பார்ப்பாங்க. நான் ஆயிரம் இறந்த ஜாதகங்களை எடுத்து ஆராய்ச்சி செய்தேன். அப்ப அந்த ஜாதகரோட பிறந்த நேரம், இறந்த நேரம்... ரெண்டும் என் கைல இருந்தது. நொடி சுத்தமா கணக்குப் போட்டேன். ஆயுள் காரகனான சனி, லக்னாதிபதி, நடப்பு தசை, இறந்த அன்னிக்கான புக்தி, திதின்னு ஆறு அம்சங்களை மட்டும் எடுத்துக்கிட்டேன்.

அந்த நாள்ல இந்த மாதிரி கணக்கைப் போட்றது சாத்தியமில்ல. கூட்டிக் கழிக்கறதுக்குள்ள உயிர் போயிடும். இப்பதான் கம்ப்யூட்டர் வந்துடுச்சே! இந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்தக் கத்துக்கிட்டு, அந்த எந்திரத்துகிட்ட ஆயிரம் ஜாதகத்தையும் கொடுத்தேன். அது எனக்குக் கொடுத்த விடைல ஆயிரம் ஜாதகத்துலயும் சனியோட தொடர்பு உறுதியானது. அடுத்து லக்னாதிபதி தொடர்பு. இவங்க ரெண்டு பேர்தான் மரணத்தை முடிவு செய்ற பிரதான காரணகர்த்தர்கள். மற்ற கிரகங்கள் துணைக் காரணங்கள். மரணத்தைத் துல்லியமா கண்டுபிடிக்க முடியாதபடி செய்யற கிரகங்கள் இரண்டு. ஒண்ணு சூரியன். இன்னொண்ணு சந்திரன். இதுல சந்திரன்தான் என் வரையில முக்கியமானவன்.

பூமிக்கு ரொம்பப் பக்கத்துல இருக்கற கிரகம்... தேய்ஞ்சு தேய்ஞ்சு வளர்ற கிரகம்... ஒரு மனிதனோட மன அமைப்பைப் பிரதிபலிக்கற கிரகம். இந்த கிரகம் ஒரு ராசியை இரண்டரை நாள்ல கடந்துடுது. இதே ராசியை சனி கிரகம் கடக்க இரண்டரை வருஷம் ஆகுது. அப்ப இரண்டுக்குமான வேகம் எப்படின்னு பாருங்க... நிதானமான சனி கிரக கதிரும், வேகமான சந்திர கிரக கதிரும் சந்திக்கற புள்ளியில மனம் அடங்குது. மனம் அடங்கற அந்தப் புள்ளிதான் மரணப்புள்ளி. இதை ஜோதிடம் தெரிஞ்சவங்க வேகமா புரிஞ்சிப்பாங்க. உங்களுக்குக் கொஞ்சம் தலையை சுத்தும்...’’ - வள்ளுவர் பேசியது அவர் சொன்னது போலவே தலையைச் சுற்றும் விஷயமாகத்தான் தோன்றியது.

‘‘எல்லாம் சரிங்க... இதை ஏன் நீங்க யாருக்கும் கத்துத் தரலை? நான் சொன்ன மாதிரி நீங்க மரணத்தை சொல்ல முடிஞ்சவரா இருந்தா, இந்த உலகம் உங்களை விட்டு வச்சிருக்காதே..?’’ - வர்ஷன் கூட சரியாகத்தான் கேட்டான்.‘‘தம்பி.... என் ஜோசியம் சிலருக்கு நூறு சதவீதம் பலிச்சா, சிலர் வரையிலும் சுத்தமா பலிக்கறதில்ல. இது எனக்கே கூட ஆச்சரியம்தான். அந்த வகைல நான் சொல்லி பலிக்காம போகவும் இடமிருக்கறதாலதான் நீங்க சொல்ற மாதிரி நடக்கலையோ என்னவோ! அப்புறம் இன்னொரு விஷயமும் இருக்கு... என்னை என் விருப்பத்துக்கு மாறா பயன்படுத்த விரும்பி வந்தவங்க யாரும் உயிரோட இல்லை.

உதாரணமா ஒரு மந்திரி என்கிட்ட ஜாதகம் பாக்க விரும்பினார். அவர் பி.ஏ வந்து கேட்டார். நான் நேர்ல வரச் சொன்னேன். அவர் என்னை மந்திரி வீட்டுக்கு வரச் சொன்னார். நான் மறுத்திட்டேன். அந்த பி.ஏ என்கிட்ட மிரட்டலா பேசிட்டுப் போனார். போனவர் அப்புறம் வரவேயில்லை. விபத்துல இறந்துட்டார்.என்னை யார் பகைச்சாலும், என் விருப்பத்துக்கு எதிரா நடந்துக்கிட்டாலும் அவங்களுக்கு ஏதாவது ஆயிடுது. அதுதான் பல கோடி மதிப்புள்ள இந்தப் பெட்டியையும் காப்பாத்துச்சு. இல்லேன்னா ஒரு உருட்டுக் கட்டை போதுமே... என் வீடு புகுந்து என்னை அடிச்சுப் போட்டுட்டு பெட்டியை எடுத்துக்கிட்டுப் போக..?’’

- வள்ளுவர் கேட்ட கேள்வி வர்ஷனுக்கும் ஒரு விடையைத் தந்தது. எதற்காகத் தன் மூலம் பெட்டிக்கு எதிரிகள் வலை விரித்துள்ளனர் என்பதும் புரிந்தது.‘என்றால் இந்த வள்ளுவரை அந்த கூட்டம் வெகுகாலமாக கவனித்துக்கொண்டே இருந்திருக்க வேண்டும்’ என்பது அவனுக்கு உரைத்தது. எப்படிக் கேட்டாலும் திக்காமல் திணறாமல் பதில் தரும் அவர் தெளிவு, உண்மையில் அவனை அசர அடித்திருந்தது. ப்ரியா அசந்து போனதாக சொன்னதில் நிச்சயம் அர்த்தமிருக்கிறது.

இந்த வள்ளுவர் சாதாரண மனிதரல்ல... இவர் வசம் உள்ள அந்தப் பெட்டி, மற்றும் அதிலுள்ள வழிகாட்டும் ஏடுகளை விட - அவ்வளவு ஏன், காலப் பலகணியை விடவே இவர்தான் மதிப்பு மிக்கவர்’ - வர்ஷன் வள்ளுவரை மதிப்போடு பார்க்க ஆரம்பித்து, அப்படியே ப்ரியா காதருகில், ‘‘ப்ரியா... நீ இவரைப் பத்தி சொன்னது நூத்துக்கு நூறு உண்மை!’’ என்றான்.

அனந்தகிருஷ்ணனோ ஒரு சிக்கலில் புதையுண்டது போன்ற முகபாவனையில், ‘‘மிஸ்டர் வள்ளுவர்... அப்ப என் ஃப்ரெண்டு கிருஷ்ணமூர்த்தி என்னாவான்? அவனுக்கு உங்க ஜோசியம் பலிக்குமா, பலிக்காதா... எனக்கு படபடப்பா இருக்கு!’’ என்று தனது துடிப்பைக் காட்ட, ‘‘அவருக்கு போன் போடுங்க... அவர் இப்ப எப்படி இருக்கார்னு தெரிஞ்சாலே போதும். நான் உறுதியா சொல்லிடுவேன்’’ என்றார் வள்ளுவர்.

அனந்தகிருஷ்ணன் அங்கிருந்து விலக, வர்ஷன் ப்ரியாவோடு சற்று மறைவாகச் சென்று அவள் கைகளைத் தேடிப் பிடித்தவனாக சொன்னான். ‘‘ப்ரியா... இந்த வள்ளுவரை சாக விடக்கூடாது. இவர்கிட்ட நமக்கு இன்னும் ஏராளமான கேள்விகள் இருக்கு. நான் இப்ப சொல்றேன்... நம்ம உயிரைக் கொடுத்தாவது இவரைக் காப்பாத்திடணும்’’ என்றபோது அனந்தகிருஷ்ணன் திரும்பி
யிருந்தார். அவர் முகத்தில் சுரத்தில்லை. ஈன சுரத்தில் பேசவும் தொடங்கினார்.‘‘மிஸ்டர் வள்ளுவர், நீங்க ரொம்பவே கிரேட்! கிருஷ்ணமூர்த்தி இப்ப ஒரு கேன்சர் பேஷன்ட். சீரியஸ் கண்டிஷன்ல ஹாஸ்பிட்டல்ல இருக்கான்...’’ - எனவும், வர்ஷன் - ப்ரியா இருவர் இதயமும் ஒரு முறை நின்று பிறகு துடிக்க ஆரம்பித்தது!

மாதங்களில் இன்று

ஆவணி

ஆண்டின் ஐந்தாவது மாதம். தமிழில் இம்மாதத்தை மடங்கல் என்பார்கள். சூரியன் சிம்ம ராசியில் இருப்பார். மெல்ல மழைக்காலம் ஆரம்பிக்கும் மாதம் இது. வினாயகர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் பிறந்த மாதம்.

புரட்டாசி

ஆண்டின் ஆறாவது மாதம் இது. சூரியன் கன்னி ராசியில் இருப்பார். தமிழில் இம்மாதத்தை ‘கன்னி’ என்று அழைப்பார்கள். அறிவியல்படி பூமி சூரியனுக்கு அருகில் வரும் மாதம் இது. விவசாயம் முழுவீச்சில் நடைபெறும் மாதம் இது.

ஐப்பசி

ஆண்டின் ஏழாவது மாதம். சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பார். இம் மாதத்தின் தமிழ்ப் பெயர், ‘துலை’. மழை அதிகமாகப் பொழியும் மாதம் இது. நீர்நிலைகளில் பழைய தண்ணீர் அகன்று புதிய தண்ணீர் பிடிக்கும் அடைமழை மாதமாகும். அனைவருக்கும் பிடித்த தீபாவளி பண்டிகை இந்த மாதத்தில்தான் வரும். முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம் இருக்கும் மாதமும் இதுவே.

தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்