நேர்மைக்கு மரணம்தான் பரிசா?



அரசு எந்திரத்தின் அச்சாணி, அதிகாரிகள்தான். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நேர்மையாக, நியாயமாக அதிகாரிகள் செயல்பட்டால், மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். நாடும் வளரும். அதிகாரிகளை அரசியல்வாதிகள் கட்டுப்படுத்தி, நிர்வாகத்தை வளைத்து ‘வளம்’ பார்த்தால் அந்நாட்டுக்கு விமோசனமே கிடைக்காது. தமிழகம் அப்படியொரு இக்கட்டான நிலையில்தான் இருக்கிறது.

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியின் மரணம் இந்தச் சூழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. கடந்த வாரம் திருச்சி அரசு மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் நேரு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். சுகாதாரத்துறை அதிகாரி அறிவொளியின் மரணம் சர்ச்சையாகி இருக்கிறது. தொடரும் சம்பவங்கள், ‘அதிகாரி தற்கொலை’ என்று இருபது வரிகளில் முடிந்துபோகும் பத்திரிகைச் செய்திகளுக்குப் பின்னால் என்ன கொடூரம் இருக்குமோ என்ற பதைபதைப்பை உருவாக்குகிறது.

நேர்மையாகச் செயல்படுகிற அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள். கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்படுகிறார்கள். தனிமைப் படுத்தப்படுகிறார்கள். அனுசரித்துப் போனால்தான் நிம்மதியாக வேலை செய்ய முடியும் என்ற நிலையை வெளிப்படையாக நிறுவ முயற்சிக்கிறது ஆளும் வர்க்கம். என்னதான் நடக்கிறது இங்கு?‘‘ஊழலையும் முறைகேட்டையும் ஆட்சியாளர்கள் நிறுவனமயப்படுத்த முயற்சிக்கிறார்கள். இசைந்து போகும் அதிகாரிகள் சுகமாக இருக்கிறார்கள்.

மனசாட்சியோடு செயல்படுபவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அரசு எந்திரம் அரசியல்வாதிகள் கை நீட்டும் திசையில் பயணிக்கிறது. இதற்குத் துணை போகாத அதிகாரிகளைச் சொல்லி வைத்து மாற்றுகிறார்கள் முதலாளிகள். கிரானைட் ஊழலைப் பற்றி தொழில்துறை செயலாளருக்கு அறிக்கை அனுப்பிய மதுரை கலெக்டர் சகாயம், அடுத்த நாளே வேறு துறைக்கு மாற்றப்பட்டார். சத்துணவுப் பணியாளர்களை தகுதியின் அடிப்படையில் நியமித்த விருதுநகர் கலெக்டர் பாலாஜி, காத்திருப்பில் வைக்கப்பட்டார்.

முறைகேடாகப் பதுக்கி வைத்திருந்த 1.80 லட்சம் கிரானைட் கற்களை குளோபல் டெண்டர் மூலம் அதிக விலைக்கு விற்கலாம் என்றார் மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா. அவரையும் மாற்றினார்கள். முறைகேடான தாதுமணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ்குமார் காத்திருப்பில் வைக்கப்பட்டார்.

தரமில்லாமல் சாலை போட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்த சென்னை மாநகராட்சி துணை ஆணையர் விஜய் பிங்ளேவுக்கும் அதுதான் நேர்ந்தது. ஈரோடு கலெக்டராக இருந்த அனந்தகுமார், காளிங்கராயன் வாய்க்காலை மாசுபடுத்திய 15 தோல் தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தார். 36 மணி நேரத்தில் வேறு பணிக்கு மாற்றினார்கள்.

இப்படி நடக்கும் பந்தாடல்களைப் பார்க்கிற பிற அதிகாரிகள், ‘நமக்கேன் வம்பு’ என்று ஒதுங்குகிறார்கள்; அல்லது சொல்வதைச் செய்துவிட்டுப் போகிறார்கள். பெரும்பாலான அதிகாரிகள், தன்னளவில் நேர்மையாக இருக்கிறார்கள். தங்களுக்குக் கீழுள்ளவர்கள் எப்படிப் போனாலும் கவலைப்படுவதில்லை. இன்று அதுதான் நேர்மைக்கான இலக்கணம் என்றாகி விட்டது. தைரியமும் உறுதியும் இருப்பவர்களே சகித்துக்கொண்டு போராடுகிறார்கள்.  

பணி நியமனங்களில் பெரும் முறைகேடுகள் நடக்கின்றன. அதிகாரிகள் நேர்மையாக நியமனம் செய்ய முயன்றாலும் அரசியல்வாதிகள் விடுவதில்லை. இதுதான் நடைமுறை என்கிற பிம்பத்தை தங்களுக்கு இசைவான அதிகாரிகளின் துணையோடு அரசியல்வாதிகள் ஏற்படுத்த முனைகிறார்கள். ஊழலும் லஞ்சமும் கலாசாரமாக மாறிவரும் சூழலில் மக்கள் விழிக்காவிட்டால் நிலை மோசமாகும்’’ என்று எச்சரிக்கிறார், ‘சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க’ ஒருங்கிணைப்பாளரும் லஞ்ச ஊழல் ஒழிப்பு செயற்பாட்டாளருமான முகிலன்.

‘‘இந்தியா முழுவதுமே நேர்மையான அதிகாரிகள் மீதான ஒடுக்குமுறை ஒரு கருத் தாக்கமாக நிறுவப்பட்டு வருகிறது. 23 வருட அனுபவத்தில் 45 முறை பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் சண்டிகரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா. அங்கு ஆட்சி மாறியும் அவருக்கு டிரான்ஸ்பர் வருவது நிற்கவில்லை. 24 வருடத்தில் 25 டிரான்ஸ்பரை சந்தித்திருக்கிறார் சகாயம். ரவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மணல் கடத்தலைத் தடுத்த உ.பி. கலெக்டர் துர்காசக்தி நாக்பால் வெளிப்படையாக மிரட்டப்பட்டார். அவதூறு பரப்புவது, பிரச்னையை திசைமாற்றுவது என ஆளும் வர்க்கத்தினர் கைக்கொள்கிற வழிமுறைகள் மிரட்சியை உருவாக்குகின்றன.

தமிழகத்தில் சூழல் இன்னும் மோசம். வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி யின் மரணத்துக்குப் பிறகு, சுகாதாரத்துறை அதிகாரி அறிவொளியின் தற்கொலையும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. ‘எங்களுக்கு எதிராகச் செயல்பட்டால் இதுதான் நிலை’ என்று பிற அதிகாரிகளுக்கு விடப்படும் எச்சரிக்கையாக இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும். சிறுகச் சிறுக ஒலிக்கும் குரல்கள் ஒருங்கிணைய வேண்டும்’’ என்கிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ.

அரசு ஊழியர்களுக்காகச் செயல்படும் சங்கங்கள் நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்கவோ, அவர்களுக்காகக் குரல் கொடுக்கவோ ஏன் முன்வருவதில்லை? தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வியிடம் கேட்டோம்.‘‘அரசு அலுவலகங்களில் வேலைச்சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. கீழிருந்து மேல் மட்டம் வரையிலும் நிறைய நெருக்கடிகள். ஒரு அலுவலகம் எதற்காக இயங்குகிறதோ அதைச் செய்ய முடிவதில்லை. அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றவே அரசுத்துறை முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது.

பணிப்பளுவால் எல்லா நிலையிலும் அதிகாரிகள் திணறுகிறார்கள். மேல்மட்ட அதிகாரிகள் அரசியல்வாதிகளின் நெருக்கடிக்கு பணிய வேண்டியிருக்கிறது. அது கீழ்மட்டத்தில் எதிரொலிக்கிறது. ஏராளமான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. குறிப்பாக டிரைவர், வாட்ச்மேன், பியூன், ஸ்டெனோ, டைப்பிஸ்ட் உள்பட அலுவலகத்தின் இயக்கத்துக்கு அவசியமான பணியிடங்கள் ஒன்றரை லட்சத்துக்கும் மேல் காலி. பணி நியமனம், பணி உயர்வில் அரசியல் தலையீடு பெருகிவிட்டது.

முன்பெல்லாம் இதுமாதிரி நெருக்கடி இல்லை. 50 பேருக்கு வேலை கிடைத்தால் ஒன்றோ இரண்டோ பரிந்துரை மூலம் நிரப்பப்படும். இப்போது முழுமையாக அரசியல் புகுந்து விட்டது. எல்லாவற்றிலும் பணம் பார்க்க முயற்சிக்கிறார்கள். முறைகேடாகப் பணம் கொடுத்து வேலைக்கு வருபவர்கள் முறைகேடு களுக்குத் துணை போகிறார்கள்.

அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்குப் பிரச்னைகள் வரும்போது சங்கம் குரல் கொடுக்கவே செய்கிறது. ஆனால் துறைகளில் உள்ள சங்கங்கள் அதை முன்னெடுத்துச் செல்வதில்லை. உள்ளேயே விவகாரங்கள் முடிந்து போகின்றன. முழுமையான நிர்வாகச் சீர்திருத்தம் வந்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும். அதற்கான அழுத்தத்தை அரசு ஊழியர் சங்கம் உருவாக்கும்’’ என்கிறார் அவர்.

சங்கங்கள் உருவாக்குகிறதோ இல்லையோ, இதே நிலை தொடர்ந்தால் மக்கள் நிச்சயம் அழுத்தத்தை உருவாக்குவார்கள்!‘எங்களுக்கு எதிராகச் செயல்பட்டால் இதுதான் நிலை’ என்று பிற அதிகாரிகளுக்கு விடப்படும் எச்சரிக்கையாக இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

 வெ.நீலகண்டன்