எளிய மனிதர்களின் இனிய தோழர்!



“எனது எழுத்துக்கள் எந்தத் தனி மனிதரையும் தனிப்பட்ட முறையில் அலசுவதில்லை; ஆராய்வதில்லை. அவமதிப்பதில்லை. அப்படி நான் செய்துவிடுகிற பட்சத்தில் அதுவே என்னுடைய எழுத்துக்களின் வீழ்ச்சியாகும். இந்த எனது சுதந்திரத்தைக் குறித்து என்ன அபவாதங்கள் பேசினாலும் அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை;

என்னைக் கேள்வி கேட்கக்கூடிய தகுதியிலும் எவருமில்லை!’’ என கம்பீரமாகச் சொன்ன எழுத்தாளர் த.ஜெயகாந்தன், இன்று நம்மிடையே இல்லை. அவரது சித்திரத்தை சரியான வார்த்தைகளில் சொல்ல முடிந்த கட்டுரை இது. ‘கண்ணதாசன்’ இதழில் பி.ச.குப்புசாமி எழுதியது...

தமிழில் இலக்கியத்துறையில் ஒரு மேன்மக்கள் மரபைத் தொடர்ச்சியறாது நிலைநிறுத்துவதற்கு அவர் பிறந்திருக்கிறார். ஒரு நொடித்த குடும்பத்தில் பிறந்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், பால்யம் முதலே ஒரு மனித காம்பீர்யம் அவரிடம் கொடிகட்டிப் பறக்கிறது.ஒரு முறை பேச்சுவாக்கில், ‘‘எதையாவது நினைத்து வருந்துவதைக் காட்டிலும் செய்யத் தகாத காரியம் வேறு இல்லை’’ என்று சொன்னார். மகிழ்ச்சியை அவர் உள்ளம் அந்த அளவு விரும்புகிறது. ஆனால், நுட்பமான துன்பங்களை எல்லாம் மிக உணர்ந்து, உணர்ந்து அங்கே தைரியம் தருவது அவர் இலக்கியம்.

அவர் இந்தியாவின் மரபை நன்கு உணர்ந்த எழுத்தாளர். மனநிலைகளில் பண்டைய மகான்களின் சாயல் உள்ளவர். நவீன சமூகச் சிக்கல்களைத் திறம்பட ஆராயும் சித்தாந்த பலம் உடையவர். எது உலகை வென்றதோ, அதன் உட்பொருளை வெறுமனே படித்து மட்டும் தெரிந்து கொண்டவரல்லர்; தன் உள்ளுணர்ச்சியால் அதைப் போஷிப்பவர். வாழ்க்கையிலிருந்து ஒரு சக்தி மிக்க மொழியைக் கற்றவர்.

உடையலங்காரப் பிரியர். புது மோஸ்தராயினும், பழைய பாகையாயினும், அதைக் கவினுற அணிபவர். நீராடும் துறைகள் எல்லாம் அவருக்கு அனுபவச் சுரங்கங்கள். பழைய மண்டபங்களிலும், திறந்த வெளியிலும் தூங்கப் பிடிக்கும். மீசையை முறுக்கிக்கொண்டே இருப்பார். ‘எளிமை கண்டிரங்குவாய்’ என்றும், ‘ஏறு போல் நடையினாய்’ என்றும் பாரதி இனம் கண்ட உருவின் சாயல்களை அவரிடத்தே காணலாம்.

எழுத்தாளனுக்கு நேரிடுகிற தடைகளையெல்லாம் உடைத்துக் கொள்பவர் அவர். சமூக அவமானங்களுக்கு அஞ்சாதவர். கூர்ந்த மதி படைத்தவர். பரிசுகள் அவருக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால், தமிழில் சாகித்ய அகாடமி பரிசு அவருக்கு வழங்கப்பட்டபோது, பிறரை விடவும் அவருக்கு அது நன்கு பொருந்திப் பெருமை பெற்றது. சமூகத்தின் எல்லாத் தட்டு மேல் மனிதர்களுக்கும் அவர்பால் ராஜகுருவிடம் அரசன் கொள்கிற அச்சம் சற்று உண்டு. குடி படைகளுக்கு நெருங்கிய தோழர். எழுத்தாளனின் இவ்வித மாபெரும் உரு இந்தத் தமிழ்நாட்டில் எழுந்தது நமது பேறு. சட்டென்று கோபம் வந்துவிடும். ஒரு சிறு உறுத்தலையும் தாங்கிக்கொண்டு சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார். அதே சமயம், பல எளிய மனிதர்களோடும் மிக இணங்கி யிருக்கும் பண்பு கொண்டவர்.

அவரது பாத்திரங்கள் பெரிய விஷயங்களை அடையாளம் காட்டுபவர்கள். அவரது ஹென்றி யார்? வளர்ச்சிப்போக்கில் ஒரு குறிப்பிட்ட காலம் ஏசுநாதர் எங்கிருந்தார் என்று தெரியவில்லை என்கிறார்களே! எங்கோ போன அந்த ஏசுவின் இடைப்பக்குவம் ஞானமும் குழந்தைமையும் கலந்து வந்த ஹென்றியாக தென்னாற்காடு ஜில்லாவின் தமிழ் மண்ணை மிதித்ததாகச் சொல்லலாம் போல் தோன்றுகிறது.

அசல் கவிஞர். சாதாரணப் பேச்சுவார்த்தைகளிலும் கூட அற்புதமான வரிகள் தெறிக்கும். அவரது பொழுதுபோக்கே தனியே அமர்ந்து மனத்திலேயே கவி புனைந்து வாய்விட்டுப் பாடிக் கொண்டிருப்பதுதான். அவை யாவும் மரபுக் கவிதைகளாகத்தான் வருகின்றன. மனசுக்குப்பட்டு உண்மையாகச் சொன்னால் ஒழிய யாரும் அவரைப் பொய்யாகப் புகழ முடியாது. அவ்வளவு உஷாரான மனிதர். பழைய மரபையொட்டி அரசாங்கம் அவரைத் தனது ஆஸ்தானத்தில் ஏற்று அலங்கரித்துக் கொள்ளலாம். ஆனால், நாம் தருகிற எந்தப் பதவியும் அவரைக் கட்டுப்படுத்தாது. அவருடைய சிரமங்களில் தலையாயது கட்டுப்படுவது.

தன்னைப் பற்றியே நிறைய அவர் பேசுவார். அது அவர் தன்னை அறிந்து இன்பமுறும் தந்திரம்! தன்னை நன்கு அறிந்து கொண்டதால், அவர் பிறரைச் சடுதியில் அறிகிறார்! அவர் பாத்திரங்களின் மனங்களின் ஆழங்களும் மூலைகளும் கூட இதில் அடக்கம்!ஓர் இலக்கியவாதிக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. தமிழில், இலக்கியத்தரமான ழிஷீஸீயீவீநீtவீஷீஸீ -ஐ இவர்தான் துவக்கினார். எந்நிலையிலும் தனது அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யாதவர்.

வரம்புகளை நன்கு அறிந்து, அவற்றைத் தவறாது மதித்து ஒழுகுவதால், பிறரது தலையீடு என்கிற வில்லங்கம் இன்றி அவரது சுதந்திரம் தனித்து விளங்குகிறது. அவரது சுயேச்சையும் கட்டுப்பாடுகளும் மனம் போன போக்கில் அல்லாமல், ஆழ்ந்த உள்ளுணர்விலும், அலசிப் பார்த்துத் தெளிந்த தெளிவிலும் விளைவனவாகும்.

அவர் வசதியாக வாழ்ந்தவர் என்று சொல்ல முடியாது. ஆனால், அவர் தனது பயணத்தை ஆரம்பித்தபோதே, ‘‘கட்டை வண்டியிலும் போவேன்; காரிலும் போவேன்!’’ என்று பிரகடனம் செய்து விட்டவர். எனவே, என்றும் செல்வந்தனாக இருந்தவர். அவர் சம்பாதித்ததைக் காட்டிலும், ‘‘இது வேண்டாம்!’’ என்று ஒதுக்கிய சம்பாதனைகளின் கணக்கில் அவர் கோடீஸ்வரர்!