கிச்சன் to கிளினிக்



உணவு விழிப்புணர்வுத் தொடர்

அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்

உணவில் அசைவம் சாப்பிட வேண்டுமா... அல்லது, சைவம் சாப்பிட வேண்டுமா என்பது தனி மனிதனின் கருத்தையும், தேவையையும் பொறுத்தது. சைவம் மிகவும் உயரிய உணவு என்றோ, அசைவம் சிறந்த உணவு என்றோ ஆரோக்கியத்தின் அடிப்படையில் சொல்ல முடியாது. இரண்டு வகை உணவுகளிலும், நாம் எப்படி அதை எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து நன்மையும் உண்டு; தீமையும் உண்டு.

அசைவம் சாப்பிட்டால் கொலஸ்டிரால், இதய நோய், ரத்த அழுத்தம் என பல நோய்கள் வரிசை கட்டி வரும் அபாயம் இருப்பதாகச் சொல்வது எந்த அளவிற்கு உண்மை?நம்முடைய உணவு முறைதான் நோய்களுக்கு நேரடியான காரணமே தவிர, உணவுகள் அல்ல! நாம் ஏற்கனவே பார்த்த ஒரு உதாரணத்தை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும். இதயத்தில் அல்லது ரத்தத்தில் கொழுப்பு உருவாவதற்கோ அல்லது அடைப்பு ஏற்படுவதற்கோ கொழுப்பு அதிகமுள்ள உணவு களே காரணம் என்று மருத்துவ விஞ்ஞானிகளும், பன்னாட்டு மருந்து நிறுவனத்தினரும் கூறிவருகிறார்கள்.

ஆட்டினுடைய உடல் அமைப்பில் இயல்பாகவே கொழுப்பு அதிகமாக இருக்கும். உடலில் எந்த அளவு தசை இருக்கிறதோ, அதே அளவு கொழுப்பும் இருக்கும். இவ்வளவு கொழுப்பு உருவாவதற்கு ஆடு எவ்வளவு கொழுப்பை உணவாக உட்கொண்டிருக்க வேண்டும்?ஆனால், ஆடு சுத்த சைவம். சைவ உணவுகளை மட்டும் - அதிலும் இயற்கையான, சமைக்காத உணவுகளை மட்டுமே - ஆடுகள் சாப்பிடுகின்றன. ஆனால் இவ்வளவு கொழுப்பு ஆட்டிற்கு எங்கிருந்து வந்தது? கொழுப்பு தேவையென்றால் உடலே அதனை உருவாக்கிக் கொள்ளும். கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிட்டால் மட்டும்தான் கொழுப்புகள் உருவாகும் என்பது கற்பனைதான்.

நாம் உண்ணும் முறைதான் நோய்களை உருவாக்குகிறது. பசியில்லாத நேரத்தில் நீங்கள் சாப்பிடும் உணவு சைவமாக இருந்தால் கூட, அதிலிருந்து கொழுப்பு உருவாக வாய்ப்பிருக்கிறது. பசியோடு இருக்கும் நேரத்தில் நீங்கள் சாப்பிடும் உணவு அசைவமாக, கொழுப்பு அதிகம் இருக்கும் உணவாக இருந்தாலும், அதிலிருந்து உடலிற்குத் தேவையில்லாத கொழுப்பு உருவாகாது.

அதே போல, கொழுப்பு என்றவுடன் நமக்கு ஒரு வித பயம் ஏற்படுகிறது. உண்மையில் கொழுப்பு உடலிற்கு அவசியமான சத்துக்களில் ஒன்று. நம் உடலின் உள்ளுறுப்புகளின் முழுமையான உருவாக்கத்திற்கு கொழுப்பு அவசியம். நம் உடலின் ஒவ்வொரு செல்லும் கொழுப்பால் ஆன வெளிச்சுவரைக் கொண்டிருக்கிறது. கொழுப்பைக் குறைக்கிறேன் பேர்வழி என கடுமையான டயட்டில் இருப்பது, காம்பவுண்ட் சுவரே இல்லாமல் வீடு கட்டுவது போன்ற பாதுகாப்பற்ற நிலைக்கு நம் உடலை ஆளாக்கிவிடும்.

நம் உடலிற்கு போதுமான கொழுப்பு கிடைக்காமல் நம் செல்கள் எல்லாம் சுவரில்லாத செல்களாக இருந்தால் என்ன ஆவோம்? செல்களின் பாதுகாப்பு ஏற்பாடு தான் இந்தச் சுவர். அப்படி ஒருவேளை நிகழ்ந்தால், மிகச் சுலபமாக புற்றுநோய் தாக்கும் ஆபத்து இருக்கிறது என்கிறார் மருத்துவப் பேராசிரியரும் இதய நோய் நிபுணருமான டாக்டர் ஹெக்டே.

கொழுப்பு என்ற சொல்லைக் கேட்டவுடன் எழும் பயத்தை முதலில் உதறித் தள்ளுங்கள். உடலிற்குத் தேவையில்லாமல் கழிவாக உருவாகும் கொழுப்புதான் ஆபத்தானது. இப்படிக் கழிவுக் கொழுப்பு உருவாகாமல் தடுக்க வேண்டுமானால் பசியில்லாமலும், தேவைக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது; அவ்வளவுதான்! மற்றபடி சாப்பிடும் பொருள் சைவமாகவோ, அசைவமாகவோ இருக்கலாம்.

அசைவம் சாப்பிட்டால் மனம் இயல்பை இழந்து வன்முறை எண்ணங்கள் தலைதூக்கும் என்ற கருத்தும் நம்மிடம் இருக்கிறது. ஆன்மிக ரீதியாகவும் பல அமைப்புகள் இக்கருத்தை முன்வைக்கின்றன. உணவுகளின் சாரத்தை வைத்தே சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற மூவகைக் குணங்கள் உருவாவதாக கூறப்படுகிறது.

‘அசைவ உணவுகள் தமோ குணத்தைச் சார்ந்தவை. எனவே அவற்றை உட்கொள்வதால் ராட்சச குணம் வந்துவிடும், பிற நபர்களைத் துன்புறுத்தும் குணம் வந்து விடும்’ என்றும் நம்பப்படுகிறது. ஒரு தனிநபருக்கு ஆன்மிகப் பயிற்சி தரும்போது உணவுகளில் செய்யப்படும் மாறுதல்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதுதான். ஆனால் அதையே பொதுக்கருத்தாக மாற்றி, குணங்களுக்கும் உணவிற்கும் தொடர்பிருப்பதாகக் கூறுவது சிக்கலானது.

உலகில் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் இருநூறுக்கும் மேற்பட்ட மதங்கள் இருக்கின்றன. இவற்றில் ஆன்மிக உயர்ச்சிக்காக அசைவத்தைத் தவிர்க்கும் மதங்களும் உண்டு; அசைவத்தைத் தவிர்க்காத மதங்களும் அடக்கம். உலகம் முழுவதும் உள்ள ஞானிகளின் பட்டியலை எடுத்தால், அவர்களில் பாதிக்கும் மேல் அசைவம் சாப்பிடும் நபர்கள் இருப்பார்கள்.

சரி, இந்த விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரலாம். ஒரே ஒரு உதாரணம், உணவைப் பற்றி நமக்குப் புரிய வைக்கும். லட்சக்கணக்கான மனிதர்களைக் கொன்று குவித்து உலகையே நடுநடுங்க வைத்த ஹிட்லர் சைவ உணவாளர். ‘கருணை’ என்ற சொல் உச்சரிக்கப்படும்போது நம் நினைவில் நிழலாடுபவர் அன்னை தெரசா. அவர் அசைவம் உண்பவர். இந்த இரு ஆளுமைகளின் உணவுகள் அவர்களின் குணங்களில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது?

குணம் அல்லது ஒரு மனிதருடைய தன்மை என்பது, அவர் வாழ்கிற சமூகச் சூழலாலும், அகக் காரணிகளாலுமே தீர்மானிக்கப்படுகிறது. அதில் மிகப்பெரிய மாற்றத்தை உணவு ஏற்படுத்தி விடும் என்பது வெறும் நம்பிக்கை மட்டும்தானே தவிர, உண்மை இல்லை.ஆன்மிகம் என்றால் தமிழில் சித்தர்களைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது.

வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக அசைவம் பற்றிப் பேசுகிற சிவவாக்கியர், சைவம் - அசைவம் என்ற பாகுபாட்டையே அடியோடு மறுக்கிறார். ‘புலால் புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுறீர்’ என்று துவங்கும் சிவவாக்கியரின் பாடல், ‘நாம் குடித்து வளர்ந்த பால், பசுவின் ரத்தம் - அதுவும் அசைவம்தான்’ என்று கூறுகிறது. ‘சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே’ என்று முடிக்கிறார்.

உலகில் சைவம் என்று ஒன்றும் கிடையாது என்பதே சித்தர் மரபில் ஒன்று. சைவம் என்ற சொல், ஆன்மிகத்தில் உணவைக் குறிப்பதில்லை. மனிதனின் இயல்பைக் குறிக்கிறது. அதனை உணவில் இணைத்துக் குழம்ப வேண்டியதில்லை. ஆக, சைவமோ, அசைவமோ... உடல்நலத்திற்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உணவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்களுக்குத் தேவை இருக்கிறதா என்பது மட்டும்தான் இங்கு முக்கியம்.

உடலின் தேவையையும், மனதின் விருப்பத்தையும் இணைத்து சாப்பிடலாம். உணவுகள் உடல்நலத்தை மட்டுமே தரும்.சைவம், அசைவம் போலவே இன்னொரு விவாதமும் உண்டு. ‘சமைத்த உணவை விட, சமைக்காத உணவே சிறந்தது’ என்ற கருத்து. வாருங்கள்... அதையும் பார்த்து விடலாம்!உலகையே நடுநடுங்க வைத்த ஹிட்லர்சைவ உணவாளர். ‘கருணை‘யின் வடிவமாகவே வாழ்ந்த அன்னை தெரசா, அசைவம் உண்பவர். உணவு இவர்களின் குணங்களில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது?

மாதங்களில் இன்று

ஆனி

ஆண்டின் மூன்றாவது மாதம் இது. தமிழில் இம்மாதத்தை ‘ஆடவை’ என்கிறார்கள். சூரியன் மிதுன ராசியில் இருப்பார். சூரியனுடைய கதிர்நகர்வு வடக்குப் பாதை (உத்தராயணம்) முடிவிற்கு வரும் மாதம் இது. முதுவேனில் காலத்தின் முதல் மாதமும் கூட. ‘ஆடவை’ என பெயர் பெற்றதால் ஆடலரசன் நடராஜருக்கு உகந்த மாதம் இது. சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் விசேஷமான வைபவமாகும்.

ஆடி

ஆண்டின் நான்காவது மாதம் இது. தமிழில் ‘கடகம்’ என்கிறார்கள். சூரியன் கடக ராசியில் இருப்பார். சூரியனுடைய கதிர்நகர்வு தெற்குப் பாதையில் (தட்சிணாயணம்) தொடங்கும். கோடை முற்றிலும் முடிவுற்று சாரலும் காற்றும் அடிக்க ஆரம்பிக்கும் மாதம் ஆடி. பொதுவாக கடக ராசி என்பது நீர் ராசியாகும். வெப்ப கிரகமான சூரியன் நீர் ராசியில் பயணம் செய்வதால் காற்று அதிகமாகிறது என்பார்கள். விவசாயப் பணிகளைத் தொடங்குவதற்கு உகந்த மாதம்.

(தொடர்ந்து பேசுவோம்...)