விஜய்யை பார்த்து வியந்த ஸ்ரீதேவி!



சம்மரில் சீறிப் பாய பரபரக்கிறது விஜய்யின் ‘புலி’. ‘‘உங்களோட ‘இம்சை அரச’னை குழந்தைகள், ஃபேமிலி ஆடியன்ஸ்னு கூட்டமா தியேட்டருக்கு வந்து ரசிச்சாங்க. அப்படி ஒரு ஸ்டோரி புடிங்க..!’’ என சிம்புதேவனுக்கு விஜய் கொடுத்த உற்சாகம்தான், இதுவரை பார்க்காத இப்படியொரு ஃபேன்டஸி கதை உருவாகக் காரணம். விஜய்க்கு 58வது படம் வேறு... எப்படியிருக்கும் எதிர்பார்ப்பு!

* நவம்பரில் படு சிம்பிளான பூஜையோடு ஆரம்பித்தது ‘புலி’. ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யாராம் ஸ்டூடியோவில் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் பிரமாண்ட செட் ஒன்றை உருவாக்க, அதில் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார்கள்.

செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, கமலின் ‘தசாவதாரம்’ படங்களின் படப்பிடிப்பு இங்கேதான் நடந்தது. ‘மகதீரா’ போல சரித்திரம், நிகழ்காலம் என இரண்டு காலகட்டங்களில் கதை நகர்கிறது. ஹன்சிகா இதில் இளவரசி. ‘‘படப்பிடிப்பில் நான் இளவரசியாக உணர்கிறேன்’’ என ஹன்ஸ் கூட இதை ஹேப்பியாக ஃபீல் பண்ணியிருந்தார். சுதீப், ஸ்ரீதேவி, பிரபு, தம்பிராமையா, சத்யன், ரோபோ சங்கர் என ஸ்டார்கள் எண்ணிக்கை அதிகம்.

* செகண்ட் இன்னிங்ஸாக ரீ-என்ட்ரி ஆகிறார் ஸ்ரீதேவி. ‘‘தென்னிந்தியாவின் பெரிய ஹீரோ விஜய். அவரின் எளிமை பிடித்திருந்ததால் மீண்டும் நடிக்க சம்மதித்தேன். படப்பிடிப்பில் எல்லோரும் என்னிடம் அன்பாக இருக்கிறார்கள்.

இப்போதுள்ள வொர்க்கிங் ஸ்டைலை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. தொடர்ந்து தமிழ்ப் படம் பண்ண வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியிருக்கிறது’’ என நெகிழ்கிறார் ஸ்ரீதேவி. ஷூட்டிங் பிரேக்கில் மொபைல் அல்லது ஐபேடும் கையுமாக அமைதி காக்கும் விஜய், ஷாட் வரும்போது, ஒரே டேக்கில் ஓகே வாங்கி நடிப்பதும், டான்ஸில் செமயாகக் கலக்குவதும் பார்த்து வியந்து விட்டாராம் ஸ்ரீதேவி.

* கேரளாவின் தலக்கோணத்தில் காடும் ஏரியும் சங்க மிக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் க்ளைமேக்ஸ் ஷூட் நடந்துவருகிறது. அக்ஷய்குமார், மகேஷ்பாபு என ஸ்டேட் விட்டு ஸ்டேட் பறந்துகொண்டிருந்தாலும், இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனின் டெடிகேஷனைக் கண்டு யூனிட்டே பிரமித்திருக்கிறது.

* ‘வேலாயுதம்’ படத்திற்குப் பிறகு விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் ஹன்சிகா. பாடல் காட்சிகளில் விஜய்யின் ஸ்பீடுக்கு ஏற்ப மூவ்மென்ட்ஸ்களை அமைத்திருக்க... தடுமாறி விட்டார் ஹன்ஸ். அவருக்காக மூவ்களை கொஞ்சம் மாற்றியமைத்து ஹேப்பி ஆக்கியிருக்கிறார் விஜய்.

* படத்தில் மொத்தம் 6 பாடல்கள். ஷூட்டிங் தொடக்கத்திலேயே இரண்டு பாடல்களை இசையமைத்துக் கொடுத்துவிட்டார் டி.எஸ்.பி. படத்தில் விஜய், ஸ்ருதிஹாசன் இருவரும் ஒரு பாடல் பாடியிருப்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்.

* கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பது தெரிந்ததே. ‘வேலாயுதம்’ படத்திற்கு அடுத்து அதிரப்பள்ளி அருவி ஸ்பாட் பக்கம் ‘புலி’க்காகத்தான் விஜய் வந்திருந்தார். 20 குதிரைகள் வரவழைக்கப்பட்டு, அங்கே ஷூட் செய்திருக்கிறார்கள்.

* விஜய்க்கு இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரு கெட் அப்களாம். இரண்டு தோற்றத்திலும் செம வித்தியாசங்கள் காட்டியிருக்கிறாராம் தளபதி.

* ஃபர்ஸ்ட் லுக் டீஸரை ஏப்ரல் 14ல் வெளியிட திட்டமிட்டனர் படக்குழுவினர். ஆனால், க்ளைமேக்ஸ் ஷூட் பரபரத்துக்கொண்டிருப்பதால் டீஸரை தள்ளிப்போட்டிருக்கிறார்கள். விஜய்யின் பிறந்தநாள் பரிசாகவோ அல்லது அதற்கு முன்போ ‘புலி’ பாயலாம்!

-மை.பாரதிராஜா