நாகூர் ஹனிபா மறைந்தார் என்ற செய்தியைக் கேட்கும்போது மனம் துணுக்குறாமல் இருக்கவே முடியாது. எத்தனையோ காலமாக தன் வெண்கலக் குரல் மூலம் நம்மை வசியம் செய்த அவரைப் பற்றி இங்கே நினைவு கூர்கிறார், இயக்குநர் சுகா.‘‘கலைஞர்களின் காலம் முடிவு பெறும்போது தாங்க முடியவில்லை. ஹனிபாவை ஞாபகத்தில் இருத்திக்கொள்ளவும், ஆராதிக்கவும் காரணங்கள் உண்டு. அவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் பிரசார பாடகராக இருந்திருக்கிறார்.

ஆனால், எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களாலும் ரசிக்கப்பட்டது அவர் குரல். இதுதவிர, அவர் தி.மு.க.வின் பிரசார பாடகராகவும் இருந்திருக்கிறார். ஆயினும், அனைத்துக் கட்சியினரின் ஆதரவும் அவரது இனிய குரலுக்கு உண்டு. ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று அவர் உச்சஸ்தாயியில் ஆரம்பிக்கும்போது உற்சாகக் கைதட்டல் கூரையைப் பிளக்கும். அந்த முகத்தில் அந்த மேலான குரலுக்குரிய மேதைமைத்தனத்தைக் கண்டதேயில்லை.
குரலை நினைத்த அச்சில் வார்த்துத் தருவது சாதாரண காரியமில்லை. ஐயா அதை எளிமையாக, இனிமையாக செய்து காட்டினார். எங்கள் வாத்தியார் பாலுமகேந்திராவின் ‘ராமன் அப்துல்லா’வில் அவர் ‘உன் மதமா... என் மதமா... ஆண்டவன் எந்த மதம்?’ என்ற பாடலைப் பாடினார். ‘நான் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எனக்குப் பிடித்தது இது’ என ஒலிப்பதிவின்போதே சொன்னார். எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்த கலைஞராக அவர் இருப்பதன் காரணம் அப்போதுதான் விளங்கியது!’’
- நா.கதிர்வேலன்