மன்மத வருடம்... ஒரு டைப்பான வருடமா?



நந்தன, விஜய, ஜய என்று வருடங்களுக்கு பெயர் வந்தபோதெல்லாம் ஒண்ணும் தெரியலைங்க. ஆனால் இப்போது வரப் போவது மன்மத ஆண்டாம். ‘அப்படீன்னா இது அந்த டைப்பான வருஷமா சார்? முருங்கைக்கா விலை ஏறுமா?

நிறைய பாத்ரூம் வீடியோ ரிலீஸ் ஆகுமா? ஜன்னலைத் திறக்குற சாமியாருங்க எக்கச்சக்கமா சிக்குவாங்களா?’ என வாட்ஸ்அப் விடலைகள் தொல்லை தாங்கலை. அவர்கள் மேல் பழியைப் போட்டு விசாரிக்கக் கிளம்பினோம்...

‘‘காதல் கடவுளான மன்மத னுக்கும் இந்த வருடத்துக்கும் சம்மந்தமில்லைங்க. ‘மன்மதம்’னா இளமைன்னு அர்த்தம். ஆக, இளமையின் துள்ளல் தூக்கலா இருக்கற வருஷம் இது. மழை, காற்று, போர்... இதெல்லாமே இளமைக்கு உரிய குணங்கள். இந்த வருஷத்துல எப்பவும் இல்லாத அளவுக்கு மழை பெய்யும், காத்து வீசும், போர் மூளும்னு இடைக்காட்டு சித்தர் அந்தக் காலத்திலேயே எழுதி வச்சிருக்கார்!’’ என திகில் தந்து துவங்கினார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.

‘‘இந்த வருடம் மழை, காற்று காரணமா நாட்டு வளமும் மக்கள்கிட்ட மகிழ்ச்சியும் நிறைஞ்சிருக்கும். ஆனா, சீனாவில் போர் மூள வாய்ப்பிருக்கு. இந்த வருஷத்துல நடக்குற கல்யாணங்கள் பெரும்பாலும் காதல் கல்யாணங்களாவும், காதல் கல்யாணங்கள் பெரும்பாலும் கலப்புத் திருமணங்களாவும் இருக்கும். குறிப்பா, 1978 முதல் 1985 வரை பிறந்தவங்க காதல் திருமணம் பண்ண வாய்ப்பு அதிகம். அதுவும் பெத்தவங்க சம்மதத்தோடவே கல்யாணம் நடக்கும்!’’ என்றார் அவர் உற்சாகமாக!

காதல் அதிகமானா, அது சம்மந்தப்பட்ட வெட்டுக்குத்தும் அதிகமாகணுமே! அதே மாதிரி தம்பதிகளுக்குள்ள காதல் மீட்டர் ஏறினா விவாகரத்து குறையணுமே! ‘சீறுவார்’ எனத் தெரிந்தே வழக்கறிஞர் அருள்மொழியிடம் இதைக் கேட்டோம்...‘‘முதல்ல இதெல்லாம் தமிழ் வருடம்... தமிழ்ப் புத்தாண்டுன்னு சொல்றதை நிறுத்தணும்.

சமஸ்கிருத ஆண்டுன்னு வேணும்னா சொல்றவங்க சொல்லிக்கட்டும். இதுவரை இந்த சமஸ்கிருத வருஷங்களோட பேருக்கு ஏத்த மாதிரி ஏதாவது நடந்திருக்கா? பஞ்ச வருடம்னு ஒண்ணு சொல்றாங்க. அந்த வருஷத்துல பஞ்சமா வந்துடுச்சு? போன வருஷம் கூட ஜெய வருடம்... அதாவது வெற்றி வருஷம்னு சொன்னாங்க. கிரிக்கெட் உலகக் கோப்பையில இந்தியா தோற்கலையா?

இந்தியாவைப் பொறுத்தவரை எல்லா விஷயங்களும் வருஷா வருஷம் அதிகரிச்சிக்கிட்டுத்தான் இருக்கு. காதல் திருமணங்களும் கலப்புத் திருமணங்களும் கூட அதிகமாகத்தான் செய்யும். மன்மத வருடத்தில்தான் அது நடந்ததுன்னு சொல்றது, காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான். ஏற்கனவே இந்தியா வில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிச்சிட்டிருக்கு. இந்நேரத்துல ‘மன்மத வருஷம்’னு சொல்லி இதிலும் ஆணாதிக்கத்தைத்தான் புகுத்துறாங்க. இதனால குற்றங்களும் விவாகரத்துகளும் அதிகமாகலாமே தவிர குறையாது!’’ என்றார் அவர் சூடாக!

இளைய தலைமுறை யின் ரொமான்ஸ் ரகசியங்களை பல்ஸ் பிடித்துப் பார்க்கும் உளவியல் நிபுணர் ஷாலினி இதைப் பேச சரியானவராச்சே... பேசினோம்!‘‘எந்த வகையிலயும் பாலியல் விஷயத்தில் வித்தியாசமான ஆண்டா இது இருக்கப் போறதில்லை. ஆனா, மன்மதன்ங்கிற வார்த்தை நம்ம ஊர்ல காதலை விட காமத்தைத்தான் அதிகம் குறிப்பிடுது.

அதனால இளைஞர்கள் இதைத் தப்பா புரிஞ்சுப்பாங்களோன்னு பயமா இருக்கு. காதல்தான் அன்பைப் பெருக வைக்கும். வெறும் காமம் ஆபத்தானது. காதலையும் காமத்தையும் பேலன்ஸ் பண்ணத் தெரிஞ்சவங்களை வேணும்னா இந்த வருஷத்துல வாழ்த்தலாம்!’’ என்றார் அவர்.

‘‘காதல், காமம், திருமணம் இதெல்லாம் நல்ல விஷயம்ங்க. இதெல்லாம் வளரும்னு யார் சொன்னாலும் சரி... அது மூட நம்பிக்கையா இருந்தாலும் ஆதரிக்கலாம்’’ என ஒரே போடாகப் போட்டார் வா.மு.கோமு. பாலியல் சார்ந்த கதைகளில் தனிப்பெயர் பெற்ற எழுத்தாளர்.‘‘மன்மத வருஷம்ங்கிறதால வர்ற வேலன்டைன்ஸ் தினத்தில் பசங்க கொஞ்சம் தைரியமா பெண்களை அப்ரோச் பண்ணலாம். பெண்களும் அப்படிப்பட்ட அப்ரோச்சை பழகி இன்னும் கொஞ்சம் தைரியமானவங்களா மாறுவாங்க. ஆனா, காதல் தோத்துடுச்சுன்னு வெக்ஸ் ஆகுற பழக்கத்தை இந்த வருஷமாவது ஒழிக்கணும்.

இன்னிக்கு இளைஞர்கள் ரொம்பத் தெளிவு. ஒரு பொண்ணும் பையனும் காதலிக்கிறாங்கன்னா, அதை சீரியஸா யாரும் எடுத்துக்கறதில்ல. அவங்களைத் தம்பதிகள் மாதிரி ட்ரீட் பண்றதில்லை. ‘ஒரு பிரேக்கப் வந்துடாதா, நமக்கு அடுத்த சான்ஸ் கிடைக்காதா’ன்னு வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கான். அந்த மாதிரி அட்ராசிட்டியெல்லாம் இந்த வருஷத்துல குறையணும். உண்மையான காதல் அப்பப்ப முளைச்சு அமரகாதல் ஆகணும்.

காதலுக்கு கிராமம், சாதி, மதமெல்லாம் தடையா இருந்தா ஒரு டி-ஷர்ட்டை வாங்கிப் போட்டுக்கிட்டு சிட்டிக்கு வந்துடலாம்... தப்பில்லைங்கறேன். ஏன்னா, சென்னை, கோவை, திருப்பூர் மாதிரியான பிசினஸ் ஏரியாக்களில்தான் ஒருத்தனோட அடையாளங்கள் தொலையுது’’ என்றார் அவர் பன்ச்சாக!1978 முதல் 1985 வரை பிறந்தவங்க காதல் திருமணம் பண்ண வாய்ப்பு அதிகம்.அதுவும் பெத்தவங்க சம்மதத்தோடவே கல்யாணம் நடக்கும்!

எஃபெகட இருககுமோ!

வருடங்களின் பெயர்கள் மொத்தம் அறுபதுதான் இருக்கிறது என்பதால், அறுபது வருடங்களுக்கு ஒருமுறை வந்த பெயரே திரும்ப வரும் (நம்ம தமிழ் சினிமா மாதிரி). அந்த வகையில் இதே மன்மத வருடம் 1955-56ல் வந்திருக்கிறது. என்ன ஆச்சரியம்... ஏப்ரலில் இந்த வருடம் பிறக்க, மே மாதம் இந்து திருமணச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. என்னவோ எஃபெக்ட் இருக்குமோ!

- டி.ரஞ்சித்