ஆளில்லாத குட்டி விமானம்... ஆபத்தா? விளையாட்டா?



ஒரு கம்ப்ளீட் அலசல்!

வீட்டு மொட்டை மாடியில் பானா காத்தாடி விழுவது போல் ஆகிவிட்டது குட்டி விமானங்களின் நிலை. மெரினா பீச்சில் பறந்தபோதும்... சாந்தோம் ஹோட்டல் பார்ட்டியில் சந்தோஷம் கலைத்தபோதும்... பாண்டிச்சேரி ஆரோவில்லில் யாரோ அதை லேண்ட் செய்தபோதும் மெர்சலாகிவிட்டது மக்கள் கூட்டம்.

 ‘‘கேமரா பொருத்தியிருக்கே... வேவு பாக்கறாங்களோ... பாகிஸ்தான் சதியோ... கசமுசா படம் எடுத்து காசு பிடுங்கும் கும்பலோ..?’’ என விக்கித்து நிற்கும் மக்களுக்காக விசாரிக்கக் கிளம்பினோம்.இவை ஏன் பறக்கின்றன? ஏன் விழுகின்றன? இவற்றின் உரிமையாளர்களின் நோக்கம்தான் என்ன?

‘‘ட்ரோன் எனப்படும் ஆளில்லாத குட்டி விமானங்களைப் பொறுத்தவரை ஏரோனாட்டிக்ஸ் மாணவர்கள் படிப்புக்காக - ப்ராஜெக்ட்டுக்காக அதை உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள்; பாதுகாப்புக்காக ராணுவம் - போலீஸ் பயன்படுத்துகிறது; ஹாலிவுட் பிரமாண்டத்தைக் கொண்டுவர சினிமா ஷூட்டிங்கில் இப்போது பயன்படுத்துகிறார்கள். திருமணத்தை போட்டோ எடுப்பவர்கள் கைக்கும்கூட இது வந்துவிட்டது. ஆனால், இப்போது கீழே விழுந்து கிலியைக் கிளப்பியதெல்லாம் ஆளில்லாத குட்டி விமானம் என்பதே தப்பு.

அது ஒரு பொம்மை... விளையாட்டுப் பொருள். அவ்வளவுதான்!’’ - ஆணித்தரமாக ஆரம்பித்தார் சென்னை எம்.ஐ.டி சென்டர் ஃபார் ஏரோஸ்பேஸ் ரிசர்ச் அமைப்பின் இயக்குனரான டாக்டர் செந்தில்குமார். சென்னையில் ‘யு.ஏ.வி’ (ஹிஸீனீணீஸீஸீமீபீ கிமீக்ஷீவீணீறீ க்ஷிமீலீவீநீறீமீ) எனும் குட்டி விமானங்களை சொந்தமாகத் தயாரிக்கக் கூடிய நிபுணர்களில் இவரும் ஒருவர். உத்தரகாண்ட் வெள்ளம் மற்றும் சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து போன்றவற்றில் இவரின் குட்டி விமானங்களின் சேவை அரசுக்கே தேவைப்பட்டிருக்கிறது.

‘‘இது போன்ற பொம்மை விமானங்களை ஒரு வருடத்துக்கு முன் சீனா அறிமுகப்படுத்தியது. இதன் பெயர் டி.ஜே.ஐ ஃபேன்டம். சுமார் ஒரு அடி நீளம் கொண்ட இது வெள்ளை நிறத்தில் இருக்கும். சுமார் முன்னூறு அடி உயரம் வரை இதைப் பறக்க வைக்க முடியும். அறிமுகப்படுத்தப்பட்டபோது இதன் விலை சுமார் இரண்டரை லட்ச ரூபாய். சீனப் பொருட்கள் பற்றி உங்களுக்கே தெரியும். எதையுமே தரத்தைக் குறைத்து, மொத்த உற்பத்தி மூலம் விலையையும் குறைத்துவிடுவார்கள். அப்படி படிப்படியாக விலை குறைந்து, தற்போது இது வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கிறது. யாரும் வாங்கலாமே... அதுதான் இப்போது பிரச்னை!

கல்லூரி அளவில் உருவாக்கப்படும் ஆளில்லா விமானங்கள் பல கிலோமீட்டர்கள் பயணிக்கக் கூடியவை. பறப்பது மட்டும் இவற்றின் வேலை அல்ல. உதாரணத்துக்கு, ஒரு கட்டிட விபத்தின் இடிபாடுகளுக்கு மேலே ஒரு குட்டி விமானத்தைப் பறக்கவிடுகிறோம் என்று வையுங்கள். அதில் ஒரு தெர்மோ சென்ஸாரைப் பொருத்திவிட்டால் போதும்... இடிபாடுகளுக்கு இடையில் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு நபரின் மூச்சுக்காற்றையும் உணர்ந்து அது துல்லியமாகச் சொல்லிவிடும். இப்படிப்பட்ட முக்கியமான துறையில் விளையாட்டாக ஈடுபடும் ஆட்களை நினைத்தால் வருத்தம்தான் மிஞ்சுகிறது!’’ என்றார் அவர்.

தற்போது இந்தக் குட்டி விமானங்களைப் பயன்படுத்த அரசின் சிவில் ஏவியேஷன் துறையிலும் காவல் துறையிலும் அனுமதி வேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகம் கெடுபிடி விதித்திருக்கிறது. பிரபல நடிகர் மற்றும் இயக்குனரின் மகன் இந்தக் குட்டி விமான ஆர்வலராம். தன் விமானத்தைப் பறக்கவிட அவர் அனுமதி கேட்டு வர, எந்தச் சட்டத்தின் கீழ் அனுமதிப்பது என்றே தெரியாத குழப்ப பதில்தான் கிடைத்ததாம்.

காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டால், ‘‘இப்போதைக்கு வெயிட் பண்ணத்தான் வேண்டும். இந்திய விமான சேவையைக் கட்டுப்படுத்தும் டைரக்டர் ஜெனரல் சிவில் ஏவியேஷன் அமைப்பு, இதுபோன்ற குட்டி விமானங்களின் பயன்பாட்டுக்கு சில வழிகாட்டி நெறிமுறைகளை அமைக்க இருக்கிறது. அவர்களின் கைட்லைன்ஸ் கிடைத்தபின்தான், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களைத் தண்டிக்கவும் முடியும்... அனுமதி வழங்கவும் முடியும்’’ - என்கிறார்.

ஆனால், குட்டி விமானங்களுக்கு ஒரேயடியாகத் தடை விதித்துவிட முடியாது என்பதே நிபுணர்களின் கருத்து. காரணம், இதன் தன்னிகரற்ற பயன்பாடு. கனிமக் கொள்ளையை விசாரிக்கும் சகாயம் குழுவினர்கூட இந்த குட்டி விமானங்களை வைத்தே கொள்ளையின் ஆழத்தை ஆராய்ந்தனர். கடலோரக் காவல்படையும் நீண்ட இந்தியக் கடற்கரையைக் கண்காணிக்க இதன் உதவியை நாடுகிறது.

சினிமாவில் இருபது ஆண்டுகளுக்கு முன்பே குட்டி விமானம் மூலம் படப்பிடிப்பு செய்து புதுமையைப் புகுத்தியவர் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன். குறிப்பாக ‘சூது கவ்வும்’ படத்தில் பணப்பையைத் தூக்கிப் பறக்கும் அந்த ஹெலிகாப்டரெல்லாம் இவர் ஐடியாதான். ஒளிப்பதிவாளர் என்பதைத் தாண்டி, குட்டி விமான ஆர்வலரான இவர் இதற்கென தனி இன்ஸ்டிடியூட்டே நடத்துகிறார். தன் செல்ல விமானங்களிடையே அமர்ந்து பேசினார் அரவிந்த்.

‘‘நிஜ விமானம் போலவே இவற்றை இயக்கும்போதும் வானிலை, காற்று வீசும் திசை என எல்லாவற்றையும் கணக்கிட வேண்டும். சினிமா வுக்கு நாங்கள் பயன்படுத்தும் விமானத்தில், விமானத்துக்கு ஒரு ரிமோட்டும் கேமராவுக்கு ஒரு ரிமோட்டும் உண்டு. அதை இரண்டு பேர் கட்டுப்படுத்த வேண்டும். இதுவரை அதில் விபத்தே ஏற்பட்டதில்லை.

ஆனால் இந்த ரெடிமேட் விளையாட்டு விமானங்களில் இரண்டையும் ஒரே ரிமோட்டில்தான் வைத்திருக்கிறார்கள். இரண்டு பேர் வேலையை ஒரே ஆள் பார்க்க எவ்வளவு பயிற்சியும் அனுபவமும் தேவை! ஆனால், சுத்தமாக பயிற்சியே இல்லாதவர்கள் இதை வாங்கி இயக்குகிறார்கள்.

பிரச்னை என்று வந்தால் அரசு சில வழிமுறைகளைக் கொண்டு வருவதைத் தவிர்க்க முடியாது. அமெரிக்காவில் இதுபோன்ற பிரச்னை ஆரம்பத்தில் வந்தது. அவர்கள் இதற்கென்று கிளப்களை ஏற்படுத்த லைசென்ஸ் கொடுத்தார்கள். அந்த கிளப்புகளில் உறுப்பினராகி பயிற்சி எடுத்தவர்களுக்கும் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விமானம் பறக்க அனுமதிப்பார்கள். இந்தியாவிலும் அப்படி ஒரு நிலை வரலாம்’’ என்றார் அவர்.

இவை முழுக்க முழுக்க பேட்டரி யில் இயங்கும் விமானங்கள் என்பதால், விழுந்து உடைவதோடு சரி... வெடிக்கவோ தீப்பிடிக்கவோ வாய்ப்பு இல்லை என்பது இங்கே ஆறுதல் தகவல். ஆனால், சுமார் 2 கிலோவுக்கு மேல் இருக்கும் இவை பெரும் உயரத்திலிருந்து யார் மீதாவது விழுந்தால் காயம் - சேதம் நிச்சயம்.

உதவும் நண்பன்

ஜப்பானில் கடந்த 20 ஆண்டுகளாக ‘யமாஹா ஆர்மேக்ஸ்’ ஆளில்லா விமானம் படு பாப்புலர். விவசாயிகளின் நண்பனான இது வயல்களின் மீது பறந்து உரம் தெளிக்கும்; பூச்சி மருந்து ஸ்பிரே செய்யும்; தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும். காடுகளுக்குள் வனத்துறை அதிகாரிகள் நாள்கணக்கில் நடந்து செய்ய வேண்டிய பாதுகாப்புப் பணியை இவை நிமிடங்களில் செய்து முடிக்கின்றன. அசாமின் காஸிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் காண்டாமிருகங்களைப் பாதுகாக்க இவை பறக்கின்றன. காட்டுக்குள் எங்காவது வேட்டைக்காரர்களின் நடமாட்டத்தைக் கண்டால், உடனே படம் எடுத்து லொகேஷனைச் சொல்லிவிடும். அதிகாரிகள் உடனே போய் வளைக்கலாம்.

பயிற்சி அவசியம்!

விளையாட்டு விமானம் என்றாலும் அதை இயக்க பயிற்சி வேண்டாமா? ஏரோநாட்டிகல் துறையில் மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் பயிற்சி அளித்து வரும் தினேஷ் கார்த்திக்கிடம் பேசினோம்... ‘‘எந்த விமானமாக இருந்தாலும் அதை இயக்குபவர் ஒரு பைலட் போலத்தான். எனவே, கண்டிப்பாக பயிற்சி தேவை. பொதுவாக இந்த வகை விமானங்களை கண்ணுக்கு மறையும் தூரத்தில் செலுத்திவிட்டாலே ரிமோட் செயலிழந்து விமானம் கட்டுப்பாட்டை இழக்கலாம். பொதுவாக ஒவ்வொரு விமானத்துக்கும் பயண நேரம் குறிக்கப்பட்டிருக்கும்.

ஒருவேளை அது பத்து நிமிடம் என்றால் ஆறாவது நிமிடமே அது ஒரு சிக்னல் கொடுக்கும். அப்போது விமானத்தை நம்மை நோக்கித் திருப்பிவிட வேண்டும். அப்போது தவறவிட்டால், எட்டு நிமிடத்தில் ஒரு சிக்னல் கொடுக்கும். அப்போது அந்த விமானத்தை பறக்கும் நிலையிலிருந்து அப்படியே கீழ் இறக்க வேண்டும்.

இல்லாவிட்டால் ஆபத்தில்தான் முடியும். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்க ஃபெயில் சேஃப் என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதாவது, கோளாறு ஏற்படும் சமயத்தில் விமானம் நம்மை நோக்கி வரச் செய்யும் ஒரு முறை. இதையெல்லாம் கவனிக்காத, அல்லது அலட்சியம் செய்யும் நபர்களால்தான் விபத்து ஏற்படுகிறது!’’ என்கிறார் அவர்.

அழிக்கும் வில்லன்!


இந்தக் குட்டி விமானங்களை அமெரிக்க ராணுவம் அழிவுக்கும் உளவுக்கும் பெருமளவில் பயன்படுத்தி வருகிறது. ஒரு சின்ன பூச்சி சைஸில் இருக்கும் விமானம் முதல் ஒரு டன் எடையுள்ள குண்டை சுமந்து சென்று போடும் சைஸ் வரை வெரைட்டியான விமானங்கள் அமெரிக்காவிடம் உண்டு.

பல நாடுகளில் தீவிரவாதிகளை அழிப்பதற்காக இவை போட்ட குண்டுகளில் இதுவரை இறந்தவர்கள் சுமார் 5 ஆயிரம் பேர்; இவர்களில் தீவிரவாதிகளைவிட அப்பாவிகளும் குழந்தைகளுமே அதிகம் என்பதுதான் வேதனை! ‘மனிதர்களை அழிக்கும் அதிகாரத்தை ஒரு மெஷினிடம் கொடுப்பதா?’ என்ற கேள்வி இதனால் உலகெங்கும் எழுந்தது. விளைவாக, இவற்றின் போர்ப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த ஐ.நா முயன்று வருகிறது.

டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்