சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற மிருகத்தனமான அரச பயங்கரவாதம் இதற்கு முன் நடந்ததில்லை. செம்மரம் வெட்டியதாகக் கூறி 20 தமிழகத் தொழிலாளிகளை துள்ளத் துடிக்கக் கொன்று குவித்திருக்கிறது ஆந்திர போலீஸ். சந்தன மரத்தை வெட்டியழித்து பணம் பார்த்த ‘டிம்பர் மாஃபியா’வின் தற்போதைய இலக்கு செம்மரம்.

இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் சந்தனத்தை விடவும் அதிகம். செம்மரக் கடத்தல் பல வருடங்களாக ஆந்திராவில் நடந்து வருகிறது. அரசியல்வாதிகள்+தாதாக்கள்+அதிகாரிகள் இணைந்த சர்வதேச நெட்வொர்க்கின் ஆணிவேர் ஆந்திராவில்தான் இருக்கிறது. வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, சென்னை என ஜல்லிவேர்கள் பரவிக் கிடக்கின்றன.
பலத்த பின்புலம் கொண்ட இவர்களை காவல்துறையோ, வனத்துறையோ நெருங்குவதே இல்லை. 20 பேர் கொல்லப்பட்ட சேஷாசலம் மலையில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 2000 டன்னுக்கு மேலாக செம்மரம் கடத்தப்படுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.வெகுநுட்பமாக செயல்படும் இந்த மாஃபியாக்கள் நேரடியாக களத்துக்கு வருவதேயில்லை.
எல்லாமே அப்பாவிகளால் ஆன ‘அவுட்சோர்சிங்’தான். மலைக்கிராமங்களில் வசிக்கும் வலுவான இளைஞர்களை ஆசை காட்டி வளைக்க புரோக்கர்கள் இருக்கிறார்கள். வாகான ஒரு மரத்தை வெட்டினால் 3000 ரூபாய்க்கு மேல் கூலி. வாரத்திற்கு 20 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்பதால் ஆபத்தை உணராமல் இவர்களின் வலையில் விழுகிறார்கள் மலைவாழ் இளைஞர்கள்.
‘‘சேஷாசல மலையில் 70 பாதைகள் உண்டு. எல்லா பாதைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உண்டு. வனத்துறைக்குத் தெரியாமல் ஒரு இலை கூட கீழே விழமுடியாது. வெட்டப்படுகிற செம்மரம், நெடுஞ்சாலை, துறைமுகங்கள் வழியாகவே வெளிநாடுகளுக்குப் போகிறது. இதன் மூளையாக செயல்படுகிற தாதாக்களையும், அரசியல்வாதிகளையும் விட்டுவிட்டு அப்பாவித் தொழிலாளர்களை படுகொலை செய்திருப்பது காவல்துறையின் இயலாமை.
பழங்குடிகள் மற்றும் மலையை நம்பி வாழ்கிற மக்களின் வாழ்க்கை பெரும் நசிவைச் சந்தித்திருக்கிறது. அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு விட்டன. வனத்தை நம்பிய தொழில்கள் முடக்கப்பட்டு விட்டன.
வனத்துறை அம்மக்களின் வாழ்க்கையை நசிவடைய வைத்துவிட்டது. 2006ல் கொண்டு வரப்பட்ட வன உரிமைச்சட்டம், ‘3 தலைமுறைகளாக ஓரிடத்தில் குடியிருக்கும் பழங்குடிகளுக்கு அந்த இடத்தை சொந்தமாக்க வேண்டும்’ என்கிறது. அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் உறுதி செய்கிறது. ஆனால் தமிழக அரசு அதை அமல்படுத்தவில்லை.
ஐந்தாண்டுத் திட்டங்களில் பழங்குடிகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படுகிற தொகை, வேறு திட்டங்களுக்கு மடை மாற்றப்படுகிறது. திட்டமிட்ட சமூகப்புறக்கணிப்பால் பழங்குடி மக்கள் தவித்து நிற்கிறார்கள். சொற்ப கூலிக்கு வேலை செய்து வயிறு வளர்க்கிற இளைஞர்களை புரோக்கர்கள் குறிவைத்து ஈர்க்கிறார்கள். ஆழம் தெரியாமல் இதுபோன்ற படுகுழிகளில் விழுந்து விடுகிறார்கள் அவர்கள். இதற்கு முன் ஜவ்வாது மலைப்பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் ஆந்திர காவல்துறையின் கொலைவெறிக்கு பலியாகி இருக்கிறார்கள்.
பலரை வனத்துக்குள்ளேயே புதைத்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது. ‘விசாரணை’ என்ற பெயரில் பிடிபடுபவர்களை கண்மூடித்தனமாகச் சித்திரவதை செய்கிறார்கள்.இரண்டா யிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடப்பா, குண்டூர், கோதாவரி மாவட்ட சிறைகளில் அடைந்து கிடக்கிறார்கள். 2012ல் இரண்டு வனத்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்டார்கள். அந்த வழக்கில் மட்டும் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதுபற்றி சிறிய விசாரணை கூட செய்யாமல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.
தடை செய்யப்பட்ட மரத்தை வெட்டுவது, வனப்பாதுகாப்பு சட்டப்படி 6 மாதம் முதல் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் அளிக்கும் அளவுக்கான குற்றம். குருவியைச் சுடுவது போல சுட்டுத் தள்ள இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இந்த விவகாரத்தை தமிழக அரசு கையாளும் விதம் கொடுமையாக இருக்கிறது. தமிழக அரசின் மௌனம் மற்றுமொரு அரச பயங்கரவாதமாக இருக்கிறது’’ என்கிறார் மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் தமிழக செயலாளர் பாலமுருகன்.
வனத்தின் மீதிருந்த பிணைப்பை அறுத்து, வாழ்வாதாரங்களை அழித்து அத்தக் கூலிகளாக்கி விரட்டுகிறது ஒரு அரசாங்கம். விசாரணை என்ற பெயரில் பிடித்துச் செல்கிற அப்பாவிகளை வனத்துக்குள் வைத்து படுகொலை செய்து நாடகமாடுகிறது இன்னொரு அரசாங்கம். ஜனநாயகம் வெட்கப்படுகிறது!
- வெ.நீலகண்டன்