முன்னோடி



முன்னிரவில் வாக்கிங் வந்துகொண்டிருந்த சந்தானம், பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த அந்தச் சிறுமியைக் கவனித்தார். அவளுக்கு பத்து, பன்னிரண்டு வயது இருக்கலாம். மின்விளக்கு கம்பத்தின் அடியில் உட்கார்ந்திருந்தாள்.

கையில் ஒரு புத்தகம். பக்கத்தில் புத்தகப்பை. தெருவிளக்கின் சிறு வெளிச்சத்தில் அக்கறையாகப் படித்துக்கொண்டு இருந்தாள்.ஆசையாக அருகில் போனார் சந்தானம்... ‘‘பாப்பா! கிடைக்கிற இந்த வெளிச்சத்துல எப்படியாவது படிச்சு முன்னேறணும்னு நினைக்கிற உன்னைப் பாராட்டுறேன்.

எத்தனையோ மேதைகள் இப்படித்தான் படிச்சு பெரிய ஆளாகி இருக்காங்க! உனக்கும் நல்ல எதிர்காலம் அமையும்’’ என்றார் நெகிழ்ச்சியாக.அப்போது விர்ர்ரென வந்து நின்றது ஒரு சொகுசு கார். அதிலிருந்து கம்பீரமாக ஒருவர் இறங்கி சிறுமி அருகில் வந்து, “ரம்யா! இன்னைக்குப் படிச்சது போதும்மா! கிளம்பு, வீட்டுக்குப் போவோம்’’ என்றார்.

சந்தானம் முகத்தில் ஆயிரம் கேள்விக்குறிகள்!‘‘என்ன சார் அப்படிப் பார்க்கறீங்க? இவ என் பொண்ணுதான்! வீட்ல ஏழெட்டு ஏ.சி. ரூம் இருக்கு. ஆனா, இவங்க டீச்சர் ஏதோ கதை சொன்னாங்களாம்... தெருவிளக்கு வெளிச்சத்துல படிச்சு மேதை ஆனவங்களைப் பத்தி! அன்னிலருந்து தினமும் இங்கே வந்துதான் படிப்பேன்ங்கறா!’’ அலுப்புடன் சொன்னார் அவர்.
காரில் ஏறிய சிறுமி, சந்தானத்துக்கு டாட்டா காட்டிவிட்டுச் சென்றாள்.       

கு.அருணாசலம்