உடம்பு



‘‘அச்சச்சோ... என்ன பரசுராமா இது?’’ - நண்பர் குமார் கேட்டதில் பதறிப் போனார் பரசுராமன்.‘‘உன்னோட உயரத்துக்கு நீ அதிகபட்சம் எழுபத்தி அஞ்சு கிலோதான் இருக்கலாம். ஆனா, நீ நூத்தி அஞ்சு கிலோ இருக்கறதா சொல்றே. ரொம்ப ஆபத்து. பிரஷர், சுகர்னு மோசமான வியாதிங்க வர்ற ஆபத்து இருக்கு.

உன்னைப் பார்க்கவே அசிங்கமா இருக்கு. முதல்ல உடம்பைக் குறை. குண்டா இருக்கறது அழகும் இல்லை... ஆரோக்கியமும் இல்லை. வயசு ஆக ஆக பிரச்னைங்க துரத்த ஆரம்பிச்சிடும்!’’

நண்பர் குமார் சொன்னதை அப்படியே ஏற்றார் பரசுராமன். ஆறே மாதத்தில் கடுமையான டயட், உடற்பயிற்சி மூலம் வெகுவாய் உடம்பைக் குறைத்து எண்பது கிலோவுக்கு வந்துவிட்டார்.
அன்று வேலையாய் டவுனுக்கு வந்தவர், யதேச்சையாக நண்பர் கதிரவனை சந்தித்தார். இவரைப் பார்த்த மாத்திரத்தில் கதிரவன் அதிர்ந்து போனார்.

‘‘பரசுராமனா நீ..? என்னால நம்பவே முடியலைப்பா... முன்னே குண்டா எவ்வளவு கம்பீரமா இருப்பே! இப்போ ஏதோ நோவுக்கோழி மாதிரி சுருங்கிப் போய் கிடக்கறியே! எப்படி இருந்த உடம்பு... இப்படி ஆகிட்டியே! பார்க்கவே அசிங்கமா இருக்கு. உடம்புல சுகர், பிரஷர், அது இதுன்னு ஏதாவது நோய் இருக்கப் போகுது... செக் பண்ணிக்கோ!’’ என அட்வைஸ் தந்தார் கதிரவன்.
மயக்கம் வந்தது பரசுராமனுக்கு.     

கே.ஆனந்தன்