சினிமாவே அம்மாவாயிடுச்சு!



எங்கேயோ பார்த்த முகம்

கொட்டாச்சி ஃபீலிங்

‘‘விஜய் சார்கூட பத்து படத்துக்கு மேல சேர்ந்து நடிச்சிட்டேன்ணே. பார்த்தா சொல்ல முடியுதா? ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்துல விவேக் சார் அசிஸ்டென்ட்டா வேட்டியத் தூக்கிப் புடிச்சிக்கிட்டே வருவேன்.

‘விருமாண்டி’யிலயும் கமல் சாரோட நிறைய சீன்ஸ் நடிச்சிருக்கேன். வெடவெடன்னு கறுப்புக்குச்சியா ஊர்க்காரப் பய கேரக்டர்னா... ‘கூப்பிடுறா கொட்டாச்சி’யங்கறாங்க. இதுவரைக்கும் சந்தோசம்ணே. ஆனா இன்னும் ரொம்ப தூரம் போகணும்!’’ - பல கனவுகளோடு வரவேற்கிறார் கொட்டாச்சி. ஆளைப் போலவே வித்தியாசமான பெயர்!

‘‘எங்க ஊரு சாமிப்பேருண்ணே... எங்க குடும்பத்துல எல்லாருக்கும் பொம்பளப் புள்ளைங்கதான் பொறக்குமாம். 3 அக்காவுக்கு அப்புறம் கொட்டாச்சி அம்மன் புண்ணியத்துல நான் பொறந்தனா... அதையே பேரா வச்சிட்டாங்க. சொந்த ஊர் பொள்ளாச்சி. சின்ன வயசுலயே அப்பா போயிட்டாரு. நான் நாலாங்கிளாஸ்ல ஒரு வருஷம் பெயில்.

உடனே ‘படிப்பு வராத பய’ன்னு டீச்சர்ஸ் எல்லாம் கடை கண்ணிக்கு அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்க. பி.வாசு சாரோட ‘என் தங்கச்சி படிச்சவ’ ஷூட்டிங் எங்க ஸ்கூல் பக்கம் நடந்தது. ஷூட்டிங்க்கு ஒரு சின்ன பையன் தேவைப்பட்டப்போ ‘கூட்டிட்டுப் போங்க சார்’னு என்னையத்தான் தள்ளிவிட்டாங்க. கிழிஞ்ச டவுசரப் போட்டுக்கிட்டு சுவத்துல ஒண்ணுக்கு இருக்கற சீன்ல நடிச்சிருப்பேன். அப்ப தெரியலண்ணே, இந்த சினிமா நமக்கு சோறு போடும்னு!

ஒரு கட்டத்துல படிப்பு ஏறாம, கூலி வேலைகளுக்குப் போக ஆரம்பிச்சேன். திருப்பூர்ல வேலை பார்த்துக்கிட்டிருந்தப்ப ‘சீமான்’னு கார்த்திக் நடிச்ச படம் ரிலீஸ் ஆச்சு. அதுல மனோரமா ஆச்சி கையில ஒரு குழந்தை வச்சிருப்பாங்க. உத்துப் பார்த்தா அது எங்க அக்கா குழந்தை. படத்துல எங்க அக்காவும் அம்மாவும் கூட ஒரு சீன்ல ஓரமா நின்னுட்டு இருந்தாங்க. விசாரிச்சப்ப, ‘ஆமாடா, ஷூட்டிங் வந்திருந்தாங்க. கொழந்தையக் கேட்டாங்க. கொஞ்ச நேரம் கொடுத்தோம்’னு அம்மா சொல்லிருச்சு.

அது அப்ப பெரிய விஷயமா தெரியல. அடுத்த வருசமே அம்மா இறந்துருச்சு. சாமி கும்பிட போட்டோ தேடிப் பார்த்தா ஒண்ணு கூட இல்ல. ‘சரி, அந்தப் படத்துல தலை காட்டினாங்களே... அப்ப போட்டோ புடிச்சிருப்பாங்க. போயி கேட்டுப் பார்க்கலாம்’னு மெட்ராஸுக்கு கௌம்பிட்டேன். சினிமாவுல ஒவ்வொரு சீனையும் போட்டோ எடுத்தா வச்சிருக்க முடியும்? அப்ப அவ்வளவுதான் வெவரம் நமக்கு!

கற்பகம் ஸ்டூடியோ வாசல்லயே கெடந்தேன். அம்மா போட்டோவ யார்கிட்ட கேக்கணும், எப்படிக் கேக்கணும்னு கூடத் தெரியல. ‘சென்னைக்கு வந்தது வந்துட்டோம், நடிக்கவாவது முயற்சி பண்ணலாமே’ன்னு அப்பதான் தோணிச்சு. முதல்ல வயித்துப் பசியப் போக்குவோம்னு வடபழனியில ஒரு ஓட்டல்ல வேலைக்கு சேர்ந்தேன். விறகு எடுத்துப் போடுற வேலை. ஓட்டல்ல எல்லாம் முழுச்சம்பளம் தரமாட்டாங்க. தந்தா ஓடிருவான்னு பாதிப் பாதியாத்தான் கொடுப்பாங்க. வேலைய விடுறதா இருந்தா, லம்ப்பா ஒரு அமவுன்ட் அவங்க கையில நிக்கும். அதுக்குப் பயந்து வெறகு சுமந்தே உடம்பு வெறகாகிப்போச்சு.

ஆனா, அப்படிக் கஷ்டப்பட்டுக்கிட்டே சினிமா சான்ஸ் தேடின காலத்துலதான் நிறைய நண்பர்கள் அறிமுகமானாங்க. இயக்குநர் சுசீந்திரன், ‘தா’ படம் இயக்கின ரமேஷ் எல்லாம் அப்போ வாய்ப்பு தேடிட்டு இருந்தாங்க. நாங்க 3 பேரும் ரூம் மேட்ஸ் ஆனோம். மேன்ஷன்ல எண்ணூறு ரூபாய் வாடகை.

அதையும் கொடுக்க முடியாம, 3 பேரும் கல்யாண மண்டப வேலைக்குப் போவோம். அந்த வேலையும் எப்பவும் கிடைக்காது. அதனால சில நேரம் சாப்பிடுறதுக்காகவே கல்யாண மண்டபத்துல நுழைஞ்சிடுவோம். பாதி சாப்பாட்டுல எழுப்பி விட்டு, திட்டியெல்லாம் அனுப்பியிருக்காங்க. ‘மீதி சாப்பாட்டை தூக்கி எறியத்தானே போறிங்க... அதை சாப்பிட்டுக்கறேன்’னு கேட்டு சாப்பிட்டதும் உண்டு.

கஷ்டத்துல இருக்கும்போது ஒரு ஒளி தெரியும்பாங்களே... அப்படித்தான் ஆபாவாணன் சார் இயக்கிட்டிருந்த ‘அடிமைகள்’ படத்துல வாய்ப்பு கிடைச்சுது. அந்தப் படம் மூலமாதான் விவேக் சார் அறிமுகம் கிடைச்சுது. ‘பெண்ணின் மனதை தொட்டு’ல அவரோட நடிக்க நல்ல கேரக்டர் கொடுத்தார் எழில் சார். அவங்க ரெண்டு பேருமே எனக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தாங்க. ‘பிரண்ட்ஸ்’ல ஆரம்பிச்சு ‘சுறா’ வரை விஜய் சாரோட பத்து படங்கள் பண்ணிட்டேன்.

அஜித் சாரோட ‘சிட்டிசன்’, கமல் சாரோட ‘விருமாண்டி’. சிம்புவோட ‘காதல் அழிவதில்லை’ நடிச்சப்ப, டி.ஆர் சாருக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ‘வீராசாமி’, இப்ப ‘ஒரு தலைராகம் பார்ட் 2’ன்னு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்திட்டிருக்கார். ‘வெயில்’, ‘காவியத்தலைவன்’னு வசந்தபாலன் சாரும் வாய்ப்பு தர்றார். இப்போ பத்து படங்கள்ல நடிக்கறேன். அம்மா போட்டோவத் தேடி வந்தேன்... இப்ப சினிமாவே அம்மாவாயிருச்சு!

எங்க அக்கா பொண்ணு அஞ்சலியத்தான் கட்டியிருக்கேன். அவங்களும் டப்பிங் யூனியன்ல கார்டு வாங்கியிருக்காங்க. நல்ல குடும்பம், அழகான குழந்தைன்னு வாழ்க்கை அமைஞ்சதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும். சுசீந்திரன் சார் இப்ப பெரிய இடத்துக்கு போயிட்டார். ‘உனக்கு நல்ல ரோல் தர்றேன்’னு நம்பிக்கையா சொல்லியிருக்கார்.

வெயிட் பண்றேன். நாகேஷ் சார்தான் எனக்கு ரோல் மாடல். அவர் வீட்டு வாசல்ல எப்பவும் 3 சினிமா கம்பெனி கார் நிக்கும். சரியா ஷிஃப்ட் போட்டு 3 படத்திலும் நடிச்சுக் கொடுத்திருக்கார்னு சொல்வாங்க. அந்தளவு பிஸியா நானும் வளரணும்!’’ழிஞ்ச டவுசரப் போட்டுக்கிட்டு சுவத்துல ஒண்ணுக்கு இருக்கற சீன்ல நடிச்சிருப்பேன். அப்ப தெரியலண்ணே, இந்த சினிமா நமக்கு சோறு போடும்னு!

மாதங்களில் இன்று

கார்த்திகை

ஆண்டின் எட்டாவது மாதம். கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த மாதத்தின் பௌர்ணமி வருவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. அறிவியல்படி இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று சந்திரன் நீண்ட நேரம் இருக்கும். சூரியன் விருச்சிக ராசியில் இருப்பார். இம்மாதத்தை தமிழில் ‘நளி’ என்று அழைப்பார்கள். ஐயப்ப பக்தர்கள் இந்த மாதத்தின் தொடக்கத்தில் மாலையணிந்து விரதம் ஆரம்பிப்பார்கள்

மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்