நாணயம்



சண்முகம் தன் மகளின் திருமணச் செலவுகளுக்காக நண்பர் சுந்தரத்திடம் ரூபாய் ஐம்பதாயிரம் கடன் கேட்டிருந்தார்.சுந்தரம் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, ‘‘சரி, சாயந்திரம் வீட்டுக்கு வா... வந்து வாங்கிட்டுப் போ..!’’ என்றார்.

சண்முகம் முகம் பிரகாசமானது. அன்று மாலை கல்லூரி விட்டு வந்த தன் மகனையும் அழைத்துக்கொண்டு சுந்தரம் வீட்டுக்குப் புறப்பட்டார்.சுந்தரம் இருவரையும் அன்பொழுக வரவேற்று காபி கொடுத்து அவர் கேட்டிருந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை சண்முகத்திடம் நீட்டினார்.

‘‘உங்க மகன் கையால குடுங்க, வாங்கிக் கிறேன்..!’’‘இப்ப அவன் எதுக்கு?’ - சுந்தரம் முகத்தில் கேள்விக்குறி!‘‘அவன் வெளியே போயிருக்கான், வீட்டுக்கு வர லேட் ஆகும், நீங்க வாங்கிக்குங்க..!’’ என்றார் அதை மறைத்த படி.‘‘இல்லைங்க... இது மனுஷ காரியம். எதுவும் எப்ப வேணும்னாலும் நடக்கலாம்.

நான் உங்ககிட்டயிருந்து கைமாத்தா பணம் வாங்குறது உங்க மகனுக்கும், என் மகனுக்கும் தெரியணும். நாளைக்கு எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா, என் மகன் வாங்கின பணத்தைத் திருப்பிக் குடுப்பான். உங்க தரப்புலயும் அதே மாதிரி தான். உங்க மகன் வரட்டும், அவன் கையால வாங்கிக்கறேன்!’’சண்முகத்தின் நாணயத்தைப் பார்த்து அசந்து போய் நின்றார் சுந்தரம்.         

ஐரேனிபுரம் பால்ராசய்யா