அழகு



பிரபல டி.வி சேனல் நடத்திய ‘அழகிய அம்மா’ போட்டியில் வெகு சுலபமாக கிரீடம் வென்றாள் வந்தனா.‘‘இவங்க ரெண்டு குழந்தைங்களுக்கு அம்மாங்கிறதை நம்பவே முடியலையே. ஒரு காலேஜ் கேர்ள் போல ‘நச்’னு இருக்காங்களே...’’ என்று அரங்கமே வியந்தது.‘‘வந்தனா மேடம்... நீங்க ஸ்லிம்மா, கவர்ச்சியா, சினிமா நடிகை போல அழகா இருக்கீங்களே... உங்க அழகின் ரகசியம் என்ன? டயட்டா, உடற்பயிற்சியா?’’ - நிருபர்கள் கேட்டபோது, மென்று விழுங்கினாள் வந்தனா.

‘‘அது வந்து... நீங்க சொன்ன ரெண்டும் இல்ல. என் குழந்தைகள்தான் என் அழகின் ரகசியம்!’’ என்று வந்தனா சொன்ன பதிலுக்கு அரங்கில் பலத்த கைதட்டல். ‘‘என்ன அழகான, உண்மையான பதில்! இந்த மாதிரி குழந்தைகள் இருந்தா அந்தப் பூரிப்பில் அழகு மிளிரத்தானே செய்யும்!’’ என்றார்கள் பலரும்.அந்த ‘அழகிய அம்மா’ மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

‘நாம என்ன பொய்யா சொன்னோம்? இதுங்கதானே நம்ம அழகின் ரகசியம்? இதுங்க மட்டும் நம்ம வயித்துல ஜனிச்சிருந்தா இந்நேரம் நம்ம ஒடம்பு புசுபுசுன்னு ஊதிப் போய் வயசாளி ஆகியிருப்போம். இவங்களை வாடகைத் தாய் மூலமா பெத்துக்கிட்டதாலதான் இப்ப ‘அழகிய அம்மா’வாக முடிஞ்சது. இந்த சீக்ரெட்டை எப்பவும் வெளியே சொல்லக் கூடாது!’
         
சுபமி