கொம்பன்



ராமநாதபுரம் ரூட்டில் அருவா மீசையுடன் சுற்றித் திரியும் கோபக்கார கொம்பையா பாண்டியன். அவன் டிரவுசர் தெரிய கட்டிய வேட்டியை உதறித் தளர்த்திவிட்டு சாந்தமாகிற கதைதான் ‘கொம்பன்’.

எங்கெங்கு அநியாயம் நடந்தாலும் தானே வந்து அதைத் தட்டிக் கேட்பதும், மீறினால் அடித்துத் துவைத்து கட்டுப்படுத்துவதுமே கொம்பனுக்கு முழுநேர வேலை. இந்த ரணகளத்திலும் குதூகலமாக பக்கத்து கிராமத்து லட்சுமி மேனனைப் பார்த்தவுடனே பிடித்துப் போகிறது கார்த்திக்கு. வீட்டுக்கு வருகிற மருமகளோடு, மாமனாரையும் எதிர்கொள்கிறது கொம்பன் கார்த்தியின் வீடு.

எப்பவும் உரசலில் பாசக் கனல் பறக்கும் மாமனார் ராஜ்கிரண் - மருமகன் கார்த்தி உறவு. எதிரிகளிடமிருந்து எப்படி தன்னையும், மாமனாரையும் காப்பாற்றுகிறார் என்பதே க்ளைமேக்ஸ்!

ஆக்ஷன், பாசத்தை கலந்து கட்டியதில் டைரக்டர் முத்தையா சத்தையா! ‘மெட்ராஸ்’ காளியாக வெளுத்துக் கட்டிய கார்த்தி, இதில் வாழ்ந்திருப்பது கொம்பனாக. செங்காட்டுப் புழுதியை சதா கிளப்பிக்கொண்டே இருப்பதில் கார்த்திக்கு படம் முழுவதும் வேலை, வேகம்! இன்னமும் ‘பருத்தி வீரன்’தான் அதிகபட்ச பாராட்டு என்பதிலிருந்து அடுத்த வரிசைக்குத் தயாராகிறார்.

ஆத்திரம், அன்பு, மோதல், காதல், பாசம் என ஒரே முகத்தை அடுத்தடுத்த இடங்களில் கொண்டு வந்து நிறுத்துவதில் கார்த்தி இன்னும் முதலிடம். வெள்ளை வேட்டி மிடுக்கு, உடல் மொழியில் அலட்சியம் என கேரக்டருக்கு செம ஃபிட் போஸ் தருகிறார் கார்த்தி.

தீப்பெட்டி தொழிற்சாலையில் பெண்களிடம் வம்புக்கு வருபவர்களை எதிர்கொள்ளும் காட்சி யில் கார்த்தி காட்டும் கோபம் புதுசு. ‘ஏண்டா, பொம்பள வேலைக்கு வந்தா, என்ன வேணா செய்யலாமா... அப்படி என்னடா அவங்க உனக்கு இளப்பமா போயிட்டாங்க’ எனக் கதறுகிற வெயிலில் காய்கிற பட்டாசு நெடியில் ஆளைப் புரட்டி எடுப்பது தியேட்டர் குளிரைத் தாண்டி அனல் பறக்கிறது.அடக்க ஒடுக்கமாக அம்சமான என்ட்ரியில் ஜொலிக்கிறார் லட்சுமி மேனன்.

கார்த்தி தன் அப்பாவை எப்போதும் உதாசீனப்படுத்தும்போது ஆற்றாமையும் கோபமுமாக தடுமாறுவது, கணவரையும் விட்டுக்கொடுக்க முடியாத கண்ணியத்தில் பரிதவிப்பது எனப் பழைய தியாகத் திருவுருவ வடிவம் லட்சுமி மேனனுக்கு!ராஜ்கிரணுக்கென்றே அளவெடுத்து தைக்கப்பட்ட கேரக்டர்.

சும்மா வந்து நின்றாலே, கண் சிவந்தாலே, ‘‘ஆத்தா’’ என ஒரு பாசச் சொல் வந்தாலே கண்ணை நிறைக்கிறார். ‘எனக்கு இதெல்லாம் சும்மாய்யா’ என கேரக்டரில் புகுந்து விளையாடுகிறார் ராஜ்கிரண்.

இதுவரை ஃபைட் மாஸ்டராகவே புகழ் ஈட்டிய சூப்பர் சுப்பராயனுக்கு இப்படியொரு முகமா! பார்வையிலேயே பதற்றம் வரவைக்கிறார் மாஸ்டர். அதிக பசுமை இல்லாத, மழை பார்க்காத கிராமம்தான்... ஆனால், அதிலும் ஓவிய நேர்த்தி காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்! இப்போதைக்கு கேமராவில் ஆல் ரவுண்டர் ஐயாதான்!

எல்லாம் சரி, ஊரே சண்டைக்கு நேர்ந்துவிட்ட மாதிரி ஏன் எல்லோரும் சிலுப்பிக்கொண்டே திரிகிறார்கள்? வெட்டுக் குத்தும், உடல் சரிந்து விழுகிற ரத்தமும் இவ்வளவு தேவைதானா? இப்படிப்பட்ட சண்டைக்கார ஹீரோவையே உதாரண புருஷனாய் வளர்பருவம் எடுத்துக்கொண்டால் என்னாவது? இப்படியான கேள்விகளை முன்வைத்திருக்காவிட்டால், இது தொலைதூர கிராமத்தின் அசல் பதிவுதான்!

- குங்குமம் விமர்சனக் குழு