நண்பேன்டா



‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போலவே விரட்டி விரட்டிக் காதலிக்கும் கதை. உதயநிதி நடித்த முந்தைய படங்களின் அடுத்த கட்ட வெர்ஷன்தான் ‘நண்பேன்டா’.இப்படியே ஒருத்தருக்கு ஒருத்தர் சீண்டிக்கொண்டே போனால், அதை ரசித்துக்கொண்டே போவார்கள் என்பதில் தீர்மானமாக இருந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெகதீஷ்.

குரு ராஜேஷின் அடியொற்றியே போவதில் இதை விட சேஃப் அறிமுகத்தை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். உதயநிதியும் சந்தானமும் கலாய்க்கிற காமெடியை இந்தத் தடவையும் எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றவில்லை.

நடிப்பு, காமெடி, டைமிங், ஆட்டம், பாட்டம் எல்லாவற்றிலும் அடுத்த கட்டம் போயிருக்கிறார் உதயநிதி. எப்பவும் போட்டு வாங்கி, கலாய்ப்பது இரண்டு பேருக்கும் இயல்பாகி விட்டது. போன படங்களில் ஆங்காங்கே தென்பட்ட உதறல் அப்படியே மிஸ்ஸிங். ஆச்சரியமாக லண்டன் வீதிகளில் உதயநிதி ஆடுகிற ஆட்டம், அப்படியே லாவகமான விஜய் ஸ்டெப்ஸ். நிச்சயம் பாடல்களில் உழைப்பு தெரிவது கண்கூடு!படத்தின் இன்னொரு கதாநாயகனாகவே வலம் வருகிறார் சந்தானம்.

எதிர்ப்புறம் உள்ள லேடீஸ் ஹாஸ்டல் இடம் மாறுவது குறித்த போராட்டத்தில் வயிறு பதமாகிற காமெடி. தோன்றுகிற இடங்களில் சொந்த வசனம் போலவே வார்த்தைகள் புழங்குவதுதான் சந்தானத்தின் மேனரிசம் ஆகிவிட்டது. ‘ஃப்ரீ சர்வீஸ் விட்டு எடுத்த ஸ்கூட்டி மாதிரி’, ‘பாய் கல்யாணத்துல சாம்பார் சாதம் போட்ட மாதிரி’ என வழக்கமான சந்தானம் பன்ச்சுக்கு இதிலும் பஞ்சமில்லை. ஆனால், ரன்பீருக்கு ரைமிங் வருகிறது என்பதற்காக அவ்வளவு வயசானவரை ‘நசுங்கிப் போன டின்பீர்’ என்பதெல்லாம் ஓவர் பிரதர்!

பழைய பகையாளியாக படம் முழுக்க பயமுறுத்தி கடைசியில் ‘நண்பேன்டா’வாகும் இன்ஸ்பெக்டர் கேரக்டர் கருணாகரனுக்கு. என்னவோ தேர்ந்து நடித்து ஒரு லெவலுக்கு வருவார் என்று பார்த்தால் ரொம்பவே ஏமாற்றுகிறார் மனிதர். கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி படங்களில் மட்டும்தான் பேர் வாங்குவதாக உத்தேசமோ? யாரது... ஷெரினா? குண்டுப் பொண்ணாகி சந்தானம் ஜோடியாகப் பார்க்கும்போது, அடடா அந்த ‘துள்ளுவதோ இளமை’ நாட்கள் நினைவுக்கு வந்து துன்புறுத்துகின்றன.

சீனுக்கு சீன் சிரிக்க வேண்டும் என்பதிலும், உலக சினிமாவிற்கான சீரியஸ் முயற்சி, கருத்து சொல்வது என எந்தவிதமான முயற்சிகளும் இல்லாமல் இறங்கி அடித்திருப்பதிலும் டைரக்டரின் ‘நேர்மை’யை சந்தேகிக்க முடியாது. வயது கூடினாலும் வதனத்தில் மாசு குறையவில்லை நயன்தாராவுக்கு. அழகும், பொலிவும் ததும்ப, லெக்கின்ஸ், சுடிதார், சேலை என எப்படி வந்தாலும் நயன்தாரா ஒரு சோலைதான்! பாடல்களில் இறுக்க, நெருக்க, குளோஸப்களில் பின்னுகிறார் நயன்.

பாலசுப்ரமணியெம்மின் கேமரா ரகளை. பாடல் காட்சி யில் நயன்தாராவை படம் பிடிக்கும் குறும்பு... அநியாய அழகு. காட்சிகள் போக பாடல்களில் எக்ஸ்ட்ரா ரம்மியம்!வரவர ஹாரிஸ் மந்திரம் குறைந்து கொண்டே போகிறது. ‘என்ன மறுபடி மறுபடி’, ‘ஊரெல்லாம் உன்னைக் கண்டு’ என இரண்டு பாடல்களைத் தவிர அவர் பெரிதாக கல்லா கட்டவில்லை. பழகிப்போன பழைய கதையாக இருந்தாலும், காட்சிக்குக் காட்சி வரும் காமெடி அதை வேறுவிதமாகக் காட்டுகிறது. திரைக்கதையின் காமெடி ட்ரீட்மென்ட் ‘நண்பேன்டா’வை ரசிக்க வைக்கிறது.

 குங்குமம் விமர்சனக் குழு