நம்பர் 2 இடமே போதும்!



நந்திதா செம தெளிவு
         
நந்திதாவுக்கு ஏப்ரல் 30 பிறந்தநாள். அதுவரை காத்திருக்க முடியுமா? ‘‘அட்வான்ஸ் விஷஸ்’’ சொல்லி கை குலுக்கினால் நம்ம ப்ளான்படியே உருகுகிறார். ‘இடம் பொருள் ஏவல்’, ‘உப்புக்கருவாடு’, ‘அஞ்சல’ என வரிசையாய் பிஸி என்றாலும் பொண்ணு எப்போதும் ரீச்சபிள்... லவ்வபிள்! ‘‘போன வருஷம் இதே சமயம் ‘முண்டாசுபட்டி’ வந்து ஹிட்டானது எனக்கு பர்த் டே ட்ரீட். ‘இடம் பொருள் ஏவலு’ம் ட்ரீட் கொடுக்கும்னு நம்பறேன்!’’ - பாஸிட்டிவாக ஆரம்பித்தது பேச்சு!

‘‘நடிக்கிற படங்கள் எல்லாம் வில்லேஜ் கெட் அப்... ஆனா, போட்டோ ஷூட்ல மட்டும் பாப் ஸ்டார் மாதிரி போஸ் கொடுக்கறீங்களே..?’’‘‘படத்துல நடிக்கிற நந்திதாவுக்கும் உண்மையான நந்திதாவுக்குமே ஏகப்பட்ட வித்தியாசம்ங்க.

நான் மாடலிங்ல இருந்துதான் நடிக்க வந்தேன். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கேரக்டர்தான் பண்றேன். ஆனா, மாடர்ன் கேரக்டர் எனக்கு செட் ஆகாதுன்னு நெனச்சு, வில்லேஜ் கேரக்டர்கள் தேடி வருதோன்னு எனக்கேகூட சின்னதா ஒரு டவுட் இருக்கு. சரி விடுங்க... கிராமத்து பொண்ணா செட் ஆகுறது கூட ஒரு லக்தான்.

படத்துல பண்ண முடியாத விஷயங்களை போட்டோ ஷூட்லயாவது பண்ண முடியுதே! மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கும்போதும் மாடர்ன் காஸ்ட்யூம்லதான் இருப்பேன். மாடர்ன் லுக் எனக்கு நல்லா வரும்னு இப்படியாவது வெளியே தெரியட்டுமே... என்ன சொல்றீங்க?’’‘‘பாம்பை கையில பிடிக்கறது... மாடு மேய்க்கறது...

கோழி பிடிக்கறதுன்னு வீர தீரச் செயல்கள் நிறைய பண்றீங்களாமே?’’‘‘ஆமாங்க... ‘இடம் பொருள் ஏவல்’ படத்துல மலைவாசிப் பொண்ணு நான். நான் ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்ச படம் இதுன்னு சொல்லுவேன்.

கேரக்டர் பெயர் வெண்மணி. காட்டுல வசிக்கிற பொண்ணுங்க என்ன பி.எம்.டபுள்யூவா ஓட்டுவாங்க? ஏர் புடிச்சு மாடுதான் ஓட்டுவாங்க! அதெல்லாம் எனக்கு ரொம்பப் புது அனுபவமா இருந்துச்சு. பாம்புன்னாலே பயம். ‘ஓபனிங் சீன்ல பாம்பை கையில பிடிச்சிட்டுதான் நீங்க என்ட்ரி ஆகுறீங்க’னு டைரக்டர் சீனுராமசாமி சொன்னதும் ஆடிப்போயிட்டேன். ஒரு வழியா தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு பாம்பை கையில பிடிச்சேன்.

காட்டுக் கோழி எவ்வளவு வேகமா ஓடும்! அத விரட்டிப் பிடிச்சு, யூனிட்ல அப்ளாஸ் வாங்கினது எல்லாம் என்னோட சாதனைகள் லிஸ்ட்ல சேரும். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால
குமாரா’ படத்துல விஜய்சேதுபதி ரொம்ப பேசுவார்.

நான் அமைதியா இருப்பேன். இதுல அவர் சைலன்ட்... நான் வயலன்ட்!’’‘‘ ‘உப்புக்கரு வாடு’, ‘அஞ்சல’ படங்கள்ல எப்படி?’’‘‘ராதாமோகன் சார் டைரக்ஷன்ல இன்னும் 5 படங்கள் நடிக்கக் கேட்டாலும் தாராளமா நான் ரெடி! வெரி ஸ்வீட் பர்சன்.

முழு சுதந்திரம் கொடுப்பார். ‘உப்புக்கருவாடு’ முழுப் படமும் கடற்கரை ஏரியாக்கள்லதான் ஷூட்டிங். அந்த அழகு லொகேஷன்களே எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ‘அஞ்சல’ படத்துல விமல் ஹீரோ. தங்கம் சரவணன் டைரக்ஷன். நான் காலேஜ் ஸ்டூடன்டா நடிக்கறேன். சோழவந்தான் பகுதிகள்ல ஷூட்டிங்.

பொதுவா எனக்கு டீ, காபி குடிக்கிற பழக்கம் இல்லை. அதோட வாசனையே பிடிக்காது. ஆனா, ஒரு டீக்கடை முன்னாடி நடக்கற லவ் ஸ்டோரிதான் ‘அஞ்சல’. நான் டீ குடிக்கிற சீன்ல டீ ஸ்மெல் பிடிக்காம சிரமப்பட்டேன். அப்புறம் எனக்காக போர்ன்விடா கொடுத்து மொத்த சீனையும் எடுத்தாங்க. இது தவிர மிர்ச்சி சிவா கூட ஒரு படத்துல நடிக்கிறேன். ஷூட்டிங் போகுது. படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கல!’’

‘‘சமந்தா, ஹன்சிகா, காஜல் அகர்வால்னு இப்ப போட்டி செமயா இருக்கே..?’’‘‘ப்ச்... என் ஆடியன்ஸ் வேறங்க. அவங்க லெவல் ஆடியன்ஸ் வேற. வருஷத்துக்கு 4 படங்கள் ரிலீஸ் ஆகுற மாதிரி என்னோட கரியர்ல கவனம் செலுத்துறேன்.

நம்பர் 1 இடத்துக்குப் போகணும்னு எப்பவும் நான் விரும்பினதில்ல. நம்பர் 2 ஆகவே தொடர்ந்து இருந்தாலே போதும். அப்போதானே நம்பர் 1 ஆகணும்னு ஹார்டு வொர்க் பண்ணிட்டே இருப்போம். நம்பர் 1 ஈஸியா வந்துட்டா, அதுக்கு அப்புறம் என்ன இருக்கு? ஒரு சுவாரஸ்யமே இல்லாம போயிடாது! நம்பர் 2 இடத்துலயே இந்த குமுதா ஹேப்பி அண்ணாச்சி!’’

‘‘கொஞ்சம் பர்சனல்...’’‘‘ஷூட்டிங் இல்லேனா, செம தூக்கம்தான் பெஸ்ட் ஃப்ரெண்ட். மிச்ச சொச்ச டைம்ல ஷாப்பிங். வாங்குற பொருட்களை எல்லாம் பயன்படுத்துறேனோ இல்லியோ... சும்மாவாச்சும் வாங்கிப் போடுற ஷாப்பிங் மேனியா எனக்கும் உண்டு. சாப்பாட்டு விஷயத்துல ஆந்திரா ஸ்டைல் ஸ்பைஸி ஃபுட்ஸ்னா, செமயா வெட்டுவேன்.

ஐதராபாத் பிரியாணி என் ஃபேவரிட். அதுக்கு அப்புறம் எங்க அம்மா செய்யற புலாவ்... செம டேஸ்ட்டி! நான் வெறுக்கற ஒரு விஷயம் பயணம். எனக்கு டிராவலிங் சுத்தமா பிடிக்காது!’’‘‘சரி, பர்த் டே கேக் எங்கே..?’’ ‘‘வாட்ஸ் அப்ல அனுப்பிடுறேன்...’’

மை.பாரதிராஜா