நியூஸ் வே



பிரபலமாக இருப்பதே பிராப்ளம். சமீபத்தில் மகேந்திர சிங் டோனி ஒரு பழமையான பி.எஸ்.ஏ கோல்டுஸ்டார் புல்லட்டை ஆசையாக வாங்கினார். விடுமுறையில் ராஞ்சியில் இருந்தபோது அதை அவர் வீதியில் ஓட்டியதைப் படம் எடுத்தார்கள்.

முன்புறம் நம்பர் பிளேட் இல்லாமல் டோனி பைக் ஓட்டிய அந்தப் படங்களைப் பார்த்ததும், போக்குவரத்து விதிகளை மீறியதாக அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துவிட்டார்கள். வீட்டுக்கு எடுத்துப் போய் சலானைக் கொடுத்ததும், ‘‘ஸாரி! எனக்கு ரூல்ஸ் தெரியாது’’ என டோனி அபராதம் கட்டி விட்டாராம்.

ஆஸ்கர் விருது பெற்ற ஒரு நடிகை இப்படி ஒரு அவமானத்தை சந்தித்திருக்க முடியாது. ஜூலியான்னே மூர் ‘ஸ்டில் அலைஸ்’ படத்துக்காக இந்த ஆண்டு ஆஸ்கர் விருது பெற்றவர். துருக்கி சுற்றுலா விளம்பரங்களுக்காக அவரை ஒப்பந்தம் செய்த சுற்றுலாத் துறை, அவரது நடிப்பு சரியில்லை என நிராகரித்துவிட்டது. கோபத்தில் முகம் சிவந்திருக்கிறார் ஜூலியான்னே.

வாய்ஸ்

“வெயிலில் நின்று போராடாதீர்கள். கறுத்துப் போய்விட்டால் உங்களுக்கு திருமணம் நடப்பது பாதிக்கப்படும்!’’- போராடும் நர்ஸ்கள் பற்றி கோவா முதல்வர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர்“நான்கில் ஒருவர் மனநலக் கோளாறால் அவதிப்படுகிறாராம். உங்களின் நெருங்கிய மூன்று நண்பர்களைப் பாருங்கள். அவர்கள் நன்றாக இருந்தால், அந்தக் கோளாறு ஆசாமி நீங்கள்தான்!’’
இயக்குனர் மகேஷ் பட்

விஜய் மில்டன் படத்தை முடித்துவிட்டு ஒரு மாதம் குடும்பத்தினரோடு பின்லாந்து அல்லது நார்வேக்கு சம்மர் ட்ரிப் அடிக்கிறார் விக்ரம்.

‘அட்டகத்தி’ தினேஷுடன் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் நடிக்கிறார் ‘அமரகாவியம்’ மியா ஜார்ஜ். ‘‘கிராமத்துப் பொண்ணு. என்னோட கேரக்டர் பேர் லட்சுமி. ஷூட்டிங் திண்டுக்கல்ல தொடங்கியிருக்கு’’ என்கிறார் மியா.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆந்திராவின் எல்லா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களுக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவில் ஐபோன் 6 வாங்கிக் கொடுத்திருக்கிறார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. மொத்த பட்ஜெட், ஒன்றரைக் கோடி ரூபாய்.

சமீபத்தில் ஒரு விழாவில் மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ராய் சகிதம் பங்கேற்றார் அமிதாப் பச்சன். ஐஸ்வர்யாவின் ஆடை அடிப்புறம் சரியாக விரியாமல் இருக்க, எந்த ஈகோவும் இல்லாமல் மருமகளின் ஆடையை சரிசெய்த அமிதாப்பை ஆச்சரியத்துடன் பார்த்தனர் எல்லோரும்!

சுந்தர்.சியும், ரஜினியும் சத்தம் இல்லாமல் சந்தித்து கதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிகம் செலவழிக்காமல், தியேட்டர்காரர்கள் பின்தொடர்ந்து வராமல் சின்ன பட்ஜெட்டில் ஒரு காமெடிப் படம் எடுக்க நினைக்கிறார் ரஜினி. அதை சொந்தப் படமாகவே தயாரிக்க முடிவு செய்துவிட்டார்.

ஷங்கர் ரிலையன்ஸுக்கு படம் செய்வது முடிவாகிவிட்டது. அதையே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் எடுக்கிறார்கள். அனிருத் மியூசிக் டைரக்டர் என்பது மட்டும்தான் அதில் உறுதியாகியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி பெயரில் ஒரு மாம்பழ ரகத்தை உருவாக்கியுள்ளார், உத்தரப் பிரதேசத்தின் மலிகாபாத் பகுதியைச் சேர்ந்த ஹாலி கலிமுல்லா. இவர் இதுவரை இப்படி 300 ரகங்களை அறிமுகம் செய்தவர். கொல்கத்தா மற்றும் லக்னோவில் பிரபலமான இரண்டு ரகங்களை இணைத்து மோடி மாம்பழத்தை உருவாக்கினார் கலிமுல்லா.

ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்திருக்கிறது. பிரதமர் மோடி முயற்சியில் இது நிகழ்ந்தது. எனவே ‘அந்த நாளில், எல்லா நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகங்களும் யோகா முகாம் நடத்த வேண்டும்’ என்பது பிரதமரின் உத்தரவு. இதனால் பல நாடுகளில் யோகா பயிற்சியாளர்களைத் தேடி அலைகின்றனர் இந்தியத் தூதர்கள்.

‘பத்து எண்றதுக்குள்ளே’ படத்தில் டபுள்ரோலில் நடித்து வரும் சமந்தா, ஒரு ரோலில் நேபாளிய கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறார். சமந்தாவின் முகச்சாயலுக்கு நேபாளிப் பெண் கெட்அப் ரொம்பவே பொருந்திவிட, நடிப்பிலும் அசத்தி அப்ளாஸ் அள்ளியிருக்கிறார்.

மிஷ்கின், சரத்குமார் நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்டை முடித்து விட்டார். அடுத்து அவரின் அசோசியேட் ஆதித்யா ஒரு படத்தை டைரக்ட் செய்ய, மிஷ்கினே அதற்குக் கதையும் எழுதுகிறார். இயக்குநர் ராம் மறுபடியும் அதில் நடிக்கிறார். ப்ரியாமணி ரீ-என்ட்ரியும் அதில் நடக்கிறது. மிஷ்கின்தான் வில்லன். ஒருத் தருக்கு இத்தனை பரிமாணமா!

இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘அகிரா’வுக்காக மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டிருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. ‘‘படத்துல நான் ஃபைட் பண்றேன். அதுக்காக தற்காப்புக் கலைகள் கத்துக்கறேன். படம் வந்ததும் என்னோட வொர்க்கை கண்டிப்பா நீங்களே பாராட்டப் போறீங்க’’ என ஹேப்பியாகிறார் சோனாக்ஷி.

விஷால் சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்ததுடன், ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக ஆக்கியிருக்கிறார். அங்கே தனது ரசிகர் ஒருவரின் குழந்தைக்கு ‘வெற்றி’ என பெயர் சூட்டியிருக்கிறார் விஷால். இந்த மாற்றங்களால் விஷாலின் ரசிகர்கள் பூஸ்ட் அப் ஆகியிருக்கிறார்கள்.

‘ருத்ரமாதேவி’ படத்தின் சிம்பொனி இசைக் கோர்ப்புக்காக ஹங்கேரி சென்றிருக்கிறார் இளையராஜா. அதற்கு முன்பாக முழுப்படத்தையும் பார்த்து ரசித்தவர், அனுஷ்காவின் உழைப்பை ரொம்பவே பாராட்டியிருக்கிறார். இதை அனுஷ்காவிடம் தெரிவித்ததும், உடனே இசைஞானியை சந்தித்து ஆசி பெற்று மகிழ்ந்திருக்கிறார் அனுஷ்கா.

‘பிசாசு’ ஹீரோயின் பிரயோகா, இப்போது ஆர்.கண்ணன் டைரக்ஷனில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஒரு பகுதியை கனடாவில் ஷூட் செய்ய உள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் சுஷ்மிதா சென். இந்த பிரபஞ்ச அழகியை அந்த அளவுக்கு ஈர்த்திருக்கிறது, தேசிய விருது பெற்ற வங்காளி இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜியின் கதை. ‘நிர்பாக்’ என்ற இந்தப் படத்தில் அவர் நிறைய நேரம் பிணமாக நடிக்கிறார் என்பதும் கூடுதல் செய்தி.