பெரிய முதலாளி மாணிக்கத்தின் மறைவிற்குப் பின் அவர் மகன் சேகர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஒருநாள் அலுவல் விஷயமாக அவர் என்னையும் காரில் அழைத்துக்கொண்டு நாள் முழுக்க சுற்றினார்.

மதியம் ஒரு மணிக்கெல்லாம் நாங்கள் ஆடிட்டர் அலுவலகத்தில் ஒரு வேலைக்காகப் போக வேண்டி இருந்தது. காரிலிருந்து இறங்கும்போது திடீரென டிரைவரை அழைத்த முதலாளி நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தார். ‘‘பக்கத்துல எங்கேயாவது சாப்பிட்டு வந்துடு. நேரத்துக்கு சாப்பிடணும்... புரியுதா?’’ என்றார் அக்கறையாக!
அட, இவ்வளவு இளகிய மனம் கொண்டவரையா ‘திமிர் பிடித்தவர், மனிதர்களை மதிக்க மாட்டார்’ என்றெல்லாம் சக ஊழியர்கள் பேசுகிறார்கள் என நான் நொந்துகொண்டேன். ஆடிட்டர் ஆபீஸில் வேலை முடித்து நாங்கள் தொழிற்சாலைக்குக் கிளம்பினோம். அப்போது மணி இரண்டை நெருங்கியது. உயர்தர உணவு விடுதியொன்றில் காரை நிறுத்தச் சொன்ன சின்ன முதலாளி, என்னையும் சாப்பிட அழைத்தார். மெல்லிய இசையும் கூசும் வெளிச்சமும் பரவியிருந்த ஹாலில் நாங்கள் இருவரும் சாப்பிட அமர்ந்தோம்.
அப்போது சின்ன முதலாளி மெல்லிய குரலில் பேசினார்... ‘‘டிரைவரை சரிசமமா உட்கார வச்சி, சாப்பிடறது எனக்குப் பிடிக்காது. அதான் அவனுக்குப் பணம் கொடுத்து முன்னாடியே சாப்பிடச் சொல்லிட்டேன்!’’எனக்கு லேசாக தலை சுற்றியது.
ஜெ.கண்ணன்