அழியாத கோலங்கள்



இந்திய சினிமாவின் ஒரே ஒரு சிறந்த சிந்தனையாளர் என்று யாரையாவது சொல்லச் சொன்னால், மறைந்த என் நண்பர் பாலுமகேந்திரா அவர்களைத்தான் சொல்வேன். தம்பி கமலின் அருமையும் பெருமையும் தகுதியும் அறியாமல், நான் ஏதோ இன்னொரு பல்கிவாலா அல்லது ராம் ஜெத்மலானி என்ற நினைப்பில் கமல் சம்பாதிக்கும் பணத்தை என் கோட்டுப் பையில் அடைத்துக்கொண்டு, அதன் விஷம் மண்டைக்கேறி ‘சட்டம் என் கையில்’ என்று ஆர்ப்பரித்த காலம் அது.

ஒரு யாஷிகா டபுள் எய்டு கேமராவில் கலர் படம் பிடித்து லண்டனுக்கு அனுப்பி, ரிவர்ஸ் ப்ராசஸிங் செய்து ஓட்டிப் பார்த்துவிட்டு, சினிமா பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்று, கமலிடம் கால்ஷீட் கேட்கும் தயாரிப்பாளர்கள் - இயக்குனர்களின் வயிற்றெரிச்சலை நான் கொட்டிக்கொண்ட காலம். பின்னால் பாலுவுடன் நண்பனாகி, சினிமா என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். நாள் கணக்கில் அவருடன் உட்கார்ந்து பேசியே நல்ல சினிமா பற்றி கற்றுக்கொண்டேன்.

ஒரு கதாநாயகன் கைவசமிருப்பதால் தொடர்ந்து படம் எடுப்பதை தொழிலாகக் கொண்டு செயல்பட பரமக்குடியிலிருந்து வந்தவன் நான். பின்னால் ‘உதிரிப்பூக்க’ளில் நடித்ததைப் பற்றிக்கூட, ‘‘அது ஒரு நல்ல படம்... அதில் நடித்து நல்ல சினிமாக்களில் தொடர்புகொள்ளத் துடித்தேன்’’ என்று பொய் சொல்லத் தயாரில்லை. இந்தத் தொடரின் தலைப்பே மறைந்த நண்பர் பாலுமகேந்திரா அவர்களின் முதல் தமிழ்ப் படத்திலிருந்து எடுத்தது தான். சில டபரா டம்ளர்களில் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்... ‘இது உடுப்பி ஹோட்டலில் திருடியது’ என்று. நீங்கள் தாராளமாகச் சொல்லுங்கள், ‘இந்தத் தலைப்பு பாலுமகேந்திராவிடம் திருடியது’ என்று!

இயக்குநர் பாலாவைப் போல் எத்தனையோ அறிவுஜீவிகளை ஆரம்பத்து கேமராக்களை முடுக்கியது போல் முடுக்கி விட்டிருக்கிறார். நான் அவரினும் பத்து வயது மூத்தவன். வாரிசாக எதையும் கேட்க முடியவில்லை. ஒரு ஏகலைவனாக, அவர் மறைவுக்குப் பின் துரோணர் ஏகலைவனுக்குக் கொடுத்த கட்டை விரலாக எடுத்துக்கொண்டேன். மற்ற மாணவர்கள் போலல்லாமல் அவர் பக்கத்தில் அமர்ந்து நான் கற்றதெல்லாம்... அவர் அறியாமல் பெற்றதுதான்!

நான் முன்பு ஜெமினி கணேசன் பற்றிக் கூறியது போலத்தான் இவருக்கும் காதலிகளின் எண்ணிக்கை. அது இவர் படைப்புத் திறனை சில பொறாமைப் பேர்வழிகள் குறைத்து மதிப்பிடும் அளவுக்கு ஆகியிருக்கிறது. மறைந்த ஷோபாவுடனும் நான் நட்புடன் பழகியவன். அந்தச் சிறு வயதில் நடிப்பு, இயக்கம் பற்றியெல்லாம் பேசக் கூடியவர். அவர் விருது பெற்ற ‘பசி’ படத்தை இயக்கிய துரை, என் இனிய நண்பர். பாலுமகேந்திராவின் சிந்தனைத் திறனில் மயங்கி, ‘வாழ்ந்தால் அவருடன் வாழ்வேன்’ என்று சொல்லியே அதைச் செய்தவர் ஷோபா. அதே போலத்தான் பிறரும்.

இவர்களெல்லாம் அவருடைய திறனில் மயங்கி ஒன்றியவர்களே தவிர, ‘பாலுமகேந்திராவோ ஜெமினியோ பெண்களைத் துரத்திப் பிடித்து காதல் செய்தார்கள், பின்பு கைவிட்டுவிட்டார்கள்’ என்பதெல்லாம் பொய். இவர்களுடைய ஈர்ப்பு சக்தியில் ஒரு கால் பங்கு 35 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் இருந்திருந்தால், நானும் இவர்கள் செய்ததைத்தான் செய்திருப்பேன்.கமல் வளரும் காலத்திலேயே பாலுவுடன் நட்பும் மரியாதையும் கலந்து பழகியவன் நான்.

பாலுவுக்கு எப்போதுமே சராசரிக்கு அப்பாற்பட்ட சிந்தனை. ‘முள்ளும் மலரும்’ தயாரிப்பாளர் செட்டியார், கமலுக்கு நெருங்கிய நண்பர். அந்தப் படத்தின் இயக்குனர் மகேந்திரன்; ஒளிப்பதி வாளர் பாலுமகேந்திரா. கடைசி நாள் படப்பிடிப்பன்று தயாரிப்பாளர் படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி கோபமாகப் போய் விட்டார். கமல் தலையிட்டு தன் படப்பிடிப்பு கேமராவையும் லைட்மேன்களையும் தளத்துக்கு அனுப்பி வைத்து, என்னை தயாரிப்பாளருக்கு பதிலாக உடனிருந்து படப்பிடிப்புக்கு உதவி செய்யச் சொன்னார்.

செட்டியாரை தன்னுடன் அழைத்துப்போய் வீட்டில் விட்டுவிட்டு, எல்லாப் பொறுப்புகளையும் கமல் தானே ஏற்றுக்கொண்டார். அதனால் ‘முள்ளும் மலரும்’ எடிட்டிங், டப்பிங் அறைகளுக்கெல்லாம் நானே சென்று செட்டியார் சார்பாக கவனித்தேன். அன்று ஏற்பட்டது எனக்கும் பாலுவுக்கும் நட்பு. அன்று பாலுவுக்கு அவர் பழைய பாஸ்போர்ட் சம்பந்தமாக ஒரு வழக்கு கூட நடந்தது. அது கூட அவர் மீது ஏற்பட்ட பொறாமையால் நடந்ததே தவிர, சட்டக் குற்றம் எதுவுமில்லை.

ஒருமுறை ‘திமிஸிணி  ’ என்ற பெண்கள் ஓரினச் சேர்க்கை பற்றிய படத்திற்கு பெரிய எதிர்ப்பு ஏற்பட்டபோது சென்னையில் அந்தப் படத்துக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் என்னைப் பேச அழைத்தார்கள். நடிகை நந்திதா தாஸ் பங்கு பெற்றார். ஒருசிலர் ‘சமூகம் ஒப்புக்கொள்ளாததை எதிர்ப்பது கடமை’ என்றும் மற்ற சிலர் ‘அது தனி மனித உரிமை’ என்றும் பேசினார்கள். படத்தின் கதையே, ஆண்களால் கொடுமைப்படுத்தப்பட்ட பெண்களான ஷபானா ஆஸ்மியும் நந்திதா தாஸும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள் என்பதுதான்.

நான் பேசும்போது கூறினேன். ‘‘ஷபானா ஆஸ்மியும் நந்திதா தாஸும் எந்த ஒரு ஆணும் மயங்கி காதல் கொள்ளத் தூண்டும் பெருமை, மதிப்பு, அழகு அத்தனையும் பெற்றவர்கள். நான் நந்திதா தாஸை காதலிக்கத் தயார். அவர் வேறு ஒரு ஆண்மகனைக் காதலித்தால் நான் ஒரு காதலியைத்தான் இழக்கிறேன். நந்திதா அவர்கள் ஷபானா ஆஸ்மியைக் காதலித்து மணந்தால் நான் இரண்டு காதலிகளை அல்லவா இழக்கிறேன்! இந்தக் கணக்கை முழுமையாகப் போட்டுப் பாருங்கள்...

இந்தியாவின் மக்கள்தொகையில் 25 கோடிப் பெண்கள் மற்ற 25 கோடிப் பெண்களைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டால்? பாக்கியுள்ள ஐம்பது கோடி ஆண்களுக்கும் காதலிக்க பெண்களே கிடைக்க மாட்டார்களே! இது ஒன்றுதான் எங்கள் கவலை’’ என்று முடித்தேன்.கூட்ட முடிவில் பாலுமகேந்திரா எனக்கு ஒரு அறிவுரை சொன்னார்...

‘‘சாரு அண்ணா! உங்களுக்குள்ளே ஒரு ‘குட்டிப் பையன்’ ஒளிந்து கொண்டிருக்கிறான். அவனை மட்டும் தப்பி ஓட விடாதீர்கள்..!’’ நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அந்தப் பையன் இருக்கிறானா... ஓடி விட்டானா?ஜெமினி கணேசன் பற்றிக் கூறியது போலத்தான் இவருக்கும் காதலிகளின் எண்ணிக்கை. அது இவர் படைப்புத் திறனை சில பொறாமைப் பேர்வழிகள் குறைத்து மதிப்பிடும் அளவுக்கு ஆகியிருக்கிறது.

மாதங்களில் இன்று

பங்குனி

ஆண்டின் பன்னிரண்டாவது மாதம். சூரியன் மீன ராசியில் இருப்பார். ஆகவே இந்த ஆண்டின் தமிழ்ப் பெயரும் ‘மீனம்’ ஆகும். கோடை வெயில் அதிகரிக்கும் மாதம் இது. குலதெய்வ வழிபாட்டுக்குரிய மாதமும் இதுவே.

(நீளும்...)

சாருஹாசன்

ஓவியங்கள்: மனோகர்