கவிதைக்காரர்கள் வீதி



* குழந்தைகள் தீட்டும்
பொங்கல் குறித்த
ஓவியங்களில்
புண்படாமல் வாழ்கிறது
நம் பண்பாடு!

* உழவர் என்றோர்
இனம் உண்டு
அவருக்கும் வயிறு
என்றோர் இடம் உண்டு
என்று
சொல்லிவிட்டுச் செல்கிறது
பொங்கல்!

* வறட்சியிலும்
இறைச்சி ஆகாத
மாடுகளே சந்திக்கின்றன
மாட்டுப் பொங்கலை!

* அண்டை மாநில அரிசி
தமிழகம் வருகிறது
பொங்கலுக்கு!

- வீ.விஷ்ணுகுமார்,கிருஷ்ணகிரி.

* வானம் பார்த்தே
விதைத்துப் பழக்கப்பட்டவன்
அண்ணாந்து பார்க்கிறான்
விற்ற வயலில்
முளைத்த
அடுக்குமாடி வீடுகளை!

* பங்காளிச் சண்டையில்
தரிசான வயலில்
உடைந்து கிடக்கும் மண்பானை
சிதறிக் கிடக்கிறது
தாத்தா சேகரித்து வைத்த
விதை நெல்!

* மாட்டுப் பொங்கலன்றும்
பசியோடு மாடுகள்
சுவரொட்டி தின்னும்!

- பெ.பாண்டியன்,கீழசிவல்பட்டி.