அடை மழை!



தொலைக்காட்சி மெகா தொடர்கள் துவங்கிய காலத்தில் ‘நாளைய விஞ்ஞானம் இதுதான்யா’ என இயக்குநர் சிகரம் பாலசந்தர் சொன்னதிலிருந்தே அவர் ஒரு தீர்க்கதரிசி என்பது தெளிவாகிறது!
- ஈ.கோமதி நாயகம், கூத்தப்பாக்கம்.

மழையால் பாதிக்கப்பட்ட ‘முடிச்சூர்’ மீண்டு எழுந்து நிற்பது கண்டு மகிழ்ச்சி. தன்னம்பிக்கையுடன் அதற்காக முயற்சி எடுக்கும் ஊராட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டுகள்!
- கோ.சு.சுரேஷ், கோவை.

‘நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா?’ சரியான தலைப்பு. வெள்ள நாட்களின் மீட்புப் பணிகளில் பெருமைப்பட வைத்த இளைஞர்களில் ‘சிலர்’ புத்தாண்டு கொண்டாட்டங்களில் ‘வேறு முகம்’ காட்டியது வருத்தமே!
- சிவமைந்தன், சென்னை-78.

தமன்னா பெரும் நடிகர்களோடு தன் பிறந்த நாளைக் கொண்டாடி இருக்காங்களே. அடடா மழடா... பாடிய பொண்ணு காட்டுல இப்போ அடை மழையோ!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

கே.எஸ்.ரவிகுமார் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக மீண்டும் படம் பண்ணுகிறார் என்றால் அது நிச்சயம் அதிரடி படமாகத்தான் இருக்கும்.
- வி.வி.வினிஷா, சிவகாசி.

ஆனாலும், ‘மல்லாட்ட’ விற்கிற வயசாளிக்கு சால்வை போர்த்துவது நல்ல எழுத்தாளருக்கே உரிய குணம்! நாஞ்சில் அய்யா... நீங்க நல்லவர் அய்யா!
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

அனஹிட்டாவின் சைக்கிள் பயணம் ஒரு சாதனை என்பதோடு, பெண்களுக்கு பல பயனுள்ள நல்ல அறிவுரைகளையும் வழங்கி அசத்தியுள்ளார்!
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.

உலக அழகி ஐஸ்வர்யா ராயும், பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னும் இணைந்திருக்கும் ஸ்டில் ரொம்பப் பசுமையாக அந்தப் பக்கத்தையே ஜொலிக்க வைத்துவிட்டது.
- எஸ்.பூபதி ராவ், புதுச்சேரி.

‘இப்படியெல்லாம் ஒரு அதிர்ஷ்டம் கிடைக்குமா?’ என்று பிரமிக்க வைத்து விட்டது ‘விநோத ரஸ மஞ்சரி’யில் கொலம்பியாவுக்கு கிடைத்த கடல் புதையல்!
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

‘உழைப்பே உயர்வு’ என்று கூறும் எஸ்.ஏ.சந்திரசேகரனின் அர்ப்பணிப்பு, ‘வயது உழைப்பிற்குத் தடையல்ல’ என்பதை நிரூபிப்பதாய் அமைகிறது!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

‘ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த’ கதையாக கேஸ் மானியம் விஷயத்தில் முறையாக வருமான வரி கட்டுபவர்களை மடியில் கை வைத்து விட்டதே மத்திய அரசு!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

 ‘ஐந்தும் மூன்றும் ஒன்பது’ மர்மத் தொடர் இந்த இதழில் இடம் பெறவில்லை.

இதழுடன் வழங்கப்படும் இலவசப் பொருட்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே!