காட்சி



பெட்டிக்கடை மணிக்கு அப்பாசாமியைப் பார்த்தாலே எரிச்சல்தான். தினமும் பஸ் ஏற வருபவர், ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து அன்றைய செய்தித்தாள், பத்திரிகைகள் என எல்லாவற்றையும் ஓசியிலேயே வாசித்துவிட்டுத்தான் கிளம்புவார். ஒரு நாள் கட்டு வர லேட்டானாலும், ‘‘ஏம்பா, இன்னைக்கு அந்தப் பத்திரிகை வரணுமே... வரலையா?’’ என முதல் போட்ட முதலாளி மாதிரி கேள்வி வேறு!

‘இது கடையா, இல்லை கண்காட்சியா? எல்லாரும் இப்படியே ஓசியில் படிச்சிட்டு படிச்சிட்டு போனா தொழில் என்னாகுறது?’ மனம் புழுங்குவான் மணி.ஆனால் அன்று அப்பாசாமி கடைப் பக்கமே திரும்பவில்லை. செய்தித்தாளையும் புரட்டவில்லை. சோகமாக எங்கோ பார்த்தபடி நின்றார்.

‘‘என்ன சார்... ஒரு மாதிரியா இருக்கீங்க..?” என்றான் மணி.‘‘ஆமா தம்பி, மனசு சரியில்ல!’’‘‘ஏன்? என்னாச்சு?’’சற்று அமைதியாக இருந்தவர் சொன்னார், ‘‘கல்யாணத்துக்கு தயாரா இருக்குற என் பொண்ணு சாந்தியை எல்லாரும் பொண்ணு பார்க்க வர்றாங்க. ஆனா, யாரும் கல்யாணம் வரைக்கும் வர்றதில்லை. வேதாரண்யத்துல இருந்து நேத்து வந்தவங்க கூட பார்த்துட்டுப் போனதோட சரி. என் பொண்ணை என்ன கண்காட்சிக்கா வச்சிருக்கேன்... பார்த்துட்டுப் பார்த்துட்டு போக..?’’ என்றார் அப்பாசாமி.‘உனக்கு வந்தா தெரியுதுல்ல...’ மனசுக்குள் சொல்லிக்கொண்டான் மணி!
          

தங்க.நாகேந்திரன்