பாஷை



பிரபல இசை அமைப்பாளர் சந்துருவின் மகளுக்குத் திருமணம். அதற்கான ஏற்பாடுகளை அவர் மனைவி ரேணுகா மும்முரமாக கவனித்துக்கொண்டு இருந்தாள்.சமையல் பொறுப்பை ஒரு வட இந்திய கான்ட்ராக்டரிடம் ஒப்படைத்துவிட்டு அவரிடம் பாதி ஆங்கிலம் பாதி தமிழில் பேசி புரிய வைத்துக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்து திகைத்துப் போனார் சந்துரு.

பந்தல் போட ஒரிசாக்காரர்களிடமும், மேடை அலங்காரத்துக்கு டெல்லியிலிருக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகியிடமும் பாஷை புரியாமல் விளக்கிக் கொண்டிருந்த மனைவி மீது சந்துருவுக்கு ஆத்திரமே வந்துவிட்டது. மகளுக்கு மெகந்தி வைக்க மும்பையிலிருக்கும் யாரோ ஒரு நிபுணருடன் மொபைலில் தட்டுத்தடுமாறி பேசிக்கொண்டிருந்த ரேணுகாவிடம் இருந்து மொபைலைப் பிடுங்கினார்.

‘‘எதுக்கு இப்படி பாஷை புரியாதவங்களுக்கு வேலையைக் கொடுத்து கஷ்டப்படுறே..? இங்கே இதுக்கெல்லாம் ஆட்களுக்கா பஞ்சம்?’’ - கோபம் குரலில் தெரிந்தது.‘‘நீங்க தமிழ்ப் பாட்டுக்கெல்லாம் தமிழே தெரியாத வேற மொழிப் பாடகர்களை அழைச்சிட்டு வந்து பாட வைக்க எவ்வளவோ கஷ்டப்படுறீங்க. அந்தக் கஷ்டத்தை ஒருநாள் நானும் அனுபவிக்கிறேனே... என்ன தப்பு?’’ - ரேணுகா மறைமுகமாகச் சொல்ல வருவது சந்துருவுக்குப் புரிந்தது.முதல் வேலையாக வரவேற்புக்கு அமெரிக்காவிலிருந்து கூப்பிட்ட பிரபல பாப் பாடகரின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, உள்ளூர் ஆட்களைத் தேடினார் சந்துரு.                          

வி.சிவாஜி