பாலா அண்ணன் படத்தில் நடிக்கறது ஒரு கனவு!



‘தாரை தப்பட்டை’ சசிகுமார்

‘சுப்ரமணியபுரம்’தான் ஆரம்பம். இதோ சசிகுமாரின் அடுத்த அவதாரம், பாலாவின் ‘தாரை தப்பட்டை’! பொங்கலுக்கான பரபரப்புச் செய்திகளில் ‘தாரை தப்பட்டை’யும் ஒன்று. படத்தின் ரெண்டு நிமிட டிரெய்லரே அவ்வளவு அழகாய் வசீகரிக்கிறது! ‘‘கரகாட்டம் என்ன மாதிரியான ஒரு கலை! அதை ஆடி நம்மை சந்தோஷப்படுத்துபவர்களின் வாழ்க்கை பற்றி நமக்குத் தெரியுமா?

அவர்களுக்குள்ளே எவ்வளவு பெரிய சோகம் புதைஞ்சு கிடக்கு! அவங்களோட கனவு, நிராசை, கொண்டாட்டங்களை நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா? அவர்களின் காதல், ஈரம், நெகிழ்ச்சி, பரவசம், வலிகள் என எல்லாவற்றையும் காட்டக்கூடிய கதைதான் ‘தாரை தப்பட்டை’. எனக்கு இதுல பெயர் ‘சன்னாசி’ ’’ - கலகலவென இன்னும் பக்குவமாகப் பேச ஆரம்பிக்கிறார்.

‘‘அதிக கவனத்திற்குள்ளாகி இருக்கும் படம். என்ன எதிர்பார்ப்போட வந்தா நல்லாயிருக்கும்?’’‘‘யாரும் அவருக்குத் தேவையில்லை. அவரே ஒரு பிராண்ட்தான். இது ‘பாலா படம்’ங்கிற ஒண்ணே போதும். அதுவே ஆயிரம் கதை பேசும். உணர்வுகளை அப்படியே அடுக்கடுக்கா எடுத்து வைக்கும். எல்லாம் இருக்கும். ‘தாரை தப்பட்டை’னு பெயர்ல கரகாட்டக் குழு வச்சிக்கிட்டு இருக்கிறவங்களோட ரத்தமும் சதையுமான கதை. நம்மளை சந்தோஷப்படுத்தறவங்க பத்தின கதைதானே, அதுவும் அப்படித்தான் இருக்கும். பாலா படம்னு வந்து சேர்ந்தால் எல்லாமே இருக்கு.

நான் துக்கத்தை தூக்கிச் சுமக்கிற, சந்தோஷத்தைக் கொண்டாடுகிற மனுஷன். அழிஞ்சு போய்க்கிட்டு இருக்கிற இவ்வளவு பெரிய கலையைப் பதிவு பண்றது சாதாரண வேலையில்லை. இதை பாலா அண்ணன் முன்னெடுத்துச் செய்தது இன்னும் விசேஷம். சினிமா, டி.வி., மொபைல்னு எல்லா என்டர்டெயின்மென்ட்டும் கைக்குள் வந்து சேர்ந்திருச்சு.

ஆனால், அவங்க வாழ்க்கை கைவிட்டுப் போயிருச்சு. அத்தனை பேர் பார்க்க, வெறும் காலால் ஆடுகிற ஆட்டம் இருக்கே... அதுக்கொரு வலு வேணும், கலகலனு வெள்ளையா சிரிக்கிற மனசு வேணும். மனசு கனத்துக் கிடந்தாலும் வெளியே காட்டிக்காம விசிறி விசிறி ஆடணும். இது ஒரு ஃபீலிங்கான கதை. ஆனா, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், ஜாலி, கூத்து, காதல்னு ஊர்த் திருவிழா மாதிரி கலகலப்பா இருக்கும். நான் இந்தப் படத்தைப் பத்தி இப்படிச் சுருக்கி சொல்றது கூட சரியானு தெரியலை. ஆனால், படத்தில் நிறைய நிகழும். அது உங்களை அவங்களோட உலகத்தில் கொண்டு போய் வைக்கும். ஒரு அனுபவம் மாதிரியும் பார்க்கலாம், அப்படியே ஒரு முழு நீள வாழ்க்கையோட தரிசனம் இருக்கு!’’

‘‘வரலட்சுமி ரொம்ப நேர்த்தியா பண்ணியிருக்காங்கனு பேச்சு இருக்கே?’’‘‘நிஜம்தாங்க. அருமையாக, இதுதான் அவங்களுக்கு முதல் படம் மாதிரி செய்திருக்காங்க. ஆட்டம், பாட்டம் மட்டுமல்ல, உணர்வுகளை வெளிப்படுத்தி நடிச்சு இருக்கிறதிலும் உச்சபட்சமா செய்திருக்காங்க. அவங்களுக்குப் பெரிய மரியாதை கிடைக்கும். விருதுகள் நிறைய கிடைச்சாலும் ஆச்சரியம் இல்லை. அப்படி ஒரு உழைப்பு. அவங்களுக்கு ‘சூறா
வளி’னு பேரு. அது மாதிரியே சுத்தி வளைச்சு நடிப்பில் அடி பின்னியிருக்காங்க!’’

‘‘பாலாவோட அசிஸ்டென்ட்டா வந்து, அவர் படத்துல ஹீரோவா... மதுரையிலிருந்து புறப்பட்டபோது நினைச்சுப் பார்த்தீங்களா சசி?’’
‘‘சத்தியமா இல்லை. யோசிச்சுப் பார்த்தது கூட கிடையாது. அதெல்லாம் ஒரு பெரிய பாக்கியம், கொடுப்பினை. முதல் நாள், முதல் ஷாட்ல பாலா அண்ணன் டைரக்‌ஷனில் நடிச்சது எப்படி இருந்ததுனு என்னை எங்கே போனாலும் கேக்கறாங்க. தெரியாது. எனக்கு சொல்லத் தெரியலை. என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளில் கொண்டு வந்து சேர்க்கிறது அவ்வளவு ஈஸியா இல்லை. நான் இங்கே ஹீரோவே இல்லை. நான் அவருக்கு சிஷ்யன், அவ்வளவுதான்.

அதற்கு மேல் எனக்கு இந்தப் படத்தில் பெரிய பொறுப்போ, சிறப்போ கிடையாது. அவர் சொல்லிக் கொடுக்கிறதை திருப்பிச் செய்றது தான் என் வேலை. ‘இப்படிப் பாரு, இப்படி திரும்பிட்டு நடந்து வா’னு சொல்வார், படத்தில் பார்த்தால்தான் அது எப்படியெல்லாம் வரும்னு தெரியும்... அதெல்லாம் ஒரு மேஜிக். ‘உன்னத்தான் நடிக்க வைக்கிறேன்... கொஞ்சம் டான்ஸ் ஆடக் கத்துக்கோ, நாதஸ்வரம் பழகணும், தவிலு அடிக்கணும்’னு சொன்னார். ஒரு மாதம் ஒருமுகப்படுத்தி பழகிக்கிட்டுப் போனேன்!’’

‘‘இளையராஜாவோட ஆயிரமாவது படத்தில் நீங்க...’’‘‘இப்படியொரு வரலாற்று நிகழ்விலே என் பெயரும் ஓரத்தில் இருக்கும்னு நினைக்கவேயில்லை. இசை அவர் ராஜ்ஜியம். அங்கே எல்லாமே நல்லாத்தான் நடக்கும்!’’‘‘உடல் ரீதியா பாலா படத்தில் கஷ்டப்படணும்னு சொல்வாங்களே..?’’
‘‘எல்லாமே நம்ம நல்லதுக்குத்தானே. இஷ்டப்பட்டுத்தானே கஷ்டப்படுறோம்.

 நடிக்கிற எங்களுக்குத்தானே பின்னாடி பெருமை! இது நமக்காக ஒரு இயக்குநர் வைக்கிற விஷயம் இல்லையா? படத்துல முதல் என்ட்ரி ஆனதிலிருந்து, கடைசியாக ஆள் வருகிற வரைக்கும் ஒரு ஒழுங்கு, நேர்த்தி... கேரக்டருக்குள் தள்ளுறார் இல்லையா, இதைப் போய் கஷ்டம்னு யாராவது சொல்வாங்களா? அவர்கிட்ட நடிக்கிறது எல்லாமே கத்துக்கிறதுதான். அவரு ஒரு பெரிய பள்ளிக்கூடம். ‘சேது’வில் அவர்கிட்ட ஆரம்பிச்சேன். கடைசி வரைக்கும் அவர் கூட இருக்கணும்னு ஆசைப்படுவேன். அதுக்கு எந்தப் பங்கமும் வந்திடக் கூடாது!’’

‘‘அப்படின்னா, அவர்கிட்டே நடிக்கிறது சிரமம் இல்லையா..?’’‘‘வெளியில் இருந்துதான் அப்படி ஒரு பேச்சு வருது. விக்ரம், சூர்யா, ஆர்யா... இப்படி எல்லாருமே ஆளுக்கு ரெண்டு படம் பண்ணிட்டாங்க. ஆனால், அத்தனை பேரும் ஒவ்வொரு பேட்டியிலும் ‘பாலா கூப்பிட்டால் உடனே அவர் படத்தில நடிக்கத் தயாரா இருக்கேன்’னு சொல்றாங்க. இதெல்லாம் சாதாரண வார்த்தையில்லை. சொல்லப் போனால் பெரிய ஹீரோவோ, புதுசா வந்த ஆர்டிஸ்ட்டோ...

 யாரா இருந்தாலும் பாலா அண்ணன் படத்தில் நடிக்கிறது ஒரு கனவா இருக்கும். பாலா அண்ணனை கடுமையானவர்னு சொல்றவங்க எல்லாருமே தூரத்திலிருந்து அவரைப் பார்க்கிறவங்க. பக்கத்திலிருந்து அவரை நுட்பமா பார்த்தால் எல்லாம் புரியும். நான் கத்துக்கிட்டது எல்லாமே அவர்கிட்ட இருந்துதான். இன்னும் சொல்லப்போனால் அவர் ஒரு மார்க்கம். இதில் நிறைய பேர் பயணித்து இலக்கை அடைந்திருக்கிறார்கள்!’’

- நா.கதிர்வேலன்