குட்டிச்சுவர் சிந்தனைகள்



டாஸ்மாக்கில் சைடு டிஷ் கொண்டு வர லேட்டானதால் கொட்டு வாங்கும் சட்டை பட்டனில்லா சிறுவன்; கார் கண்ணாடியின் தூசிகளைத் தட்டிவிட்டு ஓம் படம் வரைந்து தலையைச் சொறியும் அழுக்கு சட்டைக்காரன்;

தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுளை முச்சந்திக்கு இழுத்து வரும் சாலையில் படம் வரைபவன்; களைப்புக்குத் தூங்கப் போறானோ, இல்லை எவனோ உழைக்க முதலாளி சோம்பலில் உருளப்போறானோ என்ற கேள்விகளைத் துறந்துவிட்டு தோள்கள் வலிக்க கட்டில் இழைக்கும் ஆசாரி;

காற்று அமுங்கிப்போன சக்கரம் கொண்ட தள்ளுவண்டியைத் தள்ளிப் போகும் சோன்பப்டிக்காரன்; சாமிகளை கண்ணாடி ஃபிரேமிற்குள் அடைத்து விற்பவன்; ரூ.8 கடன் பாக்கியை கஸ்டமர் மறக்காமல் தர வேண்டிக்கொள்ளும் கையேந்தி பவன் ஓனர்; ‘ஐஸ் போடணுமா? வேணாமா?’ என அக்கறையுடன் கேட்டுக்கொண்டே ஈ ஓட்டும் கரும்பு ஜூஸ் கடைக்காரர்;

‘சூடா என்ன இருக்கு?’ என்ற கேள்வியை லட்சத்தி நூறாவது தடவையாகக் கேட்க நேர்ந்தாலும், டேபிள் துடைத்துக்கொண்டே கடகடவென ஒப்பிக்கும் இளைஞன்; கோக்கையும் பெப்சியையும் அடக்க விலைக்கும் மேலே ரெண்டு ரூபாயை கூலிங் காசாகக்  கொடுத்து வாங்கிக் குடிப்பவர்களிடம் 2 ரூபாய்க்கு பேரம் பேசிக்கொண்டிருக்கும் இளநி விற்பவர்;

பழைய லாரி டயரில் ‘இங்கு பஞ்சர் ஒட்டப்படும்’ என எழுதி காத்திருக்கும் ஹை-வே பட்டறைக்காரன்; பீடி வலித்துக்கொண்டே குப்பையை அள்ளி நகராட்சி வண்டியில் போடும் துப்புரவாளர்; இந்தியாவில் விற்கப்படும் அத்தனை பவுடர்களையும் வியர்வை கலந்து சுவாசிக்கும் பேருந்து நடத்துனர்; தினமும் குறைந்தது பத்து பேரிடமாவது திட்டு வாங்கிக்கொண்டு நேரத்திற்குச் செல்ல ஹாரன் அடிக்கும் ஓட்டுனர்; ‘அடுத்து வரும் பாடலைப் பாடுபவர்கள் உங்கள் எஸ்.பி.பி மற்றும் சின்னக் குயில் சித்ரா’ எனும் ரேடியோவைக் கேட்டபடி மெஷின் மிதிக்கும் தையற்காரர்;

கால் காசானாலும் கவர்மென்ட் காசென சாக்கு மூட்டை யூனிஃபார்மில் வெயிலில் லோலோவென திரியும் போஸ்ட்மேன்; எப்பொழுதும் தலைக்கனமாய் திரியும் சித்தாள்; காதை ரூல் பென்சில் ஸ்டான்டாய் கொண்டிருக்கும் கொத்தனார்; ஆந்தையோடு குடித்தனம் நடத்தும் தமிழ் மற்றும் திபெத்திய கூர்க்கா; ஆசுவாசப்படுத்திக்கொள்ள டீயை உறிஞ்சிக் குடித்தபடி குடும்பச் சுமைகளைக் குறைக்க மூட்டை தூக்கும் மீசைக்காரர், குருவாயூரப்பனையும் மோகன்லாலையும் மறந்துவிட்டு நோயாளிகளுடன் வாழும் மலையாள நர்ஸ்:

தன்னைவிட முப்பது வருடம் இளையவனுக்கு ஹார்லிக்ஸ் வாங்கி வரும் காக்கிச் சட்டை பியூன்; ஆட்டுக்குட்டிக்கும் பஸ் டிக்கெட் எடுக்கச் சொல்லிடுவாங்களோ என்ற கவலையுடன் பஸ் ஏறும் விவசாயி; விசேஷத்திற்கு போட்டுக்கொண்டு போகும் சட்டையை தலையணைக்கு அடியில் இஸ்திரி போடும் கைத்தறி நெசவாளி; துணி துவைக்கும் சோப்பிலேயே முகம் கழுவி சாப்பிடத் தயாராகும் மெக்கானிக்; இதுவரை ஆயிரக்கணக்கான ஜாதகங்களை பிரதி எடுத்துக் கொடுத்துவிட்ட ஜெராக்ஸ் கடை முதிர்கன்னி; எக்ஸ்போர்ட் துணி பிசிறுகளை எட்டு மணி நேரம் நின்று
கொண்டே வெட்டிப்போடும் தினக்கூலிகள்;

இயற்கை தந்த மூன்று நாள் லீவில் மூன்றாம் நாளை விரும்பி கேன்சல் செய்துவிட்டு பவுடர் பூசும் விலை மாது; நாய் பொம்மை விற்க நாயை விட அதிகம் குரைக்கும் பொம்மை வியாபாரி; மாதம் ஒரு நாள் சம்பள கவர் வாங்க தினமும் ஆயிரம் கவர்களை டெலிவரி செய்யும் கொரியர் இளைஞன்; மற்றவர்கள் தங்கள் காலால் கற்பழிக்கும் செருப்பைக் கையால் தடவி வேலை செய்யும் வெத்தலை வாய்க்கார செருப்பு தைப்பவன்; கோயில் வாசலில் கஞ்சனையும் கடவுளாக்கும் குருட்டுப் பிச்சைக்காரன்;

மீன் பிடிக்கப் போய் கருவாடாய் திரும்பி வரும் மீனவன்; சோப்புகளைத் தூக்கிக்கொண்டு வீதி வீதியாய் அலையும் விற்பனைப் பிரதிநிதி; களைப்பு தெரியாமல் இருக்க கட்டிங் போட்டு விட்டு, கண்களால் கற்பழிப்பவனுக்கு ஆடிக் காட்டும் கரக்காட்டக்காரி; பத்து ரூபாய்க்கு பாயாய் குனியும் பூசாரி; ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து பானிபூரி விற்கும் உ.பி.காரன்; எல்லா அபார்ட்மென்ட்வாசிகளையும் தெரிந்து வைத்திருந்தும் இதுவரை யார் வீட்டுக்குள்ளும் நுழைய அனுமதி கிடைக்காத வாட்ச்மேன்; இந்த சமுதாயத்தை எப்படி நடத்த வேண்டுமென ‘பேப்பரைத் தூக்கியெறிந்து’ செய்முறை காட்டும் பேப்பர் போடும் பையன்;

பிணத்தையும் சிரிக்க வைத்து போட்டோ எடுக்கக் கஷ்டப்படும் போட்டோகிராபர்; கந்துவட்டிக்காரனுக்கு பாதிப் பணத்தை சம்பாதித்துக் கொடுக்கும் மார்க்கெட் காய்கறி கடைக்காரர்கள்; வறுமையிலும் வண்ணமயமாய் வாழும் கோலப் பொடி விற்பவர்; நைந்த கைலியுடன் பாய் விற்பவன்; இலந்தை, நாவப்பழம், வெள்ளரி என சீசனுக்கு ஒன்று விற்றுப்போகும் கூடைக்காரிகள்; பாத்திரம் தேய்ப்பதற்கு சம்பளம் வாங்கி வீட்டு ஓனர் உடம்பைத் தேய்த்துப் போவதை சகித்துக்கொள்ளும் வேலைக்காரப் பெண்கள்; இட்லி விற்கும் ரிட்டயர்டு ஆகாத ஆயாக்கள்;

வாரம் நான்கு நாள் லீவு விட்டுவிடும் குடிகார ஆட்டுக்கால் சூப் கடைக்காரர்; ஜில் ஜில் ஜிகர்தண்டா விற்கும் சிடுமூஞ்சிக்காரர்...இந்த தேசத்தில்தான் எத்தனை கோடி மனிதர்கள்? எத்தனை கோடி கனவுகள்? எத்தனை கோடி தொழில்கள்? ஆனால், ஒரே ஒரு முதலாளி... அவன் பேர் பசி!

வீட்டுக்குள் நான் நுழையும்போது, கண்ணுக்குத் தெரியும் இடத்தில் ஒளிந்துகொள்கிறாள் மகள். அதைத் தவிர எல்லா இடத்திலும் தேட வேண்டும் நான். அடுத்த அன்னை தெரசா எங்க வீட்ல இருந்துதான்; வீட்டுக்குள் வந்து வெளியேறத் தெரியாத பட்டாம்பூச்சிக்கு பரோட்டா வாங்கிட்டு வரச் சொல்கிறாள். சாப்பிடாத மகளிடம் ‘‘எத்தனை குழந்தைங்க சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறாங்க தெரியுமா?’’ என்றேன்.

அப்ப அவங்ககிட்ட கொடுங்கனு சொல்றா. பபிள் கம் கேட்ட மகளிடம், ‘‘பபிள் கம் சாப்பிட்டா வாய் ஒட்டிக்கும்’’னு சொன்னா, ‘‘அப்ப கொசு வாயில போட்டுடுங்க, யாரையும் கடிக்காது’’ங்கிறா. விளையாட அழைத்தும் போகாம, சோஃபால படுத்து டி.வி பார்க்கிற என்னை, ‘‘பாகுபலி... பாகுபலி... பாகுபலி...’’னு இழுக்குறா. உண்மையில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதை விட குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம்.

அன்புள்ள அண்ணன் நாஞ்சில் சர்பத்துக்கு, இதுநாள் வரை உங்களை வைத்து சமூக வலைத்தளங்களில் லைக்ஸ்களை அள்ளிக் கொண்டிருந்த ‘ஃபேஸ்புக்’ பிரகாஷ் எழுதுவது. நல்லா இருக்கீங்களாண்ணே? நீங்க என்னத்த நல்லா இருக்கப் போறீங்க? மைக் கிடைச்சா மாங்கு மாங்குனு மூணு மணி நேரம் பேசுற உங்களையே சைலன்ட் சிலந்தி வலையில சிக்க வச்சுட்டாங்களே. இருநூறு கிலோமீட்டர் வேகத்துல போற உங்க இன்னோவா இஞ்சின புடுங்கி வச்சுட்டாங்களே! எப்ப பார்த்தாலும் ‘இது எங்க ஆட்சி, இது எங்க ஆட்சி’னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்வீங்களே, இப்ப உங்களை கரடி பொம்மையாக்கி பொருட்காட்சில வச்சுட்டாங்களே!

ஏண்ணே, நீங்களும்தான் சும்மா இருந்தீங்களா? நீங்க யோசிச்சுப் பேசுறதை விட, வாசிச்சுப் பேசுறது அதிகமாகிடுச்சே. ‘எந்த வாயால் உங்களுக்கு வாழ்க்கை கிடைச்சுதுனு நினைச்சாங்களோ, அதே வாயால் வாழ்க்கை அடைச்சுக்கிச்சு. இதான் வாழ்க்கை’னு இணையத்துல தத்துவமெல்லாம் பேசறாங்கண்ணே. எதுக்கு எடுத்தாலும் ‘அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்’, ‘அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்’னு சொல்வீங்களேண்ணே, அப்படிப்பட்ட உங்களையே, ‘ஏன் இன்னமும் கிளம்பலையா?’ன்னு கேட்டா, ‘டவுன் பஸ் வரட்டும்னு காத்திருக்கேன்’னு சொல்ற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்களேண்ணே.

பேசறதுனு முடிவு பண்ணிட்டா என்ன வேணாலும் பேசலாம்னு போலாமாண்ணே? இப்ப நீங்க தலையில போட்டிருக்கிற துண்ட வாங்கித்தான் விரல விட்டு வியாபாரம் பேசினா மாதிரி, இலங்கை சீனாவுக்கு விலை போயாச்சுனெல்லாம் அடிச்சி விடுறீங்களேண்ணே. சென்னை வெள்ளத்துல செத்தவங்க எல்லாம் வெள்ளத்தைப் பார்க்கப் போயி செத்தாங்கனு சொன்னீங்களேண்ணே...

நல்லவேளை சுனாமில செத்தவங்க எல்லாம், அதுல குளிக்க போயி செத்தாங்கனு சொல்லாம விட்டீங்க. இதையெல்லாம் விட ‘டாஸ்மாக் கடைய மூடுனா குடிக்கிறதை நிறுத்துவாங்கங்கிறதுக்கு என்ன உத்தரவாதம்?’னு கேட்டீங்க பாருங்க ஒரு கேள்வி, அது கேள்வி இல்ல, அது ஒட்டுமொத்த கேள்விகளின் தோல்வி.  நீங்க பேசுனதெல்லாம் பார்க்கிறப்ப, எங்களுக்கு என்ன தோணுதுன்னா... உங்காளுங்க எங்க எங்கேயோ ஸ்டிக்கர் ஒட்டுனாங்க, அதுல ஒரு ஸ்டிக்கர உங்க வாயில ஒட்டிருக்கலாம்!                 

ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்