நினைவோ ஒரு பறவை 11



பெண் புத்தரின் சுய சரிதம்
மலையும் அதே மலைதான்
வழியும் அதே வழிதான்
மாறி இருப்பது மனது மட்டுமே!
- ஜென் தத்துவம்

அப்பாவிற்கு இரண்டு அக்கா, இரண்டு தங்கைகள். எனவே எனக்கு மொத்தம் நான்கு அத்தைகள். நான் பிறப்பதற்கு முன்பே மூன்று அத்தைகளுக்கும் திருமணமாகிவிட, கடைசி அத்தைதான் என்னைத் தூக்கி வளர்த்தது. அந்தக் காலத்து தொடர்கதைகளில் வரும் கல்யாணமாகாத இளம்பெண்கள் போலவே, ‘ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, குதிரையில் வரப்போகும் ராஜகுமாரனுக்காக’ அத்தை காத்திருந்த காலம் அது.

அத்தைகளால் வளர்க்கப்பட்ட குழந்தைகள், தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அந்த நாட்களில் நான் எங்கு சென்றாலும், சிறகு முளைத்த தேவதைகள் என் தலைக்கு மேல் பூக்களைத் தூவி வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்.அத்தை என்னை இடுப்பில் தூக்கிக்கொண்டு கோயிலுக்குச் செல்லும். பிள்ளையார் கோயிலின் சர்க்கரைப் பொங்கலும், சுண்டலும் பூவரசம் இலைகளில் வாங்கி உள்ளங்கைச் சூட்டோடு ஊதி ஊதி ஊட்டி விடும். அடிக்கடி மூக்கு உறிஞ்சும் என்னை ‘ஊளமூக்கு’ என்று கிண்டல் செய்து தன் தாவணியால் சுத்தம் செய்யும். தன் தோழிகளுடன் சினிமாவிற்குச் செல்கையில் என்னையும் அழைத்துச் சென்று இடைவேளையில் பொரி உருண்டையும், கைமுறுக்கும் வாங்கிக் கொடுக்கும். இப்போது யோசித்துப் பார்க்கையில், அம்மாவின் இடுப்பில் இருந்ததை விட, அத்தையுடன் நான் இருந்த சித்திரம்தான் கண் முன் விரிகிறது.

அம்மா அடித்தால், அப்பா கோபப்பட்டால், நான் அத்தையின் மடியில் அடைக்கலமாவேன். அத்தை தாலாட்டுப் பாடி தூங்க வைக்கும். தெருப்புழுதி ஆட்டங்களில் நான் அழுதபடி வீட்டிற்கு வந்தால், அத்தை மீண்டும் என்னை மைதானத்திற்கு அழைத்துச் சென்று ‘‘யார்றா இவன அடிச்சீங்க?’’ என்று புலன் விசாரணை செய்யும். அத்தையின் கோபத்திற்காகவே நான் தவறு செய்தாலும் பெரிய பையன்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.
அத்தையின் பெயர் சசிகலா. நீளமாக வைக்கப்படும் எல்லாப் பெயர்களும் சுருக்கிக் கூப்பிடுவதற்காகத்தானே? ஆகவே எங்களுக்கு அவர், ‘சசி அத்தை’.

எங்கள் குடும்பத்தின் குலசொத்தான எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் பழக்கம் ஆயாவிடமிருந்து எனக்கு வந்ததைப் போலவே அத்தைக்கும் இருந்தது. கூடவே, ஆயாவிடம் இல்லாத இன்னொரு குணம்... அது, என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாத அலட்சியம். அந்த அலட்சியத்தை கொஞ்சம் உற்றுப் பார்த்தால் அது ஒரு ஜென் மனநிலை என்று இன்று புரிகிறது.

பூகம்பம் வந்துவிட்டது என்று ஊரே வீட்டை விட்டு வெளியில் ஓடினால் அத்தை சொல்லும்... ‘‘கொஞ்சம் பொறுங்க, சாம்பார் கொதிக்குது. சாப்பிட்டுட்டு வர்றேன்!’’ அதுதான் அத்தையின் மனம்.எல்லாப் பெண்களையும் போலவே அத்தைக்கும் ஒரு சுபமுகூர்த்த நாளில் திருமணம் நடந்தது. நான் மாப்பிள்ளைத் தோழனாக ஜானவாச காரில் மாமாவிற்கு பக்கத்தில் அமர்ந்து, பெட்ரோமாக்ஸ் மனிதர்களின் தலைச்சுமையை இடம் வலமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தேன். என் அம்மா இறந்து போனதற்குப் பின்னான நாட்கள் அவை. அம்மாவைப் போலவே அத்தையும் என்னைத் தனியாக விட்டு விட்டு வெகுதூரம் போகப் போகிறது என்று நினைத்து கொஞ்சம் அழுததாகக்கூட ஞாபகம்.

மறுவீட்டிற்கு வந்த மாமா, அத்தையுடன் என்னையும் சினிமாவிற்குக் கூட்டிச் சென்றார். இடைவேளை கோன் ஐஸும், படம் முடிந்து கூரை வேய்ந்த கட்டிடத்தில் மாமா வாங்கித் தந்த பிரியாணியும் நாக்கின் சுவை மொட்டுகளில் இப்போதும் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கின்றன.
மாமா அந்தக் காலத்து பி.ஏ. தாலுகா ஆபீஸில் வேலை. பெல்பாட்டம் அணிந்து ‘பில்லா’ ரஜினி போல் இருப்பார். அவ்வப்போது மாமாவுக்கும், அத்தைக்கும் மனஸ்தாபம் வந்து, அத்தை பிறந்தகம் வந்து விடும். அந்தக் காலங்களில் அத்தை அழுது நான் பார்த்ததே இல்லை. எப்போதும் போல் என்னுடன் சிரித்தபடியே விளையாடிக் கொண்டிருக்கும்.

மாமா வந்து சமாதானப்படுத்தி அத்தை அவருடன் கிளம்பிப் போன பிறகு ஆயா என்னிடம் சொல்லும்... ‘‘உங்க அத்தை இருக்காளே... கல்லு மனசுக்காரி! மனசுல என்ன நெனைக்குறான்னே யாருக்கும் தெரியாது. சின்ன வயசுல இருந்தே இப்படித்தான். அப்படியே எங்க வீட்டுக்காரரு மாதிரி!’’
ஆயா அத்தையைப் பாராட்டுகிறதா... இல்லை, நான் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்ட தாத்தாவைத் திட்டுகிறதா என்கிற விவரம் புரியாத வயதில் நான் இருந்தேன்.

முதல் பிரசவத்திற்கு அத்தை தாய் வீடு வந்தது. காஞ்சிபுரத்தில் சி.எஸ்.ஐ. மருத்துவமனையில் அத்தையை சேர்த்தோம். இருநூறு வருடங்களுக்கு முன்பு வெள்ளைக்காரன் கட்டிய மருத்துவமனை. பரந்து விரிந்த கட்டிடங்களும், விசாலமான அறைகளும், மருந்து வாசமுமாக அந்த மருத்துவமனையின் நினைவுகள் என் மூளை அடுக்குகளிலிருந்து இப்போதும் மேலெழுகின்றன.

சி.எஸ்.ஐ. கட்டிடத்தின் நுழைவாயிலைக் கடந்து, நோயாளிகள் அறைக்குச் செல்லும் பாதையில் பென்னம் பெரிய பஞ்சு மரம் ஒன்று காலத்தைக் காட்சியாக்கி காற்றுடன் பேசிக் கொண்டிருக்கும். அதன் கீழே படர்ந்த கரிய நிழல்களில் கொட்டிக் கிடக்கும் பஞ்சுக் காய்களைத் தேடிப் பொறுக்கி நான் விளையாடுவேன். சின்னஞ்சிறிய பம்பரத்தைப் போலிருக்கும் அந்தப் பஞ்சுக்காய்கள், தரையில் சுழற்றி விட்டால் உலகத்துடன் நடனமாடி ஒரு நிமிடத்தில் நின்று விடும். எல்லோருமே உலகத்துடன் நடனமாடி ஏதோ ஒரு நிமிடத்தில் நின்று விடும் பஞ்சுக்காய்கள் தானோ என்று இன்று தோன்றுகிறது.

அத்தைக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிள்ளை பெற்ற அத்தைக்கு உறவினர்கள் கறிச்சோறு கொண்டு வருவார்கள். அத்தை, பெயருக்கு சாப்பிட்டு விட்டு எனக்கு ஊட்டி விடும். ‘‘மாமா பாருடா’’ என்று தான் பெற்ற குழந்தையிடம் அத்தை என்னைக் காட்டுகையில், நான் வயது முதிர்ந்த மாமனாகி கொஞ்சம் வெட்கப்படுவேன்.

மாமாவுக்கு மாற்றலாகி முத்தியால்பேட்டை, ஆரணி, அரக்கோணம், செய்யாறு என பல ஊர்களில் பணிபுரிந்து கடைசியாக வந்தவாசியின் நிரந்தர வாசியானார். அப்போது சசி அத்தையின் மூத்த மகன் செந்தில், பொறியியல் கல்லூரி மாணவனாகி இருந்தான்.சசி அத்தை என்னைத் தூக்கி வளர்த்ததைப் போலவே சிறுவயதில் செந்திலையும் நான் தூக்கி வளர்த்திருக்கிறேன். ‘அந்தப் பையனா இவன்?’ என்று வியக்கும்படி அவன் தோற்றம் மாறி இருந்தது. மீசை அடர்ந்து, முகப்பரு வளர்ந்து, ‘‘மாமா! நீங்க எழுதுன பாட்டு எல்லாமே இந்த ‘USB’ல இருக்கு!’’ என்று என்னிடம் நீட்டுவான். ‘சசி அத்தையின் கண்களுக்கு என்னைக் குழந்தையாகவும், என் கண்களுக்கு செந்திலைக் குழந்தையாகவும் மாற்றி மாற்றிக் காட்டும் களைடாஸ்கோப்பின் வளையல் துண்டுகள்தான் காலமோ!’ என்று நான் குழம்பிப் போவேன்.

சென்னையில் அம்மாவைப் பெற்ற ஆயா வீட்டில் தங்கி பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில் அப்பா என் கைப்பேசியில் அழைத்தார். ‘‘சசி அத்தை பையன் செந்திலை போரூர் ஆஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. கேன்சராம். உடனே கெளம்பி வா!’’

நான் பதறியடித்து விரைந்தேன். மருத்துவமனையில் செந்தில் ஒரு அறையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். சுற்றிலும் மருந்து வாசம். என்னைப் பார்த்ததும் அத்தை சொன்னது, ‘‘ஒடம்பு முழுக்க கேன்சர் கட்டி இருக்காம்டா. டேய் செந்தில்... இங்க பாருடா... முத்து மாமா வந்திருக்கான்!’’
செந்தில் சுற்று முற்றும் காற்றில் கை வீசினான். அத்தை சொன்னது, ‘‘நேத்து ராத்திரில இருந்து அவனுக்குக் கண்ணு தெரியல!’’

செந்திலின் கைகளைப் பிடித்து அத்தை மறுபடி சொன்னது, ‘‘டேய்... முத்து மாமாடா!’’ செந்தில் மீண்டும் காற்றில் கை வீசி, ‘‘அம்மா... எனக்கு வலிக்குதும்மா’’ என்றான். அவன் கைகளைக் காற்றில் வீசுவது பனிக்குடத்தின் இருட்டறையில் குழந்தைகள் தத்தளிப்பதைப் போல் இருந்ததால் நான் கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன்.

‘‘வாடா... கேன்டீனுக்குப் போய் டீ சாப்பிடலாம்!’’ என்று அப்பா அழைத்துக் கொண்டு போனார். ‘ரெண்டு டீ’ என்று ஆர்டர் கொடுத்து நாங்கள் அருந்திக் கொண்டிருக்கையில் தூரத்தில் மாமா வேகமாக ஓடுவது தெரிந்தது. ‘‘ரத்தம் வாங்குறதுக்காக ஓடுறான். இரு, நான் பார்த்துட்டு வர்றேன். தனியா கஷ்டப்படுவான்!’’ என்று அப்பாவும் மாமாவின் பின்னால் ஓடினார். தந்தையும், தாய்மாமனும் தனக்கான ரத்தத்திற்காக ஓடுவதை அறியாமல் செந்தில் காற்றில் கை வீசும் காட்சி என் கண்களை நனைத்தது.

அதற்கடுத்த நாள் செந்தில் இறந்து போனான். ‘‘வந்தவாசில வேணாம். எங்க அம்மா வீட்டுக்கே ெகாண்டு போயிடலாம்!’’ என்று அத்தை சொல்ல, காஞ்சிபுரத்திற்குக் கொண்டு சென்றோம்.ஊரே திரண்டு ஒப்பாரி வைத்தது. அத்தை மட்டும் அழாமல் திண்ணையில் வெறித்த பார்வையுடன் அமர்ந்து கொண்டது. செந்தில் படித்த கல்லூரியிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்து கதறி அழுதார்கள். அத்தை அனைவரையும் வெறித்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்தது.

செந்திலின் உடலை வைக்கப் போகும் பாடையில் போர்த்துவதற்காக சேலை கேட்டபோது, சசி அத்தை தன் விலையுயர்ந்த பட்டுச்சேலையை எடுத்துக் கொடுத்தது.‘‘இது ஒரு சாங்கியம்தான்! சேலை நமக்குத் திரும்ப வராது. அதனால ஏதாவது காட்டன் சேலை கொடும்மா’’ என்று சொந்தக்காரப் பெண் சொல்ல, அத்தை கேட்டது... ‘‘என் பையன் மட்டும் திரும்ப வரப் போறானா? இதையே கொடுங்க!’’

அழாமல் இருந்த அத்தையைப் பார்த்து நாங்கள் பயப்பட்டோம். உடலை எரித்து வீடு திரும்பிய உறவினர்கள், கூடத்தில் ஏற்றி வைத்த காமாட்சி விளக்கை வணங்கி விட்டு கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.அத்தை சைகையால் என்னை அழைத்தது, ‘‘என்ன அத்தை?’’ என்றேன்.‘‘எல்லோரும் கெளம்பிட்டாங்களா? ரா தங்குறவங்களுக்கு சாப்பாடு சொல்லு!’’‘‘சரி அத்தை!’’ என்றேன்.

அத்தை என் கண்களைப் பார்த்தபடி தன் வயிற்றைத் தொட்டு, ‘‘இங்க இருந்துதாண்டா எட்டி எட்டி உதைப்பான். எவ்ளோ ஆர்லிக்ஸ் குடிச்சிருப்பேன்! குறை இல்லாமத்தான் வளர்த்ேதன். ஆப்பிள் கேட்டா ஆப்பிள், ஆரஞ்சு கேட்டா ஆரஞ்சு, ெபாம்மை கேட்டா பொம்மை, எம் மேல என்ன தப்பு? இப்படி செத்துப் போவான்னு யாரு கண்டா?’’ என்றது.நான் மௌனமாக நின்றேன்.

எல்லோரும் கிளம்பிப் போன பின்னிரவில் எஞ்சிய உறவினர்கள் கையது கொண்டு, மெய்யது பொத்தி வராத உறக்கத்தை வரவழைத்துக் கொண்டிருக்கையில், நள்ளிரவு மூன்று மணிக்கு அத்தை அதுவரை அடக்கி வைத்த அத்தனை அழுகையையும் கொட்டித் தீர்த்தது. அழுது முடித்து களைத்துப் போகப் போகும் அத்தைக்காக காபி போட, உறவினர்களில் யாரோ ஒரு பெண் எழுந்து போனாள்.

எல்லோருமே உலகத்துடன் நடனமாடி ஏதோ ஒரு நிமிடத்தில் நின்றுவிடும் பஞ்சுக்காய்கள் தானோ என்று இன்று தோன்றுகிறது.

அவன் கைகளைக் காற்றில் வீசுவது பனிக்குடத்தின் இருட்டறையில் குழந்தைகள்  தத்தளிப்பதைப் போல் இருந்ததால் நான் கனத்த மனதுடன்
அங்கிருந்து நகர்ந்தேன்.

இங்க இருந்துதாண்டா எட்டி எட்டி உதைப்பான். எவ்ளோ ஆர்லிக்ஸ் குடிச்சிருப்பேன்! குறை இல்லாமத்தான் வளர்த்ேதன்...’’

(பறக்கலாம்...)

நா.முத்துக்குமார்

ஓவியங்கள்: மனோகர்