கைம்மண் அளவு



கீரை எளிய, பசிய உணவு.  நம்மில் பலருக்கும் அது தொடுகறி. வறுமையில் வாடிய ஒருவருக்கு கீரையே மொத்த உணவும். குப்பையில் வளரும் கீரையைக் கொய்து எடுத்து, உப்புக்கூட இல்லாமல் வேக வைத்துத் தானும் பெண்டு பிள்ளைகளும் பசியாறியதாகப் புலவர் பாடினார். நகத்தினால் கிள்ளி எடுப்பதால் சில கீரைகளைக் கிள்ளுக்கீரை என்றனர். ‘‘என்னை என்ன கிள்ளுக்கீரைன்னு நெனச்சியா?’’ என்றார்கள். ‘அத்தனை தாழ்வான மனிதனா’ என்பது கேள்வியின் பொருள். ‘முளையிலேயே கிள்ளி எறி’ என்றனர் பகைவர்களை.

ஆண்டாள் திருப்பாவையின் பதின்மூன்றாவது பாடல், ‘புள்ளின் வாய் கீண்டானை், பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை’ என்கிறது. ‘பறவை வடிவில் வந்த பகாசூரனின் அலகுகளைக் கிழித்துக் கொன்றவனும், பொல்லாத அரக்கனான ராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளிக் களைந்தவனும்’ என்று பொருள்.

கீரையே எளிது. கிள்ளுதல் மிக எளிது. ஆனால் கீரை என்று நினைத்துக் கற்பாறையை  நகத்தால் கிள்ள இயலாது. ‘கல் கிள்ளிக் கை இழந்தற்று’ என்கிறது நாலடியார். கீரையை ‘இலைக்கறி’ என்பார்கள். கீரைக்கு ‘அடகு’ என்ற மாற்றுச்சொல் உண்டு. ‘குறு முறி அடகு’ என்கிறது மதுரைக்காஞ்சி. சிறிய இலைகளை உடைய கீரை. ‘அங்குழைக் கீரை அடகு மிசையினும்’ என்று நீள்கிறது மற்றொரு செய்யுள்.

பாரி மகளிரான அங்கவையும் சங்கவையும் சமைத்துப் போட்ட கீரையை அமுது நிகர்த்தது என்கிறார் ஒளவையார். ‘வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய் நெய்தான் அளாவி நிறம் பசிந்து - பொய்யா அடகென்று சொல்லி அமுதினை இட்டார் கடகம் செறிந்த கையால்’ என்பது பாடல். ‘சூடாக, நறுமணம் கொண்டதாக, வேண்டிய மட்டும் தின்பதாக, நெய் விட்டு அளாவி, பசிய நிறமுடையதான அதனைப் பொய்யாகக் கீரை என்று சொல்லிப் பரிமாறினாள் கடகம் அணிந்திருந்த கையினால். ஆனால் அது அமுதமாக இருந்தது’ என்பது பொருள். கேழ்வரகுக் களியும், முருங்கைக் கீரையுமாக இருக்கலாம்; அல்லது கொங்கு மண்டலத்துக் களியும் ‘ராக்ரி’ எனப்படும் கீரைக்கறியும் ஆகலாம்.

கம்ப ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின் காட்சிப் படலம். அசோகவனத்துச் சீதை தன் நிலை எண்ணிப் புழுங்கும் காட்சியில் பாடல். ‘அருந்தும் மெல் அடகு யார்இட அருந்தும்?’ என்று அழுங்கும்; ‘விருந்து கண்டபோது என் உறுமோ?’ என்று விம்மும்; ‘மருந்தும் உண்டுகொல் யான் கொண்ட நோய்க்கு?’ என்று மயங்கும்; இருந்த மாநிலம் செல்லரித்து எழவும் ஆண்டு எழாதாள்.

தான் அமர்ந்துள்ள இடப்பரப்பு கரையான் அரித்துப் புற்றுத் தோன்றினாலும் பெயர்ந்து போகாத சீதை, பலவிதமாக எண்ணியெண்ணிச் சோர்ந்து போகிறாள். ‘கீரை சமைத்து விளம்பினால் விரும்பி உண்பானே ராமன். இனி எவர் பரிமாற உண்பான்? விருந்து வந்துவிட்டால் என்ன நடக்கும்? யானே வலிய வரவழைத்துக்கொண்ட இந்த நோய்க்கு மருந்தும் உண்ேடா?’ என்றெல்லாம் இரங்கித் துன்புறுவாள்.

எளிய உணவென்று  நாம்  எண்ணும் கீரைக்கு எத்தனை சிறப்பு பாருங்கள்! தமிழின் 96 வகையான சிற்றிலக்கியங்களில் ‘பிள்ளைத்தமிழ்’ சிறப்பான வகை. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், திருநெல்வேலி காந்திமதியம்மன் பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், ஆண்டாள் பிள்ளைத்தமிழ் என்பன குறிப்பிடத் தகுந்தவை. குழந்தை பிறந்தது முதல் பத்து பருவங்கள் பேசப்படும். குழந்தை, பிறந்த ஐந்தாம் மாதம் - தன் தலையை நிமிர்த்து இங்குமங்கும் அசைந்தாடுவதைப் பாடும் பருவத்தை ‘செங்கீரைப் பருவம்’ என்பார்கள்.
குமரகுருபரர், மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவம் பாடுகிறார்: ‘அருள் விழியொடும் வளர் கருணை பொழிந்திட ஆடுக செங்கீரை, அவனி தழைத்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை’ என்று.

மலையாள தேசத்தவருக்கு சிவப்புநிறத் தண்டன் கீரை வெகு பிடித்தம். செங்கீரையைச் ‘சீரை’ என்பார்கள் அவர்கள்.நான் பிறந்து, 27 வயது வரை வாழ்ந்த நாஞ்சில் நாட்டில் கீரைச் செல்வம் குறைவுபடாதது. வயல் கரைகளில், தோப்புகளில் கீரைப் பாத்தி இருக்கும். முதலில் பிடுங்கினால் முளைக்கீரை. பிறகு பிடுங்கினால் தண்டன் கீரை. தண்டன் கீரையின் இலைகளை ஆய்ந்து ‘துவரன்’ வைப்பார்கள். துவரன் என்பது உங்கள் மொழியில் ‘பொரியல்’. அல்லது கடைவார்கள். கீரைக் கடைசலைத்தான் ‘மசியல்’ என்பார்கள். காயம் இட்டுக் கீரை கடைய வேண்டும்.

தமிழ்ப்பாடல் ஒன்று உண்டு: ‘சற்றே துவையல் அரை தம்பி, ஓர் பச்சடி வை, வற்றல் ஏதேனும் வறுத்து வை - குற்றமில்லை
காயமிட்டு கீரை கடை, கம்மெனவே மிளகு காயரைத்து வைப்பாய் கறி’ என்று. கடைந்த கீரையில் மோர் மிளகாய் வறுத்துத் தாளிப்பது விசேஷம்.
நாஞ்சில் நாட்டில் செண்பகராமன்புதூர் கீரைத்தண்டு சிறப்பு. தோவாளை பூந்தோட்டங்களில் ஊடுபயிராக வளர்க்கப்பட்ட அரைக்கீரைக்கு சுவை அதிகம். தண்டன் கீரையின் தண்டு போட்டு ‘புளிக்கறி’ வைப்பார்கள். விரதம் பொங்கும்போது, பச்சரிசிச் சோற்றில் விட்டுப் பிசைய கீரையும் கீரைத்தண்டும் போட்டு வைக்கும் புளிக்கறி பிரசித்தம்.

அரைக்கீரையைக் கடைந்தால் அடுத்த தெருவுக்கும் மணக்கும். அங்கு முருங்கை இல்லாத வீடில்லை, தோட்டம் இல்லை, வயல் மேடு இல்லை. மழை பெய்து தழைந்து நிற்கும் முருங்கைக்கீரை பறித்து வந்து ஆய்ந்து துவரன் வைப்பார்கள். முருங்கைக்கீரையைக் கழுவுவது இல்லை. அன்று காற்றும் மாசற்று இருந்தது. முருங்கைக்கீரைக்கு, சித்துக் கடுப்பு உண்டு. கடுப்பை மாற்ற, துவரனில் கருப்பட்டித்துண்டு சேர்ப்பார்கள். தேங்காய்ப் பூவுக்கு  இளம் தேங்காய். முருங்கைக்கீரையில்் மோர்க்குழம்பு நன்றாக இருக்கும். பச்சைத் தேங்காய் அரைத்து, புளி ஊற்றாமல் ‘சம்சோறு’ என்றொரு குழம்பும் உண்டு.

வீட்டுப் படிப்புரையில் எவரும் சுளவில் போட்டு முருங்கைக்கீரை ஆய உட்கார்ந்தால், அண்டை அயலார் அடுத்திருந்து நாலு கை ஆய்வார்கள்.
இந்தியிலிருந்து தமிழுக்கு சிறப்பான மொழிபெயர்ப்புகள் செய்தவர் சரஸ்வதி ராமநாதன்.  தாராபுரத்துக்காரர். கோடைக் காலத்தில் கோவையில் சில மாதங்கள் மூத்த மகள் வீட்டில் தங்கியிருப்பார். அடிக்கடி பார்க்கப் போவேன். மோகன் ராகேஷ் எழுதிய ‘ஆதே அதுரே’ நாடகத்தை ‘அரையும் குறையும்’ என தமிழில் பெயர்த்தவர். அந்த நாடகத்தில் நான்கு அங்கங்கள். நான்கு அங்கங்களிலும் வேறுபட்ட பாத்திரங்களில் அம்ரீஷ் பூரி நடிப்பதுண்டு. வேறுபட்ட நான்கு பெண் பாத்திரங்களிலும் சுல்பா தேஷ்பாண்டே நடிப்பார். பண்டு ஒரு காலத்தில் பம்பாய் சாபில்தாஸ் அரங்கில் நடைபெறும்.

சரஸ்வதி ராமநாதனிடம் சொன்னேன், ‘‘எங்கூர்லே அடை சுடும்போது முருங்கைக்கீரை உருவி மாவில் சேர்ப்போம்’’ என்று. அடுத்த முறை அவரைப் பார்க்கப் போனபோது, முருங்கைக்கீரை அடை காத்திருந்தது.பெரும்பாலும் வெற்றிலைக் கொடிக்கால்களில் நடப்படும் மரம் அகத்தி.
மஞ்சள் வயல்களில் செம்மஞ்செடி நடுவதைப் போன்று. அகத்தியில் சித்தகத்தி, பேரகத்தி என்று இருவகை. ‘சித்தகத்திப் பூக்களே...’ என்று தொடங்கும் பாடல் கேட்டிருப்பீர்கள்! அகத்திக்கீரையும் துவரன் வைப்போம். கசப்பைச் சகித்துக்கொள்ள வேண்டும். கசப்பு என்பதும் அற்புதமானதோர் சுவைதானே!

தண்ணீர் பாயும் கால்வாய், ஓடை, சிற்றாறு என்பனவற்றின் கரையோரம் செழித்து வளரும் கொடுப்பைக் கீரை. யாரும் விதை போட்டு வளர்ப்பதில்லை. நான் சிறுவனாக இருந்த காலத்தில், முழங்கால் தண்ணீரில் நின்று பறித்து மடியில் போட்டுக்கொண்டு வருவார்கள். பண்ட மாற்று விற்பனை. பாத்திரம்  நிறையப் பழைய சோறும், கொதிக்கச் சுட வைத்த பழங்கறியும். கொடுப்பைக் கீரையை அதிகமாகச் சீர் பார்க்க எதுவும் இருக்காது. பெரும்பாலும் குழம்பு தீயல் என்றால், துவரன் கொடுப்பைக்கீரை.

தை மாதம் வயலறுப்பு முடிந்ததும், மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது, நெல்லறுத்த  தாளுடன் சேர்ந்து, பெரு வெட்டாக ஓருழவு உழுது இடைப்பயிராக உளுந்து, சிறுபயிறு விதைப்பார்கள். சிறுபயிறு என்று நாங்கள் சொல்வது பாசிப்பயிறு. பெரும்பயிறு என்றால் தட்டப்பயிறு. காணம் என்றால் கொள்ளு. இரண்டு மாதத்தில் நெற்றாகிவிடும். உளுந்து நெற்றுப் பறிக்க நான் போயிருக்கிறேன். பறித்த நெற்றில், ஆறில் ஒரு பங்கு கூலி. சிறுபயிற்றஞ்செடியின் கொழுந்து இலைகளைப் பறித்து வந்து இலையைக் கழுவி, கசக்கி, அரிந்து வைக்கப்படும்  துவரன்.

பூசணி, மஞ்சள் பூசணி, பரங்கி, அரசாணி, மலையாளிகளால் மத்தன் என்றும் அழைக்கப்படுவது ஒரு படவரை. ‘படவரை’ எனில் படர்ந்து வளரும் கொடி என்று பொருள். அதன் இளந்தளிர் இலைகளைப் பறித்து வந்து, இலைகளிலும் தண்டிலும் நெருங்கி இருக்கும் பூனை மயிர் போன்ற முட்களைக் கையால் கசக்கி, அரிந்து, துவரன் செய்வார்கள்.

பிரண்டைக் கொடியின் இளம் தளிர், பொடுதலை, வல்லாரை, கையாந்தகரைக் கீரைகளைச் சேர்த்துப் போட்டு, நல்லெண்ணெயில் வதக்கி, கீற்றுத் தேங்காயும் புளியும் தீயில் சுட்டுக் காரமாகத் துவையல் அரைப்பார்கள். நான் துவையல் என்பது சட்னி, துகையல், சம்மந்தி, ஈழத்தில் சம்பல் என்றும் வழங்கப் பெறும். நான் சொன்ன துவையல், காய்ச்சல் வந்துபோன பின் நாக்கு செத்துப்போனவர்களுக்கு கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள!
மேற்சொன்னவை தவிர ஆலங்கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரைகள் உண்டு. ஐம்பதாண்டுகள் முந்திதான் நாங்கள் கொத்தமல்லிக் கீரைக்கும் புதினாக் கீரைக்கும் அறிமுகம் ஆனோம்.

எனது இருபதாண்டு மும்பை வாழ்க்கையின்போது அறிமுகமான கீரைகள் பாலக், வெந்தயக்கீரை, முள்ளங்கிக்கீரை. பாலக் என்பது வல்லாரை போல, நேராகத் தரையிலிருந்து ஒற்றைக் காம்புடன் முளைத்தெழுந்து வருவது. இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு உதகமண்டலத்தில் பால்சன் பள்ளத்தாக்கு புல் பரப்பில் அமர்ந்தவண்ணம் முகாம்  உறுப்பினர்களுக்கு உரையாடிக்கொண்டிருந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், உட்கார்ந்த இடத்திலிருந்து  நகராமல், சுற்றிச் சுற்றித் தேடி கை நிறைய வல்லாரை  பிடுங்கினார். இப்போதும் கோவை மணிக்கூண்டு பேருந்து நிறுத்தத்தில், வேலந்தாவளத்தில் இருந்து ஆத்தா ஒருத்தி வல்லாரைக்கீரை பறித்து வந்து விற்கிறாள். சாக்கடைத் தண்ணீரில் வளராத சுத்தமான புத்தம் புது பசிய கீரை.

பாலக் பன்னீர் என்றும், ஆலு பாலக் என்றும் பரிமாறப்படும் பஞ்சாபித் தொடுகறிகளில் பயன்படுவது பாலக் கீரைதான். வெந்தயத்தை ‘மேத்தி’ என்பர் வடமொழியில். வெந்தயக்கீரையும், பாசிப்பருப்பும் சேர்த்து கூட்டு செய்வார்கள். உருளைக்கிழங்கு தோல் சீவி, பொடிப் பொடியாய் நறுக்கிப் போட்டு வதக்குவார்கள் வெந்தயக்கீரையுடன்.

அதன் வாசமே தனியானது. இரண்டங்குல நீளமுள்ள முளைக்கீரையாகவும் பிடுங்கிக்கொண்டு வருவார்கள். அப்படியே அலசிவிட்டு  நறுக்க வேண்டியதுதான். இவை எல்லாம் சப்பாத்திக்குத் தொடுகறிகள். பஞ்சாபிகள், கடுகுக்கீரையில் ‘சர்சூக்கா சாக்’ என்றொரு கூட்டு செய்வார்கள். மக்காச்சோள ரொட்டிக்கு அருமையான சேர்மானம். மேத்தி பரோட்டா என்ற வெந்தயக்கீரை பரோட்டா எங்காவது மெனு அட்டையில் பார்த்தால் தயவுசெய்து விட்டுவிடாதீர்கள்!

கொங்கு நாடு, கீரைகளின் கொண்டாட்ட பூமி. மற்றெங்கும் நான் காணாத கொங்குக்கீரைகள் வள்ளக்கீரை, காட்டுக்கீரை, கோவக்கீரை, பண்ணெக்கீரை, சுக்கட்டிக் கீரை, வெங்காயத்தழைக்கீரை, பூண்டு தழைக்கீரை. மழை பெய்து ஓய்ந்து இரு கிழமைகள் கடந்த பின்பு, சிங்கநல்லூர் உழவர் சந்தைக்குப் போனேன். பத்தாண்டுகளுக்கும் மேலிருக்கும்.

அப்போது நான் நீலிக்கோனான் பாளையத்தில் குடியிருந்தேன். எனக்கு வழக்கமாக வாழைப்பூ, வாழைத்தண்டு, பப்பாளிப்பழம், சுண்டைக்காய், சுக்கட்டிக்கீரை எனப்படும் மணத்தக்காளிக்கீரை விற்கும் ஆத்தா முன்னால், செழிப்பாக வளர்ந்திருந்த கீரைக்கட்டுகள் கிடந்தன. ‘‘இது என்னங்க ஆத்தா?’’ என்றேன். ‘‘காட்டுக்கீரைங்க... சின்ன வெங்காயம் அரிஞ்சு போட்டு, தக்காளி, பச்சை மிளகாய் எல்லாம் சேத்துக் கடையச் சொல்லுங்க... தேங்கா எண்ணெய் ஊத்தணுங்க...

வாங்கீட்டுப் போங்க... நல்லா இருக்குமுங்க...’’ என்றார்.கீரைக்கட்டைக் கையில் எடுத்து திருப்பிப் பார்த்தேன். கட்டினுள் சில வேற்றுத் தாவரங்களும் தெரிந்தன. ‘‘இது என்னங்க ஆத்தா... கண்ட செடியெல்லாம் சேர்த்துக் கட்டீருக்கு!’’ என்றேன். ‘‘சாமி! அது களையில்லீங்க... தொய்யக்கீரைங்க... எடுத்து வெளியே போட்றாதீங்கோ... காட்டுக்கீரையோட சேத்து வச்சுக் கடஞ்சா வாசமா இருக்கும்’’ என்றார். தொய்யக்கீரை வித்தியாசமான மணத்துடன் இருந்தது, பச்சையாக மோந்து பார்க்க. அதை நாற்றம் என்றும் சொல்லலாம். ஆனால், அன்று முதல் காட்டுக்கீரை கடைசலுக்கு நான் அடிமை. நாமென்ன ஆளுங்கட்சி அமைச்சரா, அபகரித்து வைத்திருக்கும் ஆயிரம் ஏக்கர் பூமியில் இரண்டு ஏக்கரை உழவர் சந்தை ஆத்தாள் பேரில் எழுதி வைக்க?

தயிர் கடைவதற்கு தயிர் மத்து இருப்பதுபோல், கீரை கடைவதற்கு கீரை மத்து வேண்டும். ‘மத்துறு தயிர்’ என்பான் கம்பன். ‘மத்துறு தயிர்’ என்ற தலைப்பில் ஜெயமோகனின் அற்புதமான சிறுகதை ஒன்றுண்டு, ‘அறம்’ தொகுப்பில்.அண்மையில் ஈரோடு சென்று திரும்பியபோது, முன்னாள் மத்திய அமைச்சர் - இந்நாள் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் திருமதி. சுப்புலட்சுமி அவர்களின் கணவர் ஜெகதீசன் அண்ணா, அவர் ேதாட்டத்தில் இருந்து பண்ணைக்கீரை பறித்துக் கொடுத்தார். அதுவும் அடகு எனப்பட்ட அமுது.

இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு, திருப்பூர் எழுத்தாளர் ‘பசலை’ கோவிந்தராஜனின் அம்மா, ராத்திரிச் சோற்றுக்கு செலவு ரசம் வைத்துக் கொடுத்தார். பயன்படுத்தப்பட்ட தழைகள் - மொடக்கத்தான், கொழுஞ்சி, அவரை இலை, மொசு மொசுப்பான், தூதுவளை என்று நினைவு. என்னுடன் உணவு உண்டவர்கள், அன்று சிறுவனாக இருந்த கவிஞர் மகுடேசுவரன், குடும்பத்துடன் பெருமாள் முருகன், கவிஞர் சிபிச்செல்வன், நாவலாசிரியர் எம்.கோபாலகிருஷ்ணன். யாவரும் இன்று தீவிர இலக்கியவாதிகள்.

என்ன கீரையில் என்ன சத்து, மருந்து என்பதற்கு, ‘பதார்த்த குண சிந்தாமணி’ பாருங்கள். சுதான் சுகுமார் ஜெயின் எழுதித் தமிழில் மொழிபெயர்ப்பாகி, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட ‘மூலிகைகள்’ நூலும் பார்க்கலாம்.

‘சற்றே துவையல் அரை தம்பி, ஓர் பச்சடி வை, வற்றல் ஏதேனும் வறுத்து வை - குற்றமில்லைகாயமிட்டு கீரை கடை, கம்மெனவே மிளகு காயரைத்து வைப்பாய் கறி’

வெந்தயக் கீரையும், பாசிப்பருப்பும்  சேர்த்து கூட்டு செய்வார்கள். உருளைக்கிழங்கு தோல் சீவி, பொடிப் பொடியாய்  நறுக்கிப் போட்டு வதக்குவார்கள் வெந்தயக்கீரையுடன். அதன் வாசமே தனியானது.

- கற்போம்...

நாஞ்சில் நாடன்

ஓவியம்: மருது