சீஸன் சாரல்



பாபனாசம் அசோக்ரமணி

மியூசிக் அகாடமியில் நித்ய மகாதேவன் கச்சேரி. எம்.ஏ.கிருஷ்ணஸ்வாமி வயலின், சேர்த்தலை அனந்தகிருஷ்ணன் மிருதங்கம், ஏ.எஸ்.கிருஷ்ணன் மோர்சிங். ‘சலமேல’ எனும் நாட்டைக்குறிஞ்சி வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பம். ‘ஜானகி ரமண’ கீர்த்தனை, கச்சேரியை களை கட்ட வைத்தது.

இந்த ஸௌக்ய மனிநே’ காபி ராக கீர்த்தனையை பாடாத கலைஞர்கள் கிடையாது. அந்தப் பாட்டை நல்ல பாவத்துடன் நித்ய பாடியது சிறப்பு. காபி ராகத்துக்கு ஒரு இரண்டு களை அந்தஸ்து கொடுத்த தியாகராஜரை என்ன சொல்வது! மகானுபாவர். பூர்வி கல்யாணி ராகத்தில் ‘எந்நேரமும் உன் நாமம்’ கீர்த்தனை கேட்க இனித்தது. சக்கரவாகம் ராகத்தில் RTP. எம்.ஏ.கிருஷ்ணஸ்வாமி வயலினில் அசத்தினார். அனந்தகிருஷ்ணன் மிருதங்கம் அருமை. நல்ல தனி ஆவர்த்தனம்.

பார்த்தசாரதி ஸ்வாமி சபையில் ஜனவரி 2, 3, 4 ஆகிய நாட்களில் பாபனாசம் சிவனின் 125வது ஜெயந்தியையும், எம்.எஸ். அம்மாவின் 100வது பிறந்த நாளையும் கொண்டாடும் விதமாக நடத்திய கச்சேரிகளில் ஒன்று நாகை முரளிதரன் மற்றும் நாகை ராம் இரு வயலின் இசை. நாகை முரளிதரன் ஒரு மிகச்சிறந்த வயலின் கலைஞர். மகாராஜபுரம் சந்தானம் முதல் இவர் வாசிக்காத கலைஞர்களே இல்லை. கையில் என்ன ஒரு சுநாதம்! ப்ராசீன சங்கீதம் வயலினில்... குழைவு, லயம், நயம் எல்லாம் கலந்த அருமையான கச்சேரி.

திருச்சி சங்கரன் மிருதங்கம் கச்சேரியை எங்கோ கொண்டு சென்றது. ஆபோகி வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பித்து,  ‘ரகுநாயகா’ எனும் ஹம்ஸத்வனி கீர்த்தனையோடு களை கட்டியது. நாகை ராம் வாசித்த ராமப்ரியா ராகம் இனித்தது. ‘கோரின வரமு’ கீர்த்தனை பாடாந்தரம் அருமை.  பாட்டு பாடுவது போலவே சங்கதிகள்.

யதுகுலகாம்போதி ராகத்தை ப்ராசீன பிடிகளோடு வாசித்த விதம் நேர்த்தி. ‘‘நின்னுஸேவிஞ்சின’ கீர்த்தனை, ‘பார்த்தசாரதி’ மேல் இயற்றப்பட்ட சுப்பராய கீர்த்தனை என இவர்கள் வாசிக்க... திருச்சி சங்கரன் மிருதங்கத்தோடு இழைந்து வர, ரசிகர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர். ‘பாலகோபால’ பைரவி, கச்சேரிக்கு மகுடம். மறக்க முடியாத கச்சேரி. திருச்சி சங்கரனும் திருப்பணித்துறா ராதாகிருஷ்ணனும் வாசித்த தனி ஆவர்த்தனம் பிரமாதம்.

ஹம்ஸத்வனி சபையின் ஆதரவில் இளம் பாடகி மானஸா சுரேஷ் கச்சேரி. நல்ல குரல், சுத்தமான பாடாந்தரம். நவராக மாலிகா வர்ணம், ‘நாவினால் உன்னை’ அருட்பா கெளளை ராகத்தில் கேட்க இனித்தது. மைசூர் சங்கீதா வயலின். ராஜ்குமார் மிருதங்கம். சுருட்டி ராகத்தைப் பாடிய மானஸாவை பாராட்ட வேண்டும். ‘அங்காரகம்’ கீர்த்தனை, மெயினாக பாடிய கல்யாணி ராகம் மற்றும் ‘பங்கஜலோசன’ எல்லாம் மானஸாவின் திறமையைக் காட்டின. நல்ல எதிர்காலம் உள்ள இளம் கலைஞர் மானஸா சுரேஷ்.

பத்திரிகையாளர் வீயெஸ்வி எழுதிய தியாகராஜரின் வாழ்க்கை சரிதத்தை, யுனைடெட் விஷுவல்ஸ் டி.வி.வரதராஜன் மேடை நாடகமாக்கி, நம் முன்னே தத்ரூபமாக தியாகராஜரை அளித்தார். இந்த ‘தியாகராஜர்’ நாடகத்தின் தனிச் சிறப்பே, இதன் இசையமைப்பு பாம்பே ஜெய என்பதுதான். இசை காதிலேயே ஒலிக்கிறது இன்னும்.

அந்த மஹானுபாவரின் கீர்த்தனைகளை சேர்த்தலை ரங்கநாத சர்மா, ஓ.எஸ்.அருண், குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா என பலரும் பாடக் கேட்டு பரமானந்தம் அடைந்தார்கள் ரசிகர்கள். பாட்டை மட்டும் கேட்டு ரசித்த ரசிகர்களுக்கு தியாகராஜரின் வரலாற்றைக் கண்டு ரசிக்க ஒரு அரிய வாய்ப்பு. கோபால கிருஷ்ண பாரதி சந்திப்பு அருமை. ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் அனைவரும் மாறு வேடத்தில் தியாகராஜர் வீட்டிலேயே விருந்தாளிகளாகத் தங்கி, தியாகராஜரின் பூஜை பாடல்களை ரசிப்பது, வீயெஸ்வியின் அலாதி கற்பனை. விக்ரகங்களை காவிரியில் போட வைத்து,

தியாகராஜரை ஊர் ஊராக அலைய வைத்து, அதன்மூலம் அருமையான கீர்த்தனைகளைப் பாட வைத்த பெருமை எல்லாம் நாடகமாகப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. நிச்சயமாக இந்த வெற்றிக் கொடியை நாட்டிய வரதராஜன், வீயெஸ்வி, ஜெய குழுவினருக்கு சங்கீத உலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. பாபனாசம் சிவன் போன்ற பல மகான்களின் நாடகங்களும் இதுபோல வரவேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோள்.

படங்கள்: புதூர் சரவணன்,
ஆர்.சி.எஸ்.