எங்க குலசாமி திருவள்ளுவர்!



ஒன்றே முக்கால் அடியில் உலகை அளந்தவர் திருவள்ளுவர். அவருக்கு கன்னியாகுமரியில் பிரமாண்ட சிலை இருப்பது நமக்குத் தெரியும். அதே குமரியில் வள்ளுவரை குலதெய்வமாக, கோயில் கட்டி வழிபடும் குடும்பம் இருப்பது தெரியுமா?

குமரி மாவட்டத்தில் சுசீந்திரத்திற்கும் மருங்கூருக்கும் இடையே இருக்கிறது நல்லூர். ‘‘இங்கே திருவள்ளுவருக்குக் கோயில்...’’ என்று இழுத்தாலே எல்லோரும் வழிகாட்டுகிறார்கள், ஓய்வுபெற்ற சார்பதிவாளர் மாணிக்கவாசகத்தின் வீட்டுக்கு. அந்த வீட்டில் திரும்பிய திசையில் எல்லாம் புத்தகங்கள், சி.டிகள் ஆக்கிரமித்திருக்கின்றன.

பெரும்பாலானவை திருக்குறள் தொடர்பானவையே! இவர்களின் நிலத்தில்தான் 49 வருடங்களாக கோயில் கொண்டிருக்கிறார் அய்யன் வள்ளுவர்.
‘‘எங்க தாத்தா மகாராஜன் பிள்ளை இந்தக் கோயிலை 1957ல கட்டினார். அவருக்கு திருக்குறள்னா உயிர். வள்ளுவரை குலசாமியாவே பார்த்தார். வாழ்நாளுக்குள்ள இப்படி ஒரு கோயிலைக் கட்டிடணும்னு நினைச்சவர், அதை சாதிச்சும் காட்டினார். ஆனா, அடுத்த ரெண்டே வருஷத்துல காலம் அவரைக் கொண்டு போயிருச்சு.

தன் காலத்துக்குப் பிறகும் இந்தக் கோயில் தடையில்லாம இயங்கணும்னு நினைச்சவர் தன் குடும்பத்தில் தனக்கடுத்து இருக்கும் மூத்த ஆண் வாரிசு இதை நிர்வகிக்கணும்னு உயில் எழுதி வச்சிருக்கார். அதன்படி, தாத்தாவோட மறைவுக்குப் பிறகு எங்க அப்பா எம்.அருணாச்சலம் பிள்ளை, அவருக்கு அடுத்து எங்க சித்தப்பா முத்துக்குமாரசாமிப் பிள்ளைனு நிர்வாகம் மாறி, இப்ப தாமரைக்குளத்தைச் சேர்ந்த எங்க இளைய சித்தப்பா சிவராமலிங்கம் பிள்ளை கையில இருக்கு!’’ - கோயிலைச் சுற்றிக் காட்டியபடியே பேசுகிறார் மாணிக்கவாசகம்.

சின்ன கோயில்தான். கோயிலின் கருவறையில் ஒரு கல் பேழை இருக்கிறது. அதற்குள் இருக்கும் ஓலைச்சுவடி ஒன்றுதான் இந்தக் கோயிலின் மையப் பொருளாக மதிக்கப்படுகிறது. மகாராஜன் பிள்ளை தன் கைப்பட 1330 திருக்குறளையும் அந்த ஓலைச்சுவடியில் எழுதி வைத்தாராம். வெகுநாட்களாக இது மட்டுமே வழிபாட்டுப் பொருளாக இருந்திருக்கிறது. 2006ல்தான் மாணிக்கவாசகம் தன் சொந்த ஆர்வத்தில் ஒரு சிலை உருவாக்கி பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறார். அப்போதும் கல்பேழை அங்கேயேதான் இருக்கிறது.

‘‘தன் சந்ததிகள் திருவள்ளுவரை வணங்குவாங்களானு தாத்தாவுக்கு சந்தேகம். அதனால கோயில் பேர்ல 13 சென்ட் நிலத்தை எழுதி பதிவும் பண்ணி வச்சார். ஆனா, எங்க குடும்பத்துல எல்லாரையுமே திருக்குறள் கவர்ந்துடுது.

வள்ளுவர்னா எங்க எல்லாருக்குமே உயிர். வருஷா வருஷம் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தின் மறுநாள் அனுஷம் நட்சத்திரம் அன்னைக்குதான் திருவள்ளுவர் மறைந்த தினம்னு நம்பப்படுது. அன்னைக்குதான் நாங்க இந்தக் கல்பேழையைத் திறப்போம். தாத்தாவின் ஏட்டை எடுத்து, காலை 9.30 மணியில் இருந்து பகல் 1.30 மணி வரைக்கும் முற்றோதுதல் நடத்துவோம்.

அன்னைக்கு மகாராஜ பிள்ளையின் வாரிசுகள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து, காய், கனி படையல் போட்டு திருவள்ளுவரை வணங்குவோம். அந்த 13 சென்ட் நிலத்தில் இருந்து வர்ற வருமானத்துல அன்னைக்கு பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கிடுறோம்.

இது போக, எங்க தலைமுறை சார்பா கோயில் பேர்ல ஒரு தொகையை டெபாசிட் பண்ணி வச்சிருக்கோம். அதில் வர்ற தொகையில நிகழ்ச்சிய நல்லபடியா நடத்திடுறோம்!’’ என்கிற மாணிக்கவாசகம், கோயிலின் தற்போதைய நிர்வாகியான தன் சித்தப்பா சிவராமலிங்கம் பிள்ளையை அறிமுகப்படுத்தி வைக்கிறார். கிட்டத்தட்ட தலபுராணத்துக்கு நிகரான கோயில் சரித்திரம் இருக்கிறது இவரிடம்.

‘‘அப்பா படிச்சது 5ம் வகுப்பு வரைதான். ஆனா, தேவாரம், திருவாசகம், திருவருட்பானு பாடல்களை எல்லாம் படிச்சு ஓலையில எழுதுவார். திருக்குறளை முழுசா பொருளோட சொல்வார். சின்னப் பையன்களா இருந்த எங்களுக்கு பத்து குறள் சொன்னா ஒரு சக்கரம் (அப்போதைய காசு) பரிசா கொடுத்து ஊக்கப்படுத்துவார்.

ஆனா, திருக்குறளை ஓலையில் எழுதுற சக்தி மட்டும் தனக்கு இல்லைனு நினைச்சார். மருங்கூர் மலைமேல இருக்குற சுப்பிரமணிய சாமி கோயிலுக்குப் போய், திருக்குறளை ஓலையில எழுதும் சக்தியைக் கொடுனு கேட்டிருக்கார்.

கோயிலை விட்டு வெளியே வரும்போது, எதிர்ல ஒருத்தர் தலையில் பனை ஓலையோட வந்தாராம். அவர் பேர் ‘சுப்பிரமணி’னு சொன்னாராம். முருகப் பெருமானே பனை ஓலையை எடுத்துக் கொடுத்ததா நினைச்ச எங்கப்பா, அந்த ஓலையை வாங்கி, அதில்தான் திருக்குறளை எழுதி வச்சார். தன் காலம் முழுக்க அதை உயிரை விட மேலானதா பாதுகாத்தார்.

எத்தனைக் காலம் ஆனாலும் அந்த ஓலையையும் திருக்குறளோட பெருமையையும் எங்க தலைமுறை போற்றிப் பாதுகாக்கும்!’’ - தடுமாற்றமே இன்றி கணீரென முழங்குகிறது இந்த 89 வயதுக்காரரின் குரல்! இன்னும் எத்தனைக் காலம் ஆனாலும் திருக்குறள் ஓலையையும் திருக்குறளோட பெருமையையும் எங்க தலைமுறை போற்றிப் பாதுகாக்கும்!

- சி.உமாசங்கர்
படங்கள்: மணிகண்டன்