இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்?



ஓர் இலக்கிய ஆதங்கம்!

பீப் பாடல் சர்ச்சை பீக்கில் இருந்தபோது, ஆளாளுக்கு அதைத் திட்டித் தீர்த்தார்கள். ஆனால், அவற்றுக்கு மத்தியில் ஒரே ஒரு இலக்கியக் குரல் மட்டும் வேறுபட்டு ஒலித்தது. ‘‘நாட்டுப்புறக் கலைகளுக்கும் சராசரி பொதுமக்களின் சொல்லாடல்களுக்கும் இலக்கிய அந்தஸ்து தரவேண்டிய நேரத்தில், இந்த ஒரு வார்த்தைக்கு நாம் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறோமே...’’ என்ற நிஜ வேதனை தெரிந்தது அந்தக் குரலில். எழுத்தாளரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான எம்.டி.முத்துக்குமாரசாமியின் வாய்ஸ் அது.

இன்று புளூ கிராஸ் என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்கு பிரச்னை வந்தது போல, நாளை கலாசாரம், நாகரிகம் என்ற பெயரில் நாட்டுப்புறக் கலைகளுக்கும் அச்சுறுத்தல் வந்துவிடுமோ எனப் பதற வைக்கிறது அவர் பேச்சு...‘‘தமிழில் எழுத்து மொழி அல்லது இலக்கிய மொழி வேறாகவும் பேச்சு மொழி முற்றிலும் வேறாகவும் இருப்பதுதான் இம்மாதிரியான குழப்பங்களுக்குக் காரணம். தமிழ் மாதிரியான செம்மொழியில் இந்த இரட்டைத் தன்மை தவிர்க்க முடியாதது. எந்த ஒரு மொழிக்கும் எழுத்து நடையைவிட பேச்சு வழக்குதான் இன்றியமையாதது.

எத்தனை சிறப்பான மொழி என்றாலும் மக்கள் அதைப் பேசினால்தான் அது உயிர்ப்புள்ள மொழி. பேசப்படாததாலேயே சமஸ்கிருதம் கிட்டத்தட்ட இறந்த மொழியாகக் கருதப்படுகிறது. பேச்சு மொழி வளர்க்கப்பட்டால்தான் அந்த மொழியே வளரும்; வாழும். எனவே தான் தமிழின் பேச்சு மொழிக்கு அணுக்கமாக இலக்கியத்தைக் கொண்டு வர பல படைப்பாளிகள் பாடுபட்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் தமிழ் நாவல்களிலும் சிறுகதைகளிலும் வரும் கதாபாத்திரங்கள் கூட எழுத்து மொழியில்... அதாவது செந்தமிழில் பேசுவார்கள். மெல்ல மெல்ல அந்தக் கட்டுக்கள் உடைக்கப்பட்டன. கதை மாந்தர்களின் வட்டார வழக்குகள் அப்படியே பதிவு செய்யப்பட்டன. கதை ஆசிரியரின் கூற்றாக வரும் விவரணை கூட செந்தமிழில் இல்லாமல் பேச்சு வழக்கில் இருக்கும்படியான கதை சொல்லல்கள் பெருகின. நவீன கவிதையைக் கூட பேச்சு மொழிக்கு அணுக்கமாகக் கொண்டு வர வேண்டும். இன்றுவரை அது பெரிய சவால்தான்.

அதை சாதிக்கத்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். மக்களின் இயல்பான பேச்சு வழக்கு, வட்டார வழக்கு, கொச்சை வழக்கு இவை மூன்றும் சேர்ந்ததுதான் பேச்சு மொழி. இதில் கொச்சை வழக்கு என்பதில் நாம் கெட்ட வார்த்தைகள் எனக் குறிப்பிடும் சில வார்த்தைகளும் சேரும். அவற்றையும் உள்ளடக்கியதுதான் பேச்சு மொழி.

தமிழின் நவீன இலக்கியங்களை வாசித்தவர்கள் எவரும் இதை உணர்ந்திருக்க முடியும். கி.ராஜநாராயணன் ‘நாட்டுப்புற பாலியல் கதைகளை’த் தொகுத்து எழுதினார். அகராதி போட்டார். அவற்றில் வராததா? பெருமாள் முருகன் ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ எனப் புத்தகமே எழுதியிருக்கிறார். எழுத்தில் வரலாம் என்றால் பாட்டில் வரக் கூடாதா?’’ எனக் கேள்வி எழுப்புகிற முத்துக்குமாரசாமி, ‘சினிமா பெரிய மீடியா... அதில் இது போன்ற வார்த்தைகள் வரக் கூடாது’ என்ற வாதத்தையும் மறுக்கிறார்.

‘‘மீடியாவில் என்ன பெரிய மீடியா, சின்ன மீடியா? மக்களுக்கான படைப்பு ஒன்றில் வரலாம் என்றால் எல்லா படைப்பிலும் வரலாம்தானே? ‘உங்கள் மகனோ, மகளோ இது மாதிரியான பாடல்களைக் கேட்டு, அந்த வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள மாட்டார்களா?’ என்று சில பேர் கேட்டார்கள்.

நான் திருப்பிக் கேட்டேன், ‘நம் பிள்ளைகள் இந்த வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியுமா?’ என்று. நாம் எல்லோருமே குழந்தையாக இருந்தவர்கள்தானே. ஏதோ ஓரிடத்தில் பார்த்து, கேட்டு... நல்லது, கெட்டது என எல்லா வார்த்தைகளையும் கற்றுக்கொள்கிறோம்தானே!

நாட்டுப்புறக் கலைகளில் இதெல்லாம் மிக இயல்பானவை. கட்டியங்காரன் கூற்றில் வராத கெட்ட வார்த்தைகளா? பாலுறவைக் குறிப்பிடும் வார்த்தைகளும் மறைவுறுப்பு களைக் குறிப்பிடும் வார்த்தைகளும் கட்டியங்காரன் கூற்றில் சகஜமாகப் புழங்கும்.

தெருக்கூத்து வடிவத்தில் நகைச்சுவைக்காக பல வசவுச்சொற்களும் கூட இடம்பெறும். பெண்களும் குழந்தைகளும் அதைக் கேட்பார்கள். சிரித்துக்கொண்டுதான் இருப்பார்கள். அதெல்லாம் தவறா? நாட்டுப்புறக் கலைகளுக்கு இலக்கிய அந்தஸ்து தர வேண்டிய நாம், ஒரு கெட்ட வார்த்தைப் பயன்பாட்டுக்காக போலீஸ் புகார், வழக்கு, கைது நடவடிக்கை வரை போவது சரியா?

கொடுநல்லூர் பகவதி அம்மன் கோயிலுக்கு சபரிமலை போல மக்கள் குழுவாகப் பயணித்துப் போவதுண்டு. அப்போது பாடப்படும் பாடல்களில் ஒன்று... ‘கொடுநல்லூர் அம்மையை பண்ணெங்கில் கொடிமரம் போலொரு குன்னை வேணும்’ என்று வரும். இதில் குன்னை என்றால் ஆண் பிறப்புறுப்பு என்று பொருள். கடவுள்தான், பக்திதான், வழிபாடுதான்... ஆனால் அந்த வழிபாட்டின் மரபு இப்படித்தான் இருக்கிறது. அதற்கு என்ன செய்ய முடியும்? இதையெல்லாம் தவறு என்று கொதிக்க முடியுமா?

எந்த ஒரு மொழியிலும் கெட்ட வார்த்தை என்பதும் வசவு வார்த்தை என்பதும் இயல்பானவை. மனித வாழ்வில் பாலுறவு தவிர்க்கவே முடியாத அம்சம். ஆனால், எந்தச் சமூகமும் மறைவான, தனிப்பட்ட, அந்தரங்க அம்சமாக அதைப் பார்க்கும். இந்தப் பார்வைதான் கெட்ட வார்த்தைகளின் அடிப்படை.

பாலுறவை மறைவானதாகப் பார்க்காத சமூகத்தில் எந்த வார்த்தையும் கெட்ட வார்த்தையாக இருக்காது. ஆனால், எவ்வளவுக்கு எவ்வளவு மறைவானதாக இருக்கிறதோ அதே அளவுக்கு வசவுச் சொல்லாகவேனும் பாலியல் இங்கே வெளிப்படையாகப் பேசப்பட்டுவிடுகிறது. மனிதன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தத்தானே மொழி? மகிழ்ச்சி, அன்பு, பாசம் மட்டும்தான் உணர்ச்சிகளா என்ன? கோபம், காமம், குரூரம் போன்றவையும் உணர்ச்சிகள்தானே? அவற்றை அவன் வேறு எப்படி வெளிப்படுத்துவான்?

பீப் பாடலில் பெண்களைப் புண்படுத்துவது போல கருத்துக்கள் இருப்பதாக பெண்கள் நினைத்தால் அது வேறு கதை. ஆனால், கெட்ட வார்த்தை என்ற காரணத்துக்காக ஒரு பாடலை இத்தனை தூரம் நாம் விரட்ட வேண்டியதில்லை. காலம் காலமாக நம் சமூகத்தின் ஒரு ஓரத்தில் இதெல்லாம் இருந்துகொண்டு தான் இருக்கிறது.

 இவற்றை எல்லாம் உள்ளடக்கியதுதான் சமூகம். அவற்றை ஓரமாகவே இருக்கட்டும் என விட்டுவிட்டு தங்கள் வேலையைப் பார்ப்பவர்கள்தான் மக்கள்!’’ - தீர்மானமாக முடிக்கிறார் எம்.டி.எம்.நம் பிள்ளைகள் இந்த வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியுமா?

- கோகுலவாச நவநீதன்