இந்திய உயர்கல்விக்கு முடிவு கட்டுமா GATS ஒப்பந்தம்?



‘வரும்... வரும்...’ என்று அச்சுறுத்திய ஆபத்து வந்தேவிட்டது. உலக வர்த்தக அமைப்பின் நெருக்கடிக்குப் பணிந்து GATS (General Agreement on Trade in Services) ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிலைக்கு வந்துவிட்டது இந்தியா. கடந்த டிசம்பரில் கென்யாவில் நடந்த உலக வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் அதற்கான முன்னெடுப்புகள் இறுதி நிலையை எட்டிவிட்டன. 

‘‘GATS ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால்,  இந்தியாவின் உயர்கல்வித் துறை மொத்தமாக விலை போய்விடும். தனியார் பள்ளிகள் தலையெடுத்து அரசுப்பள்ளிகளை அழித்தது போல, வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் கடை விரித்து இந்திய உயர்கல்வி நிறுவனங்களை அழித்துவிடும்’’ என்று அஞ்சுகிறார்கள் கல்வியாளர்கள். அதென்ன GATS ஒப்பந்தம்?இந்த விபரீதத்தைப் புரிந்து கொள்ள கொஞ்சம் சரித்திரத்தைப் புரட்ட வேண்டும்.

1929-31 காலகட்டத்தில், சோவியத் யூனியன் உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகளில் பொருளாதாரம் படுத்துவிட்டது. அதை ‘கிரேட் எகனாமிக்கல் டிப்ரெஷன்’ என்று வர்ணிக்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். தங்கள் பொருளாதாரத்தை மீட்க அந்நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கின. அவற்றில் ஒன்று, இறக்குமதி வரி அதிகரிப்பு. அதனால் வெளிநாட்டுப் பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்டு, உள்நாட்டு உற்பத்திக்கு உரிய விலை கிடைத்தது.

அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் இந்தச் சூழலால் நிலைகுலைந்து விட்டன. இதை மாற்றி, உலகெங்கும் தடையில்லா வாணிபத்தை ஆட்கொள்வதற்காக GATT (General Agreement on Tariffs and Trade) என்ற ஒப்பந்தத்தை முன்வைத்தன. இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் நாடுகள், தங்கள் உற்பத்திகளை வரியே செலுத்தாமல் பிற நாடுகளில் விற்பனை செய்யலாம். முடிதிருத்துதல் முதல் கல்வி, மருத்துவம் வரை அனைத்தையும் வணிகமாகப் பட்டியலிட்டது இந்த ஒப்பந்தம். உதாரணத்துக்குச் சொன்னால், ஆசிரியர் என்பவர் சேவை வழங்குபவர்; மாணவர் நுகர்வோர். இருவருக்கும் இருப்பது வணிகரீதியிலான உறவு. இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும்.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை வளைக்க உலக வங்கி, சர்வதேச நிதி இணையம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ‘வளர்ச்சித் திட்டங்களுக்குக் கடன்’ என்ற தூண்டில் வீசப்பட்டது. இதில் சிக்கி, ஒவ்வொரு நாடாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தொடங்கின. பல நாடுகள் ஏற்றுக்கொண்ட நிலையில், இதை நிறுவனமயமாக்க  முடிவு செய்தார்கள். 1995ல் WTO (உலக வர்த்தக அமைப்பு) உருவானது. உலகளாவிய வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக இது வளர்ந்தது. இந்தியா உலக வங்கி யின் பிரதான கடன்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்ததால், வேறு வழியில்லாமல் WTOவில் இணைந்தது.

அரசை சேவைத்துறைகளில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, உலக வணிகத்தை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் WTOவின் அடுத்த அஸ்திரம் தான் GATS  ஒப்பந்தம். ‘‘இந்த ஒப்பந்தம் இன்னும் கொடூரமானது. கல்வி, விவசாயம் உள்பட தேசத்தின் வேரையே அழிக்க வல்லது’’ என்கிறார் ‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ அமைப்பின் நிறுவனர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

‘‘இந்த ஒப்பந்தம், இந்தியாவில் சர்வதேசக் கல்வி நிறுவனங்களை அனுமதிக்க வகை செய்கிறது. அதைக் கடந்தும் பல விபரீதங்கள் இதில் உள்ளன. GATS ஒப்பந்தப்படி, அரசு தன் சேவைக்காக ஒரு ரூபாய் கட்டணம் வாங்கினாலும் அது வணிகம் சார்ந்த பரிவர்த்தனையாகி விடும்.  உதாரணத்துக்கு, அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பத்தை 50 ரூபாய்க்கு விற்றால், அது வணிக நிறுவனம். ஜவஹர்லால் நேரு தேசிய பல்கலைக்கழகம் முதல் மாநில அரசு நடத்தும் சென்னை பல்கலைக்கழகம் வரை எல்லாவற்றிலும் சுயநிதி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஒப்பந்தப்படி பார்த்தால் அரசுப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் சேவை வழங்கும் வணிக நிறுவனங்கள்தான். இதுமாதிரி நிறுவனங்களுக்கு அரசு எந்த சலுகையும் அளிக்கக்கூடாது. அப்படி அளித்தால், அதே சலுகைகளை வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் தரவேண்டும். இதை ‘லெவல் பிளேயிங் ஃபீல்டு’ என்று குறிப்பிடுகிறார்கள்.

கட்டணம், தரம், கண்காணிப்பு எதுவுமே அரசின் கையில் இருக்காது. இந்த ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு வரும் கல்வி நிறுவனங்கள் நம் சட்டத்திற்கு கட்டுப்படாது. அவர்களுக்கு ஏற்றவாறு சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். நன்கொடை தடுப்புச்சட்டம், உயர்கல்வி கட்டுப்பாட்டுச் சட்டம், பல்கலைக்கழக மானியக்குழு, ஏ.ஐ.சி.டி.இ. உள்பட கல்வி சார்ந்த அனைத்து அமைப்புகளையும் கலைக்க நேரிடும். ஓரமைப்பின் கீழ் உயர்கல்வி கொண்டு வரப்படும். அந்த அமைப்பையும் WTO சட்டமே கட்டுப்படுத்தும். சர்வதேச அளவிலான நடுவர் மன்றத்திடம்தான் வழக்குகளை தாக்கல் செய்ய நேரிடும். அந்த நிறுவனத்தின் தகவல் குறிப்பேட்டில் என்ன எழுதியிருக்கிறதோ அதுதான் தீர்ப்பு.

ஒட்டுமொத்தமாக இந்திய உயர்கல்வி சூழலே கெட்டுப்போகும். உதவித்தொகைகள், ஃபெல்லோஷிப்கள், கல்விக்கட்டண சலுகை எதுவும் கிடைக்காது. பழங்காலத்தைப் போல பெரும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளுக்கே உயர்கல்வி கிடைக்கும். மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் உறுதியாக இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, பல கல்வி உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள், கல்வியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலும் அப்படியான தொடர் போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம்’’ என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

இப்படி வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் வருவதால் இந்திய உள்நாட்டுக் கல்வி பாதிக்கப்படுமா? வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர் னிவாஸ் சம்பந்தனிடம் கேட்டோம். ‘‘வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்தால் போட்டி அதிகமாகும். அதனால் தரம் மேம்படும். மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகும். வெளிநாட்டில் படிக்க பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

அந்த நிறுவனங்கள் இங்கே வந்துவிட்டால் அந்த செலவு குறையும். ஆனால், நம் நாட்டில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் சேவை மனப்பான்மையோடு செயல்படுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே சேவை செய்ய வரப்போவதில்லை. லாபம் பார்ப்பதையே குறிக்கோளாக வைத்திருப்பார்கள். அதனால் இங்குள்ள கல்விச்சூழல் பாதிக்கப்படும். உள்நாட்டு நிறுவனங்களை மாணவர்கள் புறக்கணிப்பார்கள்.

இங்கிருந்து வெளிநாட்டுக்கு படிக்கச் செல்லும் 99% பேர், படிக்கும் நாட்டிலேயே வேலை தேடி செட்டில் ஆகும் நோக்கத்தோடுதான் செல்கிறார்கள். இங்கே வருகிற வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் படிப்பதால் அதுமாதிரி வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. படித்துவிட்டு இங்கேதான் வேலை தேட வேண்டியிருக்கும். ஏற்கனவே இங்கே வேலைவாய்ப்பில் பிரச்னைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் தீர ஆலோசித்தே இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்...’’ என்கிறார் அவர்.

லாபம்!

* போட்டி அதிகமாகும். உள்நாட்டு கல்வி நிறுவனங்கள் தரத்தை மேம்படுத்த வேண்டியிருக்கும். அதனால் கல்வித்தரம் கூடும். வாய்ப்புகள் அதிகமாகும்.

*  ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்கிறார்கள். கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே வருவதால் அந்த செலவு குறையும்.

நஷ்டம்!

* மண்சார்ந்த பாரம்பரியத் தொழில்நுட்பங்கள், உள்ளூர் வரலாறு, பண்பாடு, தனித்தன்மைகளுக்கு பாடத்திட்டத்தில் இடம் இருக்காது.

* கல்வி சார்ந்த அத்தனை சட்டங்களும் சர்வதேச நிறுவனங்களின் பாதுகாப்புக்கு ஏற்றவாறு மாற்றப்படும். யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., இந்திய மருத்துவக் கவுன்சில் அனைத்தும் அதிகாரம் இழக்கும். ஹையர் எஜுகேஷன் கவுன்சில் என்ற ஒரே அமைப்பின் கீழ் உயர்கல்வி கொண்டு வரப்படும்.

* கல்விக்கட்டணம் உயரும். ஏழைகளுக்கு உயர்கல்வி வாய்க்காது.

* உயர்கல்வி நிறுவனம் சார்ந்த வழக்குகளை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது. டிரேட் டிஸ்ப்யூட் கவுன்சில் என்ற உலக வர்த்தக அமைப்பின் நடுவர் மன்றமே அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும்.

* அரசு நிறுவனங்களில் கூட இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது. சர்வதேச விதிப்படியே மாணவர் சேர்க்கை நடக்கும்.

* கல்வி நிறுவனங்களுக்கு மானியம் தரப்படாது. அரசு பல்கலைக்கழகங்கள் செயலிழந்து போகும். மாணவர்களுக்கு உதவித்தொகை, ஃபெல்லோஷிப், கிராண்ட்ஸ் எதுவும் வழங்க முடியாது.

* அரசுப் பள்ளிகளைப் போல அரசு உயர் கல்வி நிறுவனங்களும் காலப்போக்கில் தேய்ந்து போகும்.

- வெ.நீலகண்டன்