காமெடி பொங்கல் கலகல




ஆழம் தெரியாத குளத்துல!

‘‘உங்க வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த மறக்க முடியாத பொங்கல் கொண்டாட்டம் எது? இந்த பொங்கலில் என்ன ப்ளான்?’’ இதுதான் எல்லோருக்கும் நாம் கொடுத்த காமன் கொஸ்டின் பேப்பர். நம்ம காமெடி கட்சிப் பிரமுகர்கள் நீட்டிய ஆன்ஸர் பேப்பர்ஸ் இதோ...

* சாம்ஸ் உறியடி பொங்கல்

‘‘அப்போ நாங்க திருச்சியில இருந்தோம். நான் ஸ்கூல் படிச்சிட்டிருந்தேன். திருச்சி பைபாஸ் ரோட்டில் லாரி லாரியா கரும்பு லோடு போகும். ஒரு பொங்கல் அன்னிக்கு எனக்கும் என் ஃப்ரெண்ட்ஸ்களுக்கும் கரும்பு சாப்பிடணும்னு ஆசை வந்திடுச்சி. லாரியில போற கரும்பை சேஸ் பண்ணி லபக்கிடலாம்னு ப்ளான். ஆளுக்கொரு சைக்கிளை எடுத்துட்டு லாரியை ஃபாலோ பண்ணினோம். முயற்சி வீண் போகல. ஒரு லாரியில இருந்து நாலஞ்சு கரும்பை உருவிட்டோம். செம குஷியாகி ஆசை ஆசையா ஆளுக்கு ஒரு கரும்பை எடுத்து கடிச்சா, கடிக்கவே முடியல. மூங்கில் குச்சி மாதிரி இருந்துச்சு. ‘தம்பி, அது சர்க்கரை ஆலைக்குப் போகக் கூடிய கரும்பு.

 பொங்கல் கரும்பு இல்ல’னு சொல்லிட்டுப் போனார் ஒருத்தர்.  அந்தக் கரும்பைக் கடிக்க முயற்சி பண்ணி முயற்சி பண்ணி, ‘இனி கரும்பு பக்கமே தலை வைக்கக் கூடாது’னு வீடு திரும்பினது மறக்க முடியாதது. இன்னொரு சம்பவம்... எங்க அபார்ட்மென்ட் பொங்கல் விழாவில் உறி அடிக்கும் போட்டியில நான் பெயர் குடுத்திருந்தேன்.

ஆனா, மொத ஆளா முந்திக்கிட்டு போகல. உறி அடிக்க வரும் ஒவ்வொருத்தரையும் சுத்தி விடும்போது, அவங்க எத்தனை சுத்து சுத்துறாங்க, எப்படி திரும்பினா எந்த ஆங்கிள்ல இருப்போம்னு மனசுக்குள்ள கணக்கு போட்டுக்கிட்டே இருந்தேன். கடைசி ஆளா கலந்துகிட்டு உறியைத் தட்டிடலாம்னு திட்டம். ஆனா, எனக்கு முன்னாடி ஒருத்தர் உறி அடிக்க வந்தார். கரெக்டா ஒரே அடியில உறியை அடிச்சு ஜெயிச்சிட்டார். ‘அடப்பாவி, என்னை மாதிரியே ஒருத்தன் கணக்குப் போட்டு ஜெயிச்சிட்டானே... வடை போச்சே’னு ஃபீல் ஆனேன் பாருங்க..!’’

* வித்யுலேகா வெண் பொங்கல்

‘‘ரெண்டு, மூணு வருஷத்துக்கு முன்பு, ஒரு பொங்கல் அப்போ சர்க்கரை சேர்த்து செய்யிற ஸ்வீட் பொங்கல் எப்படி பண்றதுனு வீட்ல அம்மா எனக்குக் கத்துக்கொடுத்திருந்தாங்க. நானும் அவங்க சொன்ன செய்முறைப்படி ஈஸியா பண்ணிட்டேன். போன வருஷம் பொங்கல் அப்போ, ‘இன்னிக்கு நீயே பொங்கல் பண்ணிடு’னு சொல்லிட்டாங்க.

இது என்ன பிரமாதம்னு களத்துல இறங்கி கரண்டியைப் பிடிச்சிட்டேன். அன்னிக்கு சன் டி.வியின் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் போக வேண்டிய அவசரத்துல இருந்தேன். அதனால சுகர் போடுறதுக்கு பதிலா பொங்கல்ல உப்பை அள்ளிக் கொட்டிட்டேன். பொங்கல் ரெடினு சொன்னதும்.

வீட்ல எல்லாரும் ஹேப்பியா, கேட்டு வாங்கினாங்க... அப்புறம்தான் தெரிஞ்சது. அது ஸ்வீட் பொங்கல் இல்ல. உப்புப்பொங்கல்னு. ஒருவழியா அதை ஆல்டர் பண்ணி எப்படியோ வெண் பொங்கல் ஆக்கிட்டோம்! ஆனா, இந்த வருஷம் அந்தத் தப்பு நடக்காது. கவனமா ரெடி பண்ணிடுவேன். இந்த வருஷம் கன்னடத்துல முதல் படம் கமிட் ஆகியிருக்கேன். நான் நடிச்ச,  ‘சுந்தரபாண்டியன்’ தெலுங்கு ரீமேக் பொங்கல் டைம்ல ரிலீஸ்னு சொன்னாங்க... ஹேப்பியா இருக்கு!’’

* தம்பி ராமையா திகில் பொங்கல்

‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் எங்க கிராமம் இருக்கு. அப்போ எட்டாம் வகுப்பு படிச்சிட்டிருக்கேன். நீச்சல்ல நான் சூரப்புலி. ஆழமான கிணத்துலயும் குதிச்சு, மல்லாக்க நீச்சல் அடிக்கிறதுல வில்லாதி வில்லன். பொண்ணுங்க கூட்டம் கிணத்துப் பக்கம் இருந்தா, கெத்தைக் காட்ட பட்டுனு குதிச்சிடுவேன். கிணறு எவ்வளவு ஆழம்னாலும், அப்படியே மூழ்கி நீச்சல்ல ஆழத்துக்குப் போயி கையில மண்ணு அள்ளிட்டு வந்துடுவேன்.
ஒரு பொங்கல் லீவுக்கு திருவாரூர்ல எங்க பெரியம்மா வீட்டுக்குப் போனேன்.

பொங்கல் அன்னிக்கு வயிறு நிறைய பொங்கச்சோறு, கரும்பு, நுங்குனு ஒரு கட்டு கட்டிக்கிட்டு அது செரிக்கறதுக்காக குளிக்கலாம்னு தோணுச்சு. கமலாலயம் குளத்துல குளிக்கப் போனோம். குளத்தைச் சுத்தி நிறைய பொண்ணுங்க. ‘குளத்துல மூழ்கி மணல் எடுத்துட்டு வர்றேன் பார்’னு சத்தமா சீனைப் போட்டுட்டு தண்ணியில குதிச்சிட்டேன். எங்க ஊரு கிணறு மாதிரி கொஞ்சம்தான் ஆழம் இருக்கும்னு நினைச்சி இறங்கிட்டேன். உள்ளே போகப் போகத்தான் தெரியுது...

அது பத்து ஆள், பதினைஞ்சு ஆள் மட்டத்துக்கு ஆழம் இருக்கும் போல. தரையில என் கால்பட்டா, ஒரு ஜம்ப் பண்ணி மறுபடி மேல திரும்ப வசதியா இருக்கும். ஆனா, தரை வரவே மாட்டேங்குது. தரைக்கு இன்னும் எவ்வளவு தூரம் போகணும்னு ஆழம் தெரியல. மேலே கரைக்கு திரும்பலாம்னா கூட மறுபடி இப்போ வந்த அதே தூரம் நீந்தி ஆகணும். திகில் உதறலோடு, மூச்சுப் புடிச்சி நீச்சலடிச்சு மேல வந்தேன். அந்த திகில் பொங்கலை இன்னும் மறக்க முடியலை தம்பி!’’

* சத்யன் மாட்டுப் பொங்கல்

‘‘போன பொங்கலுக்கு ‘புலி’ ஷூட்டிங்ல இருந்தேன். ஆந்திரா பக்கம் தலக்கோணம்னு ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஷூட்டிங். அன்னிக்கு பொங்கல்னு கூட தெரியாம நடிச்சிட்டிருந்தோம். மறுநாள் மாட்டுப் பொங்கலுக்குக் கூட நாங்களே மாடுங்க மாதிரிதான் திரிஞ்சுகிட்டிருந்தோம் ப்ரோ. அந்த காட்டுக்குள்ள மொபைல் சிக்னல் சுத்தமா கிடைக்காது.

பொங்கலுக்கு மறு நாள் சாயங்காலம் ஷூட்டிங் முடிஞ்சு, ரூமுக்கு திரும்பிட்டிருந்தோம். அந்த காட்டுக்குள்ள இருந்து ஒரு அரை மணி நேரம் நடந்த பிறகுதான் மெயின் ரோட்டுக்கே வரமுடியும். காட்டுக்குள்ள நடக்கும்போது, எதிரே வந்த மாடுகளுக்கு எல்லாம் கலர் பெயின்ட் அடிச்சிருந்தாங்க. மாடுங்கன்னா.. அது நம்ம ஊரு மாதிரி இல்ல, கன்னுக்குட்டி சைஸுக்குதான் இருந்துச்சு. ‘இன்னிக்கு மாட்டுப் பொங்கல்’னு எங்களுக்கே அப்போதான் தெரிஞ்சது. நாங்க கொண்டாடாமல் விட்ட பொங்கல் அது. இந்த பொங்கலுக்கு விக்ரம்பிரபுவோட ‘வாஹா’ ஷூட்டிங்கில் இருப்பேன்னு நினைக்கறேன் ப்ரோ!’’

*ராஜேந்திரன் ஃபீலிங் பொங்கல்

‘‘சார்...  சினிமாவில் நான் ஃபைட்டரா 38 வருஷமா இருக்கேன். இந்த ஒரு சில  வருஷங்களாகத்தான் என்னையும் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா நினைச்சு ஜனங்க  கொண்டாடுறாங்க. மறக்க முடியாத அளவுக்கு என் வாழ்க்கையில எந்தப் பொங்கலையும்  நான் கொண்டாடினதில்லை சார். இந்த வருஷம் எங்க வீட்டுல குடும்பத்தோட  பொங்கல் கொண்டாடப் போறேன். என் உலகம் ரொம்பவே சின்னது!’’

* ‘யோகி’ பாபு தெறி பொங்கல்

‘‘நான்  சென்னையிலயே பொறந்து வளர்ந்தவன் சார். ஒவ்வொரு வருஷப் பிறப்புக்கும்  திருத்தணி முருகன் கோயிலுக்கு தரிசனம் பண்ண போயிடுவேன். அதுவே, எனக்குப்  பொங்கல் கொண்டாடின சந்தோஷம்தான். கிராமத்துல இருந்து சென்னை வந்து செட்டில்  ஆனவங்க மாதிரி பொங்கல் பத்தி சொல்றதுக்கு என்கிட்ட அவ்வளவு அனுபவங்கள்  இல்லைங்க சார்.

போன வருஷம் ‘வேதாளம்’ல நடிச்சிருந்தேன். அஜித் சார்  காம்பினேஷன்ல 8 நாள் அவரோட கொல்கத்தாவில் இருந்தேன். இந்த வருஷம் விஜய்  சாரோட ‘தெறி’யில நடிச்சிருக்கேன். ஒரு சீன்ல விஜய் சார் காம்பினேஷன்ல  இருக்கேன். அஜித் சார், விஜய் சார்னு இப்போதான் என் கேரியர் டெவலப் ஆகுது.  அடுத்த வருஷம் ஏகப்பட்ட அனுபவங்களோட பொங்கல் கொண்டாடுவேன் தலைவா!’’

- மை.பாரதிராஜா